தலைப்பு-காதல்கொள்வோரே-திரு :thalaippu_kaathal_kittaathaayin_marakppeer_thiru

காதல் கொள்வோரே, கிட்டாதாயின் வெட்டென மறப்பீர்!


  காதல் என்பது வாழ்வியல் அறம். ஆனால், இரு மனமும் ஒத்து, நல் ஒழுக்கத்துடன் சிறந்து வாழும்பொழுதுதான் காதல் என்பது அறமாகிறது. உண்மைக்காதல் அவ்வாறுதான் இருக்கும். ஆனால், ஆசை, ஈடுபாடு, ஈர்ப்பு, முதலியவற்றையும் காதலாக எண்ணுவதுதான் குழப்பங்களுக்கும் குற்றங்களுக்கும் காரணமாய் அமைகின்றது. மாந்த இனம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே காதல் உணர்வும் தோன்றியுள்ளது. காதல் தோன்றியபொழுதே ஒரு தலைக்காதலும் தோன்றியுள்ளது. ஆனால், முன்பெல்லாம் ஒரு தலைக்காதல்வயப்பட்டவர்கள், காதல் நிறைவேறத் தங்களைத்தான் வருத்திக் கொண்டார்கள். இப்பொழுது தான்விரும்பி விரும்பிக் காதலித்தவரையே சிதைக்கிறார்கள் அல்லது அழிக்கிறார்கள்.
 கிட்டாதாயின் வெட்டென மற (ஔவையார், கொன்றை வேந்தன்:16)
என்னும் அருள்மொழி காதலுக்கும் பொருந்தும். பெண்ணையும் பேருந்தையும் (பிடிப்பதற்காகத்)  துரத்திச்செல்ல வேண்டா! ஒன்று போனால், மற்றொன்று பின்னாலேயே வரும் என்று ஆங்கிலப்பழமொழி உண்டு(Never ever chase a bus, or a girl, because the next one comes in 15 minutes.)   எனவே, தன்னை விரும்பாமல் நீங்கிச்செல்லும் பெண்ணின் பின்னால் அலைவதை விடத் தன்னை நாடிவரும் பெண்ணை விரும்பி வாழ்வதே நன்று என்பதைக் காதல் வயப்படுவோர் உணர வேண்டும்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.  (திருவள்ளுவர், திருக்குறள் 967 )
என்பதும் காதலர்க்கும் பொருந்தும். எனவே, விரும்பாப் பெண்  அல்லது ஆண், பின் சென்று தன் வாழ்வை வீணடிக்கவும் வேண்டா! விருப்பத்திற்குரியவரை அழித்து இருவர் உயிரையும் பறிக்கவும் வேண்டா!
  தொல்காப்பியர் காலந் தொட்டே ‘மடலூர்தல்’ என்னும் வழக்கம் இருந்துள்ளது. தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைய வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் வழக்கம் இது. தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம்.  தலைவன், தன் உடலில் சாம்பலைப் பூசிக்கொள்வான் யாரும் விரும்பாத எருக்கம்பூ முதலான பூக்களைத் தலையில் சூடிக்கொள்வான். அகன்ற பனைமர மடலில் குதிரை செய்து கொண்டு அதில் ஊர்ந்துவருவான். இதன் மூலம், அவன் உடலில்  சிராய்ப்புகளும் காயங்களும் ஏற்பட்டு இரத்தமும் வடியும். இதனால் இரக்கம்கொள்ளும் ஊரார், தலைவியின் குடும்பத்தாரிடம் இவள்மீது இந்த அளவு  காதல் கொண்டு தன் உடலை வருத்தும் இவனுக்கே தலைவியை மணமுடித்து வைக்குமாறு தெரிவிப்பர். இவ்வாறு மடலேறுதல் திருமணத்தில் முடிவதுண்டு. அவ்வாறு திருமணம் நடைபெறவில்லை என்றால், தலைவன்  தன் உயிரைப் போக்கிக் கொள்வானே தவிர, தான் விரும்பிய பெண்ணிற்கு எந்தத் தீங்கும் விளைவிக்க மாட்டான்.
  தான் விரும்பும் பெண் தன் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலோ, முதலில் ஏற்றுக்கொண்டு பின் மறுத்துவிட்டாலோ தன்னுயிரைப் போக்கிக்  கொள்ளவேண்டா! அதுபோல், தான் விரும்பிய பெண்ணை – தன் உயிரனெக் கூறிக்கொண்ட பெண்ணை – தனக்கும் மேலான உயர்வாகக் கருதிக் கொண்ட பெண்ணை – அமிலம் வீசிச் சிதைத்தல்,  உறுப்பு நலன் களைச் சீரழித்தல், உயிரைப்பறித்தல் போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதுதானே முறையாகும்! அறமாகும்!  தனக்குக் கிடைக்காத பெண் மற்ற யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று வெறி கொண்டால், இதற்கு முன்பு அவளை உயிருக்கு உயிராய் நேசித்ததாக உருகியதெல்லாம்  பொய்என்றுதானே ஆகிறது.
  திரைப்படங்களில் கதைநாயகன், நாயகியைத் துரத்தித்துரத்திச்சென்று காதலிப்பதை நாளும் பார்க்கும் இளைஞர்கள் இதுதான் காதல் என்று  பெண்களைத் துரத்துகின்றார்கள். துரத்துவதுதான் காதலின் அடையாளம் எனப் பெண்களும் நம்புகிறார்கள். இதனால்தான் காதல் தோல்விகளும் காதல் நிறைவேறியபின் திருமணத் தோல்விகளும் நிகழ்கின்றன.
 திரைப்படங்கள் தொலைக்காட்சிகளால், பள்ளிப்பருவத்து ஈர்ப்புகளையும் கல்லூரிக்காலத்துக் கவர்ச்சிகளையும் காதல் என எண்ணித் தவறான முடிவிற்கு வருவதே பெரும்பாலான தவறுகளுக்குக் காரணமாக அமைகின்றன. எனவே மாணவப்பருவத்தில் காதல்பற்றி எண்ணாமல் வாழ வேண்டும். குடும்பப்பொறுப்பு உள்ளவர்கள், பணியில் சேர்ந்ததும் அதில் சிலவற்றையாவது முடித்து விட்டுக்காதல் பற்றி எண்ண வேண்டும்.  இடையில் காதல் உணர்வு அரும்பினாலும் சூழலை மாற்றிக் கொண்டு அந்த எண்ணத்திற்கு இரையாகக் கூடாது. இவற்றிற்கு மாறானவையெல்லாம் மனப்பக்குவமில்லா உறவுகளுக்கு வழி வகுத்து,. வாழ்க்கைத் தோல்விகளுக்கும் துன்ப முடிவுகளுக்கும் இட்டுச் செல்கின்றன என்பதையும் உணர வேண்டும்.
  காதலைப்பற்றித் தெளிவான புரிதலுடன் இருந்தால், அகாலக் காதல் வராது. இவற்றையெல்லாம் மீறிக் காதல் வயப்பட்டால் முதலில் சொன்னதுபோல், விரும்பப்பட்டவர், தன்னுடன் இணையாவிட்டாலும் தான் விரும்பியவுடன் இணைந்து நீடு வாழ  வேண்டும் என்ற மனப்பக்குவம் வர வேண்டும்.  சில நேரங்களில் பெண்கள், அவசரப்பட்டுக் காதலிப்பதாகத் தெரிவித்து விட்டுப் பின்னர், பழகுதால் ஏற்படும் சில உண்மைகளால் காதலைக் கைவிடுகின்றனர். தான் ஏமாற்றப்பட்டோம் அல்லது வஞ்சிக்கப்பட்டோம் என எண்ணும் இளைஞர்கள், பழிவாங்கும் உணர்விற்குச்சென்று விடுகின்றார்கள். எனவே, இளம்பெண்களும்  விரைவாகக் காதலிப்பதும் அதனினும் விரைவாக் காதலைப் புறக்கணிப்பதுமான போக்கிற்கு ஆளாக வேண்டா. ஆடவர்களின் பழிவாங்கும் உணர்வுகளுக்குத் தாங்களும்  காரணமாகிறோம் என்பதைப் புரிந்துகொண்டு வரம்பிற்குட்பட்டே  பழகுதல் வேண்டும்.
  இரு தரப்பாரில் ஒருவருக்கு (அல்லது இருவருக்குமே) குடும்பச்சூழல் போன்றவற்றால் காதலை ஏற்பதற்கு இயலாச் சூழல் இருக்கலாம். அதை எதிர்கொள்ளும் துணிவு இல்லாதபொழுது  அதை ஏற்றுக்கொண்டு விலகிச்செல்லலே நல்லது. எக்காரணம் கொண்டும் “காதல்! இல்லையேல்  சாகடித்தல்” என்னும் கொடுவினைகளிலிருந்து விடுபட வேண்டும்.
  பொதுவாக ஆண்களே மிகுதியாக இவ்வாறு ஈடுபடுவதால் ஆண்களைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்களும் காதலில் ஏமாற்றம் அடையும் பொழுது பழிவாங்கும் செயலுக்கு வந்து விடுகின்றனர். இதனைத்  தொலைக்காட்சித் தொடர்கள் பேரளவாகக்காட்டுவதால் அவர்களிடமும் இப்போக்கு வளர்ந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, இருபாலினருக்கும் பொதுவாகவே அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.
  காதல் என்பது தூய்மையானது. காதலர்கள் இணையாவிட்டாலும்   உண்மையான காதல் எனில், உயிரைப் பறிகொடுப்பதிலும் உயிரைப் பறிப்பதிலும் காதல் மனம் ஈடுபடாது. அவ்வாறு  ஈடுபட்டால், ‘காதல் தோல்வி’ என்றும் ‘அதனால் மனம் தாங்காமல் தீங்கிழைத்தேன்’  என்பதும் பொருந்தாது. உயிர் பறிப்பது உண்மையான காதல் இல்லை என்னும்பொழுது காதலின் பெயரில் இழைக்கும்  கொடுமைக்குக் காதலைக் காரணமாகக் கூறுதல் பொருந்தாது அல்லவா?
  எனவே, ஒரு தலைக்காதலாக இருந்தாலும் இருதலைக்காதலாக இருந்து முறிந்த காதலாக மாறினாலும்,  அதனை மறந்து வாழ்வதே சிறந்தது. எனவே,
காதல் கொள்வோரே கிட்டாதாயின் மறப்பீர்!
கிட்டும்  துணையை ஏற்றுக் காதலிப்பீர்!
– இலக்குவனார் திருவள்ளுவன்