Monday, February 21, 2011

Save letters: andre' sonnaargal 30: அன்றே சொன்னார்கள்30 எழுத்தைக் காப்போம்!

>>அன்றே சொன்னார்கள்30


எழுத்தைக் காப்போம்!

                                                                                                                

உலகம் பார்வைகள் இணைக்கப்பட்ட பட்டை. ஒவ்வொரு மொழியும் மறையும் பொழுது அதற்குரிய பார்வைப் பகுதியை இழந்து விடுகிறது என்கிறார் பிரான்கோயிசு (François Grosjean 1946, மேனாள் இயக்குநர், மொழி-பேச்சு ஆய்வகம், சுவிட்சர்லாந்து) மொழியைக் கண்ணாகக் கருதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்த கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு              ( திருக்குறள் 392)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இதனையே ஔவையார்  எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் (கொன்றை வேந்தன் 7) என்கிறார்.
natpu பொதுவாக இவற்றிற்கு விளக்கம் தரும் அறிஞர்கள் எண்ணை அறிவியலாகவும  எழுத்தைக் கலையியலாகவும் கருதி விளக்கம் தருகின்றனர். இவை இரண்டையே கண்களாகக் கூறுவதாக எழுதிவருகின்றனர்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் என அடுத்த குறளிலேயே (திருக்குறள் 393) கூறும் தெய்வப்புலவர் அதற்கு முந்தைய குறளில் தனியாகக் கல்வியை அறிவியல் கல்வி என்றும் கலைக்கல்வி என்றும் பிரித்துக் கூறத் தேவையில்லை.
கல்விக்கு அடிப்படையாய் அமைவன எண்ணும் எழுத்துமாய குறியீடுகள் என்பதை உணர்த்தவே எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கூறுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இதனை நன்குணர்ந்த நம் முன்னோர் எண் எழுத்து உருக்களைப் பேணி வந்துள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்சிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்து வருவதை உணரலாம். எனவேதான்
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்
என்கிறது நன்னூல் . அதனை அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. 
காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான்
எண்ணெழுத்து இகழேல் (ஆத்திச்சூடி 7)
natpu என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார்.
எண், எழுத்து வடிவங்களில் சிதைவு உண்டானால் அவை வெளிப்படுத்தும் அறிவு வளத்திலும் சிதைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே இவற்றை நம் முன்னோர் போற்றி உள்ளனர். மொழி வழித் தேசிய இனம் அழியாமல் இருக்க மொழி அழியாமல் காக்கப்படவேண்டும்; மொழி காக்கப்பட அதன் இலக்கியங்கள் பேணப்பட வேண்டும்; இலக்கியங்கள் போற்றப்பட மொழியின் எண்ணும் எழுத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இஃது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
இந்திய அரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1))   இதை உணர்ந்தே எழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் தேவநாகரியையும் கிரந்தத்தையும் புகுத்திப் பிற தேசிய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உலகத் தாய்மொழி நாளில்
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே!
என்னும் பாவேந்தர் பாரதிதாசன் முழக்கங்களைக் கூறி 
நம் தமிழ் மொழியின் எண்ணையும் எழுத்தையும் காக்க உறுதி கொள்வோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments

No comments:

Post a Comment

Followers

Blog Archive