Saturday, February 5, 2011

swimming dress: andre' sonnaargal 19: அன்றே சொன்னார்கள் 19: நீச்சல் நாகரிகம் உணர்த்தும் உடையியல்

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
நீச்சல் நாகரிகம் உணர்த்தும் உடையியல்

                                                                                                                

natpu நாகரிக உலகிற்கேற்ற உடைகள் யாவும் 17ஆம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டன. நீச்சல் உடைகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டன. இன்றைக்கு வெவ்வேறு வகையான நீச்சல் உடைகள் இருப்பினும் ஈரணி உடைகள் (two piece dresses) என்பனவே அடிப்படையாகும்.
நாகரிக உலகில் தலசிறந்திருந்த தமிழ் மக்கள் நீச்சல் துறையிலும் உயர்ந்தோங்கி இருந்தனர். பிற வகை ஆடைகள் குறித்தும் குளிப்பதற்கேற்ற மணப் பொடி வகைகள் குறித்தும் பிறிதொரு நாள் பார்க்கலாம். இப்பொழுது நீச்சல் உடைகள் குறித்துப் பார்ப்போம்.
காவிரிப் பெருக்கின் பொழுது நீச்சல் ஆடையான ஈரணி அணிந்து பொலிவு பெற்ற பெண்களைப்பற்றி,

வதுவை ஈரணிப் பொலிந்த நம்மொடு
புதுவது வந்தகாவிரி                                                    (அகநானூறு : 166 : 13-14)
என்கிறார் புலவர் இடையன் நெடுங்கீரனார்.

ஏர்அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிகநவின்று                                           (பரிபாடல் : 6: 27-28)
வையை ஆற்றில் நீராட மகளிரும் மைந்தரும் நீச்சல் உடையை அணிந்து சென்றதாக ஆசிரியன் நல்லந்துவனார் இப் பரிபாடலில் பாடியுள்ளார்.

நீச்சலுடையுடன்  நறுமணப் பூச்சுகளையும் பூத்தொழில் மிக்க ஆடைகளையும் எடுத்துக்கொண்டு வையை ஆற்றிற்கு நீராடச் சென்றதை,
ஈரணிக்கு ஏற்ற
நறவுஅணி பூந் துகில் நன்பல ஏந்தி                                           (பரிபாடல் : 22: 18-19)
எனப் புலவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ,
நீர்பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக்கண்                      (அகநானூறு : 266 : 4-6)
என,  ஈரணி அணிந்து நீராடியதால் மிக அழகினையுடைய குளிர்ந்த கண்களும் நரந்தம் மணக்கின்ற திரண்ட கருங்கூந்தலும் உடைய இளம்பெண் குறித்துப் புலவர் பரணர் தெரிவிக்கிறார்.
நீரணி என்றும் (பரிபாடல் 11) புலவர்கள் கூறியுள்ளமையால் ஈரணி அல்லாத வேறு வகையான குளியல் உடைகளும் இருந்துள்ளன எனத் தெரிய வருகிறது.

கரும்பிள்ளைப் பூதனார் என்னும் புலவர்,
நீர்அணி காண்போர் நிரைமாடம் ஊர்குவோர்                             (பரிபாடல் : 10: 27)
என்று குறிப்பிட்டதற்கு, நிரல்பட்ட நீரணி மாடத்தில் ஏறி மெதுவாகச் சென்றதாக உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

எனவே, இதன் மூலம் ஏறிச் சென்று உயரத்தில் இருந்து குதிப்பதற்குரிய நீரணி மாடம் (Diving platform) இருந்தது தெரிய வருகிறது. நீச்சல் உடையை அணிந்து கொள்ளவும் பின் அங்கிருந்து நீரில் குதிக்கவுமான மாடம் ஆகும் இது.
நீச்சல் 19 ஆம் நூற்றாண்டில் விளையாட்டாக மாறி, நீச்சலுக்கான குதி பலகை (Spring board) 1891 ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது; 1901 இல் ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டது. பின் நீச்சல் மேடைகளும் (Diving platforms) எழுப்பப்பெற்றன. ஆனால், பழந்தமிழகத்தில் நீச்சல், மக்களின் உற்சாக விளையாட்டாக இருந்துள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீச்சலுக்கான நீந்துநர் மேடை இருந்துள்ளது அன்றைய நய நாகரிகத்திற்கும் எடுத்துக்காட்டு அல்லவா?
-  இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive