தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும்
இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும்
‘நயன்’ என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்துதான் [நயன் > நயதி > நியதி >] நீதி என்னும் சொல் பிறந்துள்ளது. எனவே, நீதி என்பதைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து கையாள்வோம்.
‘பதி’ என்பது தங்குமிடத்தையும் தலைவனையும் வேறு சில பொருள்களையும்
குறிக்கும். நீதி தங்கியிருக்க வேண்டிய இடம் என்னும் பொருளிலும் நீதி
வழங்கும் மன்றத்தின் தலைவன் என்ற முறையிலும் முறைமன்றத்தின் தலைவர்
நீதிபதி எனப்படுகிறார். எனவே, நீதிபதியும் தமிழ்ச்சொல்லே!
நீதிபதியைத் தமிழ்ச்சொல்லல்ல எனக்
கருதியும் ‘justice’ என்னும் சொல்லை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டும்
பயன்படுத்துவதாலும் மிக உயர்வாகத் தவறாக எண்ணி ‘நீதியரசர்’ எனத் தமிழில் குறித்துவிட்டனர்.
பழந்தமிழரசர்கள், தாங்கள் தவறு செய்யாதபொழுதும் தவறான செயல்நிகழ்ந்தது
எனில் தம்மையே தண்டித்துக் கொண்டவர். நீதிமுறைமைக்குத் தங்களையும்
உட்படுத்திக் கொண்டு பொற்கைப்பாண்டியன், பாண்டியன் நெடுஞ்செழியன் எனப் பலர்
எடுத்துக்காட்டாக நம் உள்ளங்களில் வாழ்கின்றனர். ஆனால், அரசர் என்பதை
அன்புநெறியால் அருளுள்ளத்தால் ஆள்பவர்கள் எனக் கருதாமல் அடக்கி ஆள்பவர் என
நீதிபதிகள் கருதிவிட்டனர்போலும். எனவேதான் புருவத்தை உயர்த்திப் பேசுவது,
உரத்துப் பேசுவது முதலானவற்றையெல்லாம் குற்றங்களாகக் கருதுகின்றனர். மக்களாட்சி நாட்டில் அறவான்களாக விளங்க வேண்டியவர்கள் எப்படி இப்படிக் கருதினர் எனத் தெரியவில்லை.
பிற நாட்டு நீதிபதிகளுக்கு எடுத்துக்காட்டான தீர்ப்புகளைக் கூறி வருவோர்
நெஞ்சில் இத்தகைய எண்ணம் வந்ததற்குக் காரணமாக நீதியரசர் என அழைக்கப்படுவது
மிருக்கலாம். எனவே, பிற நீதிபதிகளிடமிருந்து வேறுபடுத்த உயர்நீதிமன்ற
முறைமையாளர்களை நயவர்கள் எனக் குறிக்கலாம். நயன்மை வழங்குநர் என்ற
அடிப்படையில் நீதிபதிகளை நயவர் எனக் குறிப்பதும் தமிழ் வழக்கே! நீதியரசர் என்பதைக் குறிக்க விரும்பாமல் நீதிநாயகம் எனக் குறிப்போருக்கும் இஃது உடன்பாடாகத்தான் இருக்கும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 118)
எனத் திகழ வேண்டியவர்கள் நீதிபதிகள். அவ்வாறு நடுவுநிலைமையுடன் நடந்து கொள்வதற்குத்
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (திருவள்ளுவர், திருக்குறள் 561)
என்னும் தமிழ்நெறிக்கிணங்க தக்கவகையில்
குற்றச் செயலை ஆராய்ந்து, மேற்கொண்டு அக்குற்றவழியில் செல்லாமல் இருக்கும்
வகையில், தண்டனை வழங்குவதற்கான தீர்ப்புகளை வழங்க வேண்டியவர்கள்
நீதிபதிகள்.
ஆனால், காவல்துறையினர் அல்லது முறைப்பாடு தருவோர் குற்றச்சாட்டுகளைக் கொண்டுமட்டும் நீதிபதிகளால் இவ்வாறு தக்கவழியில் செயல்பட முடியாது. அவ்வாறு தக்க வழியில் செயல்பட உதவுபவர்கள்தாம் வழக்குரைஞர்கள்.
“சட்டம் ஓர் இருட்டறை. அதில் வழக்குரைஞர்களின் வாதம் ஒளிவிளக்கு” என்றாரல்லவா பேரறிஞர் அண்ணா. அத்தகைய ஒளிவிளக்கின் வெளிச்சம் கிடைக்காவிட்டால் நீதிபதிகளுக்கு நீதிப்பார்வை கிட்டாது.
நீதிபதியே குற்றச் செயலைப் பாரத்திருந்தாலும் அதனடிப்படையில் தீர்ப்பு
வழங்க இயலாது. நீதிபதி இருக்கையைத் துறந்து சான்றுரைப்பவராக வந்து
வேண்டுமானால் சான்று கூறலாம். எனவே, நீதிபதிகளுக்குக் குற்றம் சார்ந்த விளக்கம் அளிப்பவர்கள் வாதுரைஞர்கள்தாம்.
குற்றமற்றவர் தண்டிக்கக்கூடாது என
அவர்கள் தரப்பு வழக்குரைஞர்களும் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது எனக்
குற்றச்சாட்டுத் தரப்பு வழக்குரைஞர்களும் விளக்குவனவற்றின் அடிப்படையில்
சட்டவழிப்படியும் முந்தைய தீர்ப்புரைகள் அடிப்படையிலும் ஆராய்ந்து
தீர்ப்புரைத்து முறைமை வழங்க இயலும்.
கீழ்நீதிமன்றத்தி்ன் தீர்ப்பு அதற்கு
மேற்பட்ட இடைநீதிமன்றத்தில் மாற்றப்படுவதும் அதற்கும் மேலாக உயர்நிலையில்
இத்தீர்ப்பு மாற்றப்படுவதும் நடக்கத்தான் செய்கின்றன. எனவே, எடுத்து வைக்கப்படும் வாதுரைகளின் அடிப்படையில் சட்டத்தின் வழி ஆராய்கையில் தீர்ப்புகள் மாறுகின்றன என்பது இயல்பான ஒன்று.
எனவே, தீர்ப்பு வழங்குவதற்குக் காரணமாக வழக்குரைஞர்கள் எடுத்துரைக்கும்
வாதுரைகளும் நீதி கிடைப்பதற்கு இன்றியமையாதவை என்பது அனைவரும் உணர்ந்த
ஒன்று. இத்தகைய வழக்குரைஞர்களும் நீதபதிகளும் இணையாக இருந்தால்தான் இவர்கள் கருத்து உரிய வகையில் செவிமடுக்கப்படும். இல்லையேல் “ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்னும் பழமொழிக்கேற்பவழக்குரைஞர்கள் கருத்து எடுபடாது.
மெய்யுடை ஒருவன் சொல்ல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே
(அதிவீரஇராம பாண்டியன் : வெற்றி வேற்கை.74)
என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஏழை என்றால் செல்வமற்ற நிலை யிலுள்ளவன் என்று மட்டும் எண்ணக்கூடாது. செல்வாக்கற்ற நிலையில் உள்ளவனும் ஏழைதான். நீதிபதிகளைவிட வழக்குரைஞர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டை உருவா்ககினால் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு வழக்குரைஞர்கள் சொல்லமுடியாத நிலைக்குச் சென்று தங்கள் கடமையிலிருந்து தவறுவர்.
சரியான வாதங்களை எடுத்துரைப்பதை விட்டுவிட்டு நீதிபதிகள் முகம்
கோணாக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு முகமனுரை கூறுவதிலும் ஆமாம்சாமி
போடுவதிலும் வாதுரையை வீணடிப்பர். அத்தகைய சூழலில் நீதி எங்கே பிறக்கும்?
வழக்குரைஞர்கள் கட்சிக்காரரைக் காப்பாற்ற
வேண்டும் என்பதற்காக வாதங்களை எடுத்துரைத்தாலும் மறுதரப்பு வழக்குரைஞரின்
வாதுரைகளையும் கருத்தில் கொண்டு நடுநிலைமையுடன் ஆராய்ந்து நீதிபதிகள் நீதி
வழங்குகின்றனர். எனவே, பண ஆதாயத்திற்காக வழக்குரைஞர்கள் தவறாக விளக்கலாம்.
அதுபோல், சில நேரங்களில் பரபரப்புபெற்ற செய்திகளின் அடிப்படையில்
குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படுவதும் வழக்கிற்கு அப்பாற்பட்ட காரணங்களால்
குற்றவாளிகள் விடுதலை ஆவதும் அங்குமிங்குமாக நடக்கத்தான் செய்கின்றன. எனவே,
இத்தகைய வழக்குரைஞர்கள், நீதிபதிகள் செயல்கள் அடிப்படையில் பொதுவாக எண்ணக்கூடாது. எனவே, இருக்கையில் அமர்ந்து வழக்குகளை ஆராயும் நீதிபதிகளுக்குக் கண்களாகவும் செவிகளாகவும் வழக்குரைஞர்கள் விளங்குகின்றனர். இரு தரப்பாரிடையேயும் சமநிலை இருந்தால்தான் நீதி பிறக்கும். இல்லையேல் பார்வை சரியின்றி அநீதிக்கு வழிவகுக்கும்.
எனவே, உண்மையான நீதி பிறக்க
நீதிபதிகளுக்கு இணையாக வழக்குரைஞர்களும் கருதப்பட வேண்டும். முன்னாள்
வழக்குரைஞர்களும் பின்னாள் வழக்குரைஞர்களுமான இந்நாள் நீதிபதிகள் இதனை உணர
வேண்டும். அதற்கு வழக்குரைஞர்கள் சட்டம் 1961 பிரிவு 34 (1) இல் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தங்கள் தீங்கிழைக்கும். ஆதலின் இவற்றைக் கைவிட்டு, கணவன் மனைவி இருவரும் இணைந்த இல்லறமே நல்லறம் என்பதுபோல், தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணைந்து செயல்பட்டால்தான் அறம் தழைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 144, ஆடி 09, 2047 / சூலை 24, 2016
No comments:
Post a Comment