Thursday, February 3, 2011

Thamizh Science about Saturn: andre' sonnaargal 17: அன்றே சொன்னார்கள் சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்!

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள் சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்!

                                                                                                                

natpu
உரோம் நாட்டினர் சனிக்கோளை வேளாண் கடவுளாகக் (Saturnus) கருதினர். குரோனசு (Cronus) கடவுள் எனக் கிரேக்கர்கள் அழைத்தனர். ஆரியர்கள் சூரியக் கடவுளுக்கும் சாயா என்னும் பெண் கடவுளுக்கும் பிறந்ததாகக் கூறிச் சாயாபுத்திரன் என்கின்றனர். ஆரியக் கதையின்படி எமன் சனிக்கு மூத்தவன். இவ்வாறு ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். என்றாலும் அவையெல்லாம் தொன்மக் கதைகளின் அடிப்படையிலானவையே.
natpu
உரோம் நாட்டினரின் சனிக்கடவுள்
சனிக்குப் பிள்ளைகளால் ஆபத்து என்பதால் தனக்குப் பிறந்த பிள்ளைகளை எல்லாம் பிறந்த உடன் தின்றுவிட்டதாகவும் கதை உள்ளது.       
natpu
பிள்ளையை விழுங்கும் சனியின் படங்கள்
இவ்வாறு பிற நாட்டினர் பகுத்தறிவு அடிப்படையின்றி, அறிவியல் சிந்தனையின்றிச் சனிக்கோள் குறித்துக் கூறியுள்ள காலக்கட்டத்திற்கு முன்பே தமிழர்கள் சனிக் கோளை அதன் அறிவியல் தன்மைகளுக்கேற்பப் பெயரிட்டு அழைத்துள்ளனர். 

கதிர்மகன், நீலன், காரி, முதுமகன், மந்தன், முடவன் எனப் பலப் பெயர்கள் சனிக்கு இருப்பதைப் பிங்கல நிகண்டு (சூத்திரம் 234) தெரிவிக்கிறது. 

சனிக்கோளின் ஒவ்வொரு பெயரையும் ஆராய்ந்தால் இக்கோளின் அறிவியல் உண்மைகளை நன்குணர்ந்தே அப்பெயர்களைக் குறிப்பிட்டனர் எனப் புரிந்து கொள்ளலாம், எனினும் பிற்காலத்தில் ஆரியக் கதைகளால் வந்த பெயர்கள் எல்லாம் பகுத்தறிவிற்கு ஏற்றன அல்ல. 

கருப்பு நிறம் கொண்ட முகிலைக் கார்முகில் என்றும் கருப்பு நிறக் கூந்தலைக் கார்குழல் என்றும் சொல்வதை அறிவோம். கார் என்பது கருப்பு நிறத்தைக் குறிக்கும். கருப்பு நிறமாக உள்ள கோளுக்குக் காரி என்று பெயரிட்டனர். 

மை என்பதற்குக் கருமை எனப் பொருள் (பிங்கல நிகண்டு 3997).சனியும் ஒரு விண்மீனே! கரு நிறமான இவ்விண்மீனை மைம்மீன் என்றும் அழைத்தனர்.

பாரியின் ஆட்சிச் சிறப்பைக் கூறும்பொழுது புலவர் கபிலர்
                      மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
                     தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்                      
(புறநானூறு 117: 1-2)
சிறப்பான ஆட்சி நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சனி கரிய நிறமுடையனாதலின் மைம்மீனென்றார்; அவனுக்குரிய, காரி, கரியவன் முதலிய காரணக்குறியாலும் உணர்க என அறிஞர் உ.வே.சாமிநாத(ஐய)ர் விளக்கியுள்ளார். 

         கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்,
       விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்                  (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)
என்பதனுரையில் அடியார்க்குநல்லார் கரியவன் என்பது சனிக்கோள் என விளக்கியுள்ளார்.

மெதுவாக இயங்குபவனை மந்த புத்திக்காரன் என்று நாம் சொல்லுவோம். மெதுவாக வேலை செய்பவனிடம், ஏன் மந்தமாக இருக்கிறாய்? சுறுசுறுப்பாக வேலை செய் என்போம். மெதுவாகச் சுற்றும் கோள் என்பதால் சனிக்கோளுக்கு மந்தன் எனப் பெயர். 
குளுமையின் அடிப்படையில்  காரிக்கோளைச் சனி என்றும் அழைத்தனர். சனி நீராடு என்றால் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் எனத் தவறாகப் பொருள் கூறப்படுகிறது. குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும் என உடல் நல அடிப்படையில் அவ்வாறு கூறப்படுகிறது.

அச்சத்திற்கு ஆட்பட்டு அறிவிற்குப் புறம்பாகப் பிற நாட்டினர் கோள்களைப் பற்றித் தவறாகப் பரப்பிய காலக்கட்டத்திற்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் சனிக்கோளைப் பற்றி நிறம், வேகம், தன்மை அடிப்படையில் பெயரிட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். அங்ஙனமாயின் அக்காலத் தமிழ் வானறிவியலாளர்கள் அறிந்திருந்த செய்திகள் இன்னும் மிகவாக அல்லவோ இருந்திருக்கும்!

- இலக்குவனார் திருவள்ளுவன்



Comments



No comments:

Post a Comment

Followers

Blog Archive