Tuesday, February 1, 2011

Science of Registration: andre' sonnaargal 16: அன்றே சொன்னார்கள் பதிவறிவியலிலும் பாங்குடன் திகழ்ந்தனர்

>>அன்றே சொன்னார்கள்

அன்றே சொன்னார்கள்
பதிவறிவியலிலும் பாங்குடன் திகழ்ந்தனர்

                                                                                                                

natpu பதிவு செய்து முறைப்படுத்தலைக் குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.  நிலப்பதிவு முதலான பல பதிவுகள் இருப்பினும் இப்பொழுது நாம் திருமணப் பதிவு குறித்து அறிவோம். 
திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும்   உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும்  திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல நாடுகளில் அதற்கென எச்சட்டமும் இல்லாமல் இருந்தது. 1964இல் ஐ.நா. இதற்கெனக் கூட்டிய மாநாட்டில் எல்லா நாடுகளும் திருமணப் பதிவினைக் கட்டாயமாக்க வேண்டும் என அறிவுறுத்தியது.  அப்பொழுதும் பல நாடுகள் நடைமுறைப்படுத்தாமல் 1979இல் மீண்டும்  ஐ.நா. கூடித் திருமணப் பதிவைக் கட்டாயமாக்குமாறு அறிவுறுத்தியது.
ஆனால் தமிழ்நாட்டில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறை இருந்துள்ளது. கி.மு.1000இல் இயற்றப் பெற்ற நூல் தொல்காப்பியம். இதில் வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் திருமண முறையைக்

கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே                       (நூற்பா 1088)
என்கிறார்.

(கிழவன் - உரியோன். தலைவன். கிழத்தி - உரியோள், தலைவி.)
(தலைவன் தலைவியைக் கொள்ளுவதற்குரிய முறைமைப்படி கொடுப்பதற்குரியவர் கொடுப்பக் கரணத்துடன் பெற்றுக் கொள்வதாகும்.)  கரணம் என்பது எழுதிப் பதிவு செய்வதைக் குறிப்பது எனச் பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுகிறார். இப்பொழுது திருமணத்தை உறுதி செய்யும் வெற்றிலை பாக்கு மாற்றும் நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல்  என்பர். இவ்வாறு எழுதி உறுதிப்படுத்தும் பழக்கமே பதிவு முறையாக மாறிற்று என்கிறார் அவர்.
எப்பொழுது ஏன் பதிவு முறை தோன்றியது என்பதையும் தொல்காப்பியர் விளக்குகிறார்.

பொய்யும் வழுவும்  தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப                                                                       (நூற்பா 1091)
என்கிறார்.

 ஐயர் என்பது தமிழில் தலைவரைக் குறிக்கும்.  வீரனொருவன் தன் தலைவர் முன்னால் யாரும் நின்று போரிட இயலாது என்பதைக் குறிக்கும்பொழுது,

என் ஐ முன் நில்லன்முன் தெவ்விர்                             (குறள் 771)

என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஐ, ஐயன், ஐயர் என்பன தலைவரைக் குறிக்கும் சொற்களாகும். காதலித்து மணம் முடிப்பதாக உறுதி கூறியவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் போனதால் அல்லது திருமணம் செய்து கொண்டவர்கள்  வாழ்க்கைத்துணையை விட்டு  நீங்கியமையால், தலைவர்கள் திருமணப் பதிவு முறையை நடைமுறைப்படுத்தி ஒழுங்கு செய்துள்ளனர். (ஆனால், சிலர் வேண்டுமென்றே ஆரியர் வந்த பின் தான் திருமண முறை தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தவறாகக் குறிப்பிடுவர்).
சிற்றூர் ஆட்சி அலுவலர் (V.A.O.) என இப்போது  அழைக்கப்படுவோர் பணியாற்றும் முன்னர் நம் நாட்டில் கடந்த நூற்றாண்டு வரை இப்பணியை ஆற்றி வந்தவர்களைக் கரணம் என்பர். ஊர்க்கணக்கு எழுதும் கணக்குப்பிள்ளைகளாகப் பணியாற்றியோர் அனைவரும் கரணம் என அழைக்கப்படுவதில் இருந்தே முறையாக  எழுதி வைப்பதைக் குறிப்பதே கரணம் எனலாம். ஆகவே இன்னாருக்கு இன்னார் வாழ்க்கைத் துணை என எழுதிப் பதியும் முறை கரணம் எனப்பட்டது எனலாம்.
வாழ்வியல் அறிஞர் தொல்காப்பியர் என்ப எனக் குறிப்பதால் அவருக்கு முன்பே இவ்வாறு திருமணத்தைப் பதியும் முறை இருந்திருக்கிறது எனலாம்.
கடந்த நூற்றாண்டில்கூடச் சில நாடுகள் திருமணப் பதிவை மேற்கொள்ளாதபொழுது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருமணப் பதிவு முறையைத் தமிழர்கள் பின்பற்றி உள்ளனர் என்னும்பொழுது பைந்தமிழர் பதிவு அறிவியலையும் பாங்குடன் அறிந்திருந்தனர் என்று சொல்லிப் பெருமை கொள்ளலாம் அல்லவா?
- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive