கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும்
கடந்த ஆனி 10, 2047 / சூன் 24,2016 அன்று சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் தொடரிநிலையத்தில் பொறியாளர் ச.சுவாதி கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் கொலைசெய்தவரை விரைவில் கைதுசெய்துள்ள காவல்துறைக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொறி.சுவாதியுடன் பேசிக்
கொண்டிருந்த ஒருவரே வாயில் / தாடையில் / கழுத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை
செய்துள்ளார். பின்னாலிருந்து அரிவாளால் வெட்ட முற்படும்பொழுது
கழுத்தில்படாமல் வாயில் அறுத்திருக்கலாம் என முதலில் பலரும் கருதினர்.
ஆனால் கொலைக்குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள
இராம்குமார், என் காதலைத் தெரிவித்த பொழுது தேவாங்கு எனத்திட்டி மறுத்த
வாயை அறுக்க வேண்டும் என வெட்டியதாகச்செய்தி வந்துள்ளது.
பொய்யைவிடப் பேரிடர் தருவது அடுத்தவர்கள் என்ன எண்ணுவார்களோ என மறைக்கப்படும் உண்மை.
அதனைப் புரிந்துகொள்ளாமல் பொறி.சுவாதியின் தந்தை நடந்துகொண்டார். அதனால்
கொலைச்செய்தி அறிந்ததும் அதிர்ந்த அனைவரும் சாதிக்கண்ணாடியரின் பார்வைகளால்
வெவ்வேறு சிந்தனைஓட்டங்களுக்குத் தாவி விட்டனர்.
காதல் என்பது நம் பண்பாட்டிற்குரிய செயல்தான்.
மறுபால் ஈர்ப்பைக் காதலாக எண்ணுவதும் காதல் மறுப்பையும்
காதல்தோல்வியையும் தாங்கிக்கொள்ளாமல் குற்றச் செயல்களில் அல்லது கொலை,
தற்கொலைகளில் ஈடுபடுவதும்தான் தடுக்கப்பட வேண்டியவை. எனவே, பொறி.சுவாதி காதலித்திருந்தாலோ மற்றவர் காதலை மறுத்திருந்தாலோ மறைக்கப்பட வேண்டிய தேவையில்லை.
ஆனால், இவற்றிற்கும் மேலாக இருக்கின்ற
ஏதோ உண்மையை மறைக்கத்தான் கொல்லப்பட்டவரின் தந்தையும் குடும்பத்தினரும்
விவரங்களை மறைக்கின்றனர்; காவல்துறைக்கு ஒத்துழைக்காமல் தொந்தரவு தருவதாக
முதலமைச்சர் அலுவலகத்தில் முறையீடு அளித்துள்ளனர் என மக்கள் எண்ணுகின்றனர்.
பொறி.சுவாதியின் அக்கா மணவிலக்கு
பெற்றுள்ளார். இச்செய்தி உற்றார் உறவினர்கள் பலரும் அறியாத செய்தியாக
இருக்கும். இவ்வழக்கு உசாவல் மூலம் அச்செய்தி வெளிவரும் என்ற அச்சமும்
இருந்திருக்கும். பொறி.சுவாதியின் தந்தையான சந்தான கோபாலகிருட்டிணன் மத்திய
அரசின் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு
பெற்றுள்ளார். ஈ.எசு.ஐ (E.S.I.)
நிறுவனம் என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு மத்திய அரசில் காவல்துறையில்
உயர்அதிகாரியாக இருந்ததாகச் செய்திகள் வந்தன. செய்தியை முந்தித்தரவேண்டும்
என்ற ஆர்வத்தில் இப்படிப்பட்ட தவறுகள் வெளிவருகின்றன.
கொல்லப்பட்ட பொறி.சுவாதியும் கொன்றதாகக் கூறப்படும் இராம்குமாரும் ‘முகநூல்’ நண்பர்கள்
என்கின்றனர். நெல்லை மாவட்டத்திலிருந்து சென்னை வந்த இவர் கொல்லப்பட்டவர்
தெருவிற்கு அடுத்து உள்ள தெருவில் உள்ள விடுதிக்கு வாடகைக்கு வந்தது
எப்படி? கொல்லப்பட்டவரே விடுதி உள்ள தகவலைத் தெரிவித்திருந்தார் எனில்,
அந்த அளவு நட்பு உள்ளதாகத்தானே பொருள்? அல்லது அவர் தன் ஊர்க்காரர்கள்
அல்லது நண்பர்கள் உள்ளமையால் வந்தாரெனில், தன் நட்பை
உறுதிப்படுத்தவாய்ப்பாகக் கருதிப் பக்கத்தில் வந்து தங்கியுள்ளார்
என்றுதானே பொருள்?
வந்தபின், இருவரும் தற்படம் (செல்பி) எடுத்துள்ளது உண்மை எனில் நட்பாகத்தானே இருந்துள்ளனர்?
கோயிலில் சந்தித்துப்பேசியதாகவும்
இருவரும் ஒன்றாகத் தொடரிநிலையம்வரை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறதே!
அப்படியாயின் நல்ல நட்புடன்தானே இருந்துள்ளார்கள்.
ஆனால், கொல்லப்பட்ட பொறி.சுவாதியைத் தொடரி
நிலையத்தில் ஒருவர் அறைந்ததாகக் கூறப்படுகிறதே! அதனை ஏன் பெற்றவரிடம்
அவர் மறைத்துள்ளார்? பிடிபட்டவரும் அவ்வாறு ஒரு முறை அல்லது இரு முறை
அறைந்தவரும் ஒருவர்தானா?
தன் நண்பர்களிடம் தன்னை ஒரு மாதமாக ஒருவன் பின்தொடர்ந்து வருவதாகப் பொறி.சுவாதி தெரிவித்துள்ளார். பின்தொடர்ந்து வந்தவர் இராம்குமார் எனில், யாரோ ஒருவன் என்பதுபோல் ஏன் சொல்ல வேண்டும்?
முகநூல் நட்பு வட்டத்திலுள்ள ஒருவன் சரளமாகப் பேசுவதைக் காதல் என எண்ணித்
தொல்லை தருவதாகவே தெளிவாகவே சொல்லியிருக்கலாமே! குடும்பத்தினர்
புரிந்துகொள்ளமாட்டார்கள் என எண்ணியிருந்தால் நண்பர்களிடம்
சொல்லியிருக்கலாமே!
முகம்மது பிலால் சித்திக்கு
என்னும் மற்றொரு நண்பருடன் ஏறத்தாழ 50 கல்தொலைவில் உள்ள
அலுவலகத்திலிருந்து ஈருருளியில் வருவதும் போவதுமாகப் பழக்கம் இருந்துள்ளது
என்னும் பொழுது அவரைப்பற்றிய நல்ல பிம்பம் உருவாக வேண்டும் என்று எண்ணி
அப்படி நடந்துகொள்வார், இப்பபடி நடந்துகொள்வார் என்றெல்லாம் குடும்பத்தினர்
சொல்லவேண்டிய தேவை என்ன? மேலும் இவ்விருவரும் முதல் வகுப்பிலிருந்து
ஒன்றாகப் படித்தது போன்ற செய்தியையும் கல்லூரித்தோழர் என்பதுபோன்ற
செய்தியையும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒன்றாகப் படிக்கவில்லை என்று பிறர்
தெரிவித்துள்ளனர். ஒன்றாகவே அலுவலகம் சென்ற வருவதால் தவறாக எண்ணக்கூடாது என
எண்ணி ஒன்றாகப் படித்ததுபோன்ற தவறான செய்தியைக் குடும்பத்தினர்
பரப்பியிருக்கலாம். ஆனால், இப்படித் தவறாகவே சொல்லுவோரின் பிற தகவல்களை
எப்படி நம்புவது?
சாதி அடிப்படையில் ஏ.கு.(ஒய்.சி.) மகேந்திரன் முதலான நடிகர்களும் அரசியல்வாதிகளும் சாதிக்கண்ணாடிபூசிச் சாதி, சமய மோதலுக்கு வழிவகுக்கும் கருத்துகளைப் பரப்புகின்றனர். இதனால் மக்கள் எண்ணம் வேறு வகையாகத் திரும்பிவிட்டது. சாதி அடிப்படையிலேயே இதழாசிரியரான மஞ்சுளா இரமேசு என்பவர் பிராமணப் பெண் ஒருத்தி தனியாகப் போகமுடியாமல் இருப்பதாகக் கூறுவது அந்தச் சாதியைச்சேர்ந்த முதல்வருக்கு இழுக்கு தேடித் தருவதல்லவா?
வேறு வகுப்பார் கொல்லப்பட்டபொழுதெல்லாம்
அமைதி காத்த சாதிக்கண்ணாடியணிந்த ‘நீதியாளர்கள்’ இப்பொழுது மட்டும்
கூக்குரலிட்டுச் சாதிச்சாயம் பூசுவதேன்? சாதிச்செல்வாக்கால் பொறி.சுவாதி
தந்தை அளித்த நெருக்கடியால் குற்றமற்றவரைக் காவல்துறை கொலையாளி எனக்கூறிக்
கைது செய்துள்ளதோ என மக்கள் இப்பொழுது எண்ணத்தொடங்கிவிட்டனர். பல்வேறு
வழக்குகளில் குறிப்பாக இராசீவு வழக்கில், பேரறிவாளன், சாத்தன் முதலானவர்களை
வழக்கில் சிக்க வைத்ததை நன்கறிந்த மக்கள், இவ்வழக்கிலும் அவ்வாறு
காவல்துறை நடந்து கொள்கிறதோ என எண்ணுகின்றனர்.
ஒரு வேளை, வேறு யாருக்காகவாவது இக்கொலையைச் செய்திருந்து உண்மைக் குற்றவாளியைக் காவல்துறை மறைக்கிறதோ
என்றும்கூட மக்களிடையே ஐயம் வந்துள்ளது. திரவ உணவு உண்ணும்பொழுது
புலால்(பிரியாணி) உண்டதாகச் செய்தியைப் பரப்புவதால், பிடிபட்டவருக்கு
எதிரான அலையை உருவாக்கக் காவல்துறை முயல்கிறதோ என்றும் ஐயம்பெருகுகிறது. உயிரும் போகாமல் கழுத்தும் அறுபடும்வகையில்
காவல்துறையினரே பிடிபட்டவர் கழுத்தை அறுத்து உடனடியாக அவர்
யாரையும்காட்டிக் கொடுக்கக்கூடாது என்று செயல்படுகின்றரோ என்றும்
மக்களிடையே எண்ணம் ஏற்பட்டுள்ளது.
கொடூரமாகக் கொலை செய்தவனுக்குக் கடுமையாகத் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துஇல்லை. ஆனால், இந்த எண்ணத்தில் கொலையாளிமீது கடுஞ்சினத்தி்ல் இருந்த மக்களிடம் ஒரு பெண் என்ற முறையில் நோக்காமல் சாதிக்கண்ணாடி கொண்டு பிராமணப்பெண் எனக் குறிப்பிட்டு, அவரவர் தப்பும் தவறுமாக எழுதியுதையும் பேசிய அடா செயல்,வேறுவகையாக எண்ண வைத்து விட்டது. காதலில் அல்லது காதல் கலியாணத்தில் சாதி
அடிப்படையில் காதலர்களை அல்லது மணமக்களைப் பிரிக்கவும் உயிர் பறிக்கவும்
காரணமாக இருக்கும் ஆணவக்கொலையுடன் அப்பாவிப் பெண்ணின் கொலையை ஒப்பிட்டது
தவறென இனியேனும் – தங்களை உயர்ந்தவர்களாக எண்ணிக்கொள்வோர் –
எண்ணிவருந்த வேண்டும். சாதி அடிப்படையிலான பிற கொலைகளிலிருந்து
வேறுபட்டதனிப்பட்ட கொலையில் சாதியைப் புகுத்தியது தவறாகும். ஒரு வேளை,
இருவரும் காதல் எண்ணத்தில் இருந்து சாதி அடிப்படையில் முறிந்து
போயிருந்தாலும் தனிப்பட்டநிலையாகக் கருத வேண்டுமே தவிர, வகுப்பு மோதலாகக் கருதுவதற்கு இடமில்லை.
சுவாதி கொலை செய்யப்பட்டது,
பெண்களுக்குப் பாதுகாப்பு தேவை
பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திறம் பெற்றவர்களாக விளங்க வேண்டும்.
காதல் என்றால்என்ன வென்று இளைஞர்களிடையே புரிதல் தேவை.
விரும்பிய பெண்
(அல்லது ஆண்) கிட்டாவிட்டால், எங்கிருந்தாலும் வாழ்க என்னும் மனப்பக்குவம்
வரவேண்டுமே தவிர, தன்னுடன் இணையாதவர் வேறு யாருடனும் இணையக்கூடாது என்ற
வெறி கூடாது.
உள்ளத்தில் சாதி
வெறியை வைத்துக்கொண்டு நேரம் வரும்பொழுது ஒற்றுமையைக் குலைக்கவும்
சமயப்பூசலை ஏற்படுத்தவும் சாதிக்கண்ணாடி அணிவோர் இன்னும் உள்ளனர்.
அவர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும்
என்பனவற்றை நமக்குப் புரிய வைத்துள்ளது.
இராம்குமார்! நீதான்
கொலையாளி எனில் உண்மையை ஒப்புக்கொண்டு உரிய தண்டனையைப் பெற்று மனந்திருந்தி
வாழ்வாயாக! கொலையில் வேறு யாரும் பின்னணியில் இருப்பின்அவர்களும்தண்டனை
பெற உண்மையைக் கூறுக!
பொறி.சுவாதி குடும்பத்தினரே!
பொறி.சுவாதி நினைவாகச் சாதிஒழிப்பு, சமயப்பிணக்கின்மை, பெண்கள் பாதுகாப்பு
ஆகியவற்றில் கருத்து செலுத்தி மன அமைதியுடன் வாழ்வீர்களாக!
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருவள்ளுவர், திருக்குறள் 579)
No comments:
Post a Comment