அரசின் கல்விக்கொள்கை
இலெனின்கள் உயிர்களைப் பறிக்கின்றது!
உள்ளம் தவிக்கின்றது!
அனைவருக்கும் கல்வி தருவது அரசின் கடமை. ஆனால், கல்வி வணிகமயமாக்கப்பட்டதால் கற்போர் பெரும்பாடு படவேண்டியுள்ளது.
பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்
என்கிறார் பாரதியார். ஆனால் பாரை உயர்த்துவதாகக் கூறும் அரசாங்கங்கள், கட்டணமில்லாக் கல்வியைத் தர மறுக்கின்றனவே!
கல்லா ஒருவரைக் காணின் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
எனக் கனவு கண்டார் பாரதிதாசன். ஆனால்,
கல்வியை வணிகக் கொள்ளையரிடம் ஒப்படைத்துவிட்டுக், கற்பவர்க்குத்
தூக்குமரத்தைக் காட்டுகின்றனரே!
கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாக முடியும் என்கிறது நான் மணிக்கடிகை.(85.1.கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்) ஆனால் கற்கும் ஆர்வமுள்ளவர்க்கு அரசுகளே அல்லது அரசு சார் நிறுவனங்களே கூற்றுவனாக மாறி உயிரைப்பறிக்கும் போக்கு அல்லவா நிகழ்கிறது. அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம்(நான்மணிக்கடிகை 85.3.) ஆவது எப்போது?
படிப்பதற்கு வசதியின்மையால், உதவித்தொகை கிடைக்காமையால், கடனனுதவி கிடைக்காமையால் என எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர்? இருப்பினும் கல்விக்கொள்கைமாறவில்லையே!
கல்விக்கடன் கிடைத்தும் அதைச் சரிவரக்கட்டாமையால் வங்கியின் தொல்லையால் இலெனின் என்னும் பொறியியல் பட்ட மாணவர் ஆனி 31, 2047 / சூலை 15, 2016 அன்று தற்கொலை செய்துகொணடுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கதிரேசன்
என்பவர் தன் மகனுக்கு உருசியப்புரட்சியாளர் இலெனின் பெயரைச்
சூட்டியுள்ளார். அப்படியானால், பெற்றோர்கள் தம் பிள்ளையின் எதிர்காலம்
குறித்து எத்தகைய கனவு கண்டிருப்பர்? ஆனால், எதிர்காலத்தையே அழித்துவிட்டதே இந்திய அரசு வங்கி(State Bank of India).
இலெனின் தன்கல்விக்காக உரூபாய் 1.90
நூறாயிரம், அரசு வங்கியில்(S.B.I.) கடன் வாங்கியிருந்திருக்கின்றார். சிலர்
படிக்கும் பொழுதே கடன் தவணையைக் கட்டுவதுண்டு. எனினும் பொதுவாகக் கல்வி
முடித்த ஆறாம் திங்கள் முடிவிலிருந்து அல்லது வேலையில் சேர்ந்து முதல்
சம்பளம் வாங்குவதிலிருந்து – இதில் எது முதலில் வருகிறதோ அந்தத் திங்கள்
முதல் தவணையைத் திருப்பச் செலுத்தினால் போதும்.
ஆனால், இலெனின் சில பாடங்களில் தேர்ச்சி
பெறாமல் இருந்துள்ளார். தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கே வேலை கிடைப்பது
குதிரைக் கொம்பானதே! இவருக்கு எப்படி உடனே வேலை கிடைத்திருக்கும்?
வேலையே கிடைக்காதபொழுது கடன்தவணையைச்
செலுத்துமாறு துன்புறுத்தினால் என் செய்ய இயலும்? அப்படியும் உரூபாய்
ஐம்பதாயிரம் முதல் தவணை செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும்
(இ)ரிலையன்சு நிறுவனத்தின் தகா பேச்சுகளால் மனமுடைந்தும் இழுக்கு நேருமே
என்று கவலைப்பட்டும் வாழவேண்டிய இளைஞர் தற்கொலை முடிவிற்குத் தள்ளப்பட்டு
உயிர் இழந்துள்ளார். குடும்பத்தினருக்கு எவ்வளவுதான் இழப்பீடு கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வருமா? வங்கியின் அடாக் கொள்கையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ என்று அஞ்சவேண்டியுள்ளதே!
இந்தியஅரசு வங்கி,
வாராக்கல்விக்கடன்கனைத் திரும்பச் செலுத்தச் செய்வதற்காக மொத்தக்
கடன்தொகையில் 55 % ஊதியமாக (இ)ரிலையன்சு நிறுவனத்திற்குத் தந்து கடன்
தொகையைத் திரும்பப்பெறும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. எத்தகைய நிறுவனத்திடம்
இப்பணியை அது ஒப்படைத்தது? எரிபொருள் நிறுவனம், தகவல் தொடர்பு நிறுவனம்,
நிதிநிறுவனம், அங்காடிகள் எனப் பலவகையிலும் ஆழக்காலூன்றி 6,062
பேராயிரம்கோடி உரூபாய்ச் சொத்து இருப்பினும் வங்கிக்கடனைத் திரும்பச் செலுத்தும் நாணயமற்ற பெயரில் மட்டும் நம்பிக்கை வைத்துள்ள நிறுவனத்திடம் இப்பொறுப்பை ஒப்படைத்தது.
அப்பொழுதே இதற்கு அரசியல் தலைவர்களும் குமுகாய நெறி ஆர்வலர்களும்
எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மாற்றமில்லை. இதற்கு முன்னர்
இந்நிறுவனத்திடம் திருவாங்கூர் அரசு வங்கி (ளState Bank of Thiruvaankure) இதேபோல் கடன் தொகையைத் திரும்பப்பெறும் பொறுப்பை ஒப்படைத்திருந்தது. இந்நிறுவனத்தின் கெடுபிடிகளால் கடந்த ஆண்டில் கேரளாவில் 4 செவிலியரும் 17 பெற்றோர்களும் தற்கொலை புரிந்துள்ளனர். செய்தியில் வராத் தற்கொலைகள் எண்ணிக்கை யாருமறியார்! இந் நிறுவனத்தின் கெடுபிடியால் தமிழ்நாட்டில் முதலில் இலெனின் உயிர் பறிபோயுள்ளது.
தற்கொலை வழக்குகளில் தற்கொலையைத் தூண்டியவர்களுக்கும் தண்டனை விதிக்க
வேண்டுமல்லவா? எனவே, (இ)ரிலையன்சு நிறுவனம், இந்திய அரசு வங்கியின்
தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசு வங்கிக்கும்
(இ)ரிலையன்சு நிறுவனத்திற்கும் இடையே உள்ள இது தொடர்பான
ஒப்பந்தத்தை முறிக்க வேண்டும். இத்தகைய முடிவெடுத்த அதிகாரிகளின் அல்லது
பொறுப்பாளர்களின் பதவி பறிக்கப்பட்டுச் சிறைத்தண்டனையும் வழங்கவேண்டும்.
கடன்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ஊதியமாகக் கொடுப்பதை விடக் கடன்
வாங்கியோர் ஒரு தவணையைச் செலுத்தினால் மற்றொரு தவணைத் தள்ளுபடியாகும் என
அறிவித் தால் கல்விக்கடன் வாங்கியவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக
இருந்திருக்கும்.அதே போல் கடனுக்கான வட்டியை முழுவதுமாகத்
தள்ளுபடி செய்திருந்தாலும் பெரும்தொகை பெறப்பட்டிருக்கும். “கடனை உரிய
காலத்தில் திருப்பிச் செலுத்தாதவர்களுக்குதச் சலுகை அளித்துவிட்டு
முறையாகச் செலுத்திய எங்களிடம் மட்டும் வட்டி வாங்க நாங்கள் என்ன
பாவம்செய்தோம்?” எனக் கடனை அடைததவர்கள் அல்லது முறையாக அடைத்து வருபவர்கள்
கேட்கலாம். எனவே, முறையாகச் செலுத்திய அனைவருக்கும் வட்டித்தொகையைத்
திரும்பத் தரலாம். கல்விக்காக இவ்வாறு செய்வது தவறல்ல.
எல்லாவற்றிற்கும் மேலாக மாணாக்கர்களிடம் கட்டணம்பெறாமல்
கல்வி நிறுவனம் நடத்தும் வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே கல்வி நிலையங்களைத்
தொடர்ந்து நடத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
முதல் பட்டதாரிக்குக் கட்டணமி்ல்லாக்
கல்வி வகுப்பு வாரி கல்வித்தொகை முதலியன உரிய காலத்தில் கிடைக்க ஆவன செய்ய
வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாத வகையில், மழலைக் கல்வியிலிருந்து
உயர்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் எவ்வகை வேறுபாடுமின்றிக் கட்டணமில்லாக் கல்வியே வழங்க வேண்டும்.
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து (தெய்வப்புலவர், திருக்குறள் 398)
என்பதன் மூலம், மனத்தைச்சிதறவிடாமல் ஒருமை
உள்ளத்தோடு கற்கும் கல்வி மிகுதி்யும் பாதுகாப்புடையது என உணர்ந்து அரசு
அக்கல்வியைக் கற்போருக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்!
கரையிலாக் கல்வியை அனைவருக்கும் கட்டுப்பாடின்றி வழங்கட்டும்! இலெனின்கள் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 143, ஆடி 02, 2047 / சூலை 17, 2016
No comments:
Post a Comment