Monday, February 7, 2011

golden period of gold coins: andre' sonnaargal 20: அன்றே சொன்னார்கள் 20: பொற்காசுகளால் பொலிந்த தமிழகம்





++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
பொற்காசுகளால் பொலிந்த தமிழகம்

                                                                                                                

natpu
நாணயங்கள்  பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் - உலோகங்களால் - காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க  வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு உணர்த்துகின்றன.

உகாஅய்க் கனியைப் போன்று, நெல்லிக்கனியைப் போன்று, வேப்பங்கனியைப் போன்று, நடுவில் துளையுடன் வட்ட வடிவில் எனப் பலவகையில் பொற்காசுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.
புலவர் நக்கீரர், பொற்காசுகள் பலவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட மேகலை குறித்து,
            பல்காசு நிரைத்த சில்கால்                         (திருமுருகாற்றுப்படை :16)
எனக் குறிப்பிடுகின்றார்.

காவன்முல்லைப் பூதனார் என்னும் புலவர், வேனிற் காலத்தில், உகாஅய் மரக்கிளையினின்றும் அதன் கனிகள் கீழே உதிர்ந்து விழுவன  பொற்காசுகள் போல இருப்பதாக
            மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
        உகாஅய் மென்சினை உதிர்வன கழியும்                   (அகநானூறு : 293 : 7:8)
எனக் குறிப்பிடுகின்றார்.

குடவாயில் கீரத்தனார்  என்னும் புலவர்,
மேற்கில் இருந்து வீசும் கோடைக்காற்றால், நெல்லிக்காய்கள் உதிர்ந்து கீழே விழுவன, நூல் அறுந்து கீழே விழுந்த துளையுடைய பளிங்கு காசுகள்போல் இருப்பதாகப்,
       புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்
     கோடை உதிர்த்த குவிகண் பசுங்காய்
     அறுநூல் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
     வறுநிலத்து உதிரும் அத்தம்                        (அகநானூறு : 315 : 10-13)
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

அள்ளூர் நன்முல்லை என்னும் புலவர், கிளியின் வளைந்தவாயில் உள்ள வேப்பம் பழம் பொற்கொல்லன்  கூரிய கைந்நகத்தில் உள்ள பொன்காசு போல் காட்சியளிப்பதாகக்
கிள்ளை                                     
      வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
     புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
     பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்                 (குறுந்தொகை : 67 : 1-4)
என்னும் பாடலில் தெரிவிக்கின்றார்.

கொன்றை அரும்புகள், செல்வச் சிறுவர்களின் காலில் கட்டப்பட்ட தவளைவாய் போன்ற பொற்காசுகள் போல் உள்ளன என்பதை   இளங்கீரந்தையார் என்னும் புலவர்,
செல்வச் சிறாஅர் சீறடிப்பொலிந்த
தவளை வாஅய பொலம்செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதுஈன் கொன்றை            (குறுந்தொகை : 148: 1-3)
எனத் தெரிவிக்கின்றார்.

மான் உராய்வதால் குமிழ் மரங்களில் உள்ள பழங்கள்  உதிர்ந்து கீழே பரவிக்கிடப்பது,
பெண் ஒருத்திப் பொற்காசுகளைக் கீழே பரப்பி வைத்துள்ளமை போல் உள்ளதாகக் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவர்,
      உழைபடு மான்பிணை தீண்டலின் இழைமகள்
     பொன்செய் காசின் ஒண்பழம் தாஅம்
     குமிழ்தலை மயங்கிய குறும்பல் அத்தம்                       (நற்றிணை 274 : 3-5)
எனக்கூறுகிறார்.

மருதன் இளநாகனார் என்னும் புலவர் கைத்தொழிலால் பொலிவு பெற்ற பொற்காசுகள் இடைஇடையே வைத்துக் கோக்கப்பட்ட பொன்மணிகளை உடைய மேகலை பற்றி,
     கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ் மேல்
     மையில் செந்துகிர்க் கோவை                                       (கலித்தொகை :85: 3-4)
எனக் குறிப்பிடுகிறார்.

உருத்திரன் என்னும் மற்றொரு புலவர்,
புறாவின் முதுகு போன்ற அடியுடைய கொன்றை மரத்தின் பழங்கள் பொற்காசுகள் போல் இருக்கும் என்பதைப்
     புறவுப்புறத் தன்ன புன்கால் உகாஅத்து
     காசினை அன்ன நளிகனி உதிர                             (குறுந்தொகை : 274 : 1-2)
எனக் குறிப்பிடுகின்றார்.

பொற்காசுகள் குவிந்து கிடந்த தமிழ்நாட்டவர் வெற்றுக் குவளைகளை கையில் ஏந்தும் நிலை வந்தது ஏன் எனச் சிந்தித்தால் விடிவு பிறக்கும் அல்லவா?

 
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

No comments:

Post a Comment

Followers

Blog Archive