தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்
[ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள் உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர்
அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும்
தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி
ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள்
விண்ணப்பம் அனுப்ப வழி காட்டிச்சேர்க்கைக்கு வழி வகுத்தார்; மாமாவே
அழைத்துச் சென்று அங்கேசேர்த்தார்; தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பில்
ஆங்கிலப்பாடம் இருக்காது என்றும் தரம் குறைந்திருக்கும் என்றும் சொல்லி
5ஆம் வகுப்பில்தான் அவரைச் சேர்த்தனர்.
அனைத்து மாணாக்கர்களினும் மேம்பட்ட நிலையில் அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றமையால்
ஆசிரியர்கள், பிற மாணாக்கர்கள் என அனைவரின் அன்பிற்கும் போற்றுதலுக்கும்
உரியவராகப் பேராசிரியர் திகழ்ந்தார்; மாணவர் தலைவர் என்ற நிலைமை இல்லாத
அக்காலத்திலேயே பேராசிரியரைத் தங்கள் தலைவராகப் பிற மாணவர்கள் போற்றினர்;
சொல்வன்மை பெற வேண்டிச் “சொல்லாடல் கழகம்” ஒன்றை
அமைத்துப் பேராசிரியரையே அதற்கும் தலைவராக ஆக்கினர். விடுமுறை நாட்களில்
அருகில் உள்ள பெரிய பனங்காட்டில் கூட்டங்கள் நடத்தியமையால் பெரியோர்களும்
வந்து கேட்டு உற்சாகப்படுத்தினர்.
கல்வி என்பது புத்தகங்கள் மூலம் அறிவது மட்டும் அல்ல. வாழும் சூழலும் ஒரு புத்தகம்தான். இப் புத்தகம் பேராசிரியரைப் பண்படுத்தியது; சாதி வேறுபாட்டிற்கு எதிரான எண்ணத்தை விதைத்தது; பகுத்தறிவை ஊட்டியது; மனித நேயத்தை வளர்த்தது; உழைத்து உயர வழி காட்டியது. பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த சோமசுந்தரம்(பிள்ளை)
அவர்கள், மாணாக்கர்கள் நலனுக்கும் சுவைக்கும் ஏற்ற சுவையான உணவினை
அளிக்கச் செய்தார்; காய்கனி வாங்கும் பொறுப்பை மாணாக்கர்களிடமே
ஒப்படைத்தார்; உணவுச் செலவைக் கூட்டாமலேயே பத்து விழுக்காட்டு
மாணக்கர்களைக் கூடுதலாகச் சேர்க்கச் செய்தார்; காய்கனிச் செலவில் மிஞ்சும்
தொகையில் சிறப்பு உணவு வழங்கச் செய்தார்; தத்தம் வீட்டு நினைவு
நாட்களில் பிராமணர்களுக்கு மட்டும் விருந்தும் காசும் அளித்து வந்த
செல்வர்களை மாணாக்கர்களுக்கு விருந்தும் காசும் கொடுக்கச் செய்தார். அதே போல் நாட்டாண்மைக்கழகத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள், சாதிக்கொரு பந்தி என்பது போன்ற சாதிவேறுபாட்டு நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே பந்தி என்ற சமநிலையைச் கொணர்ந்தார்.
இவை யெல்லாம் பேராசிரியரிடம் நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்மான உணர்வு
முதலியவை மலர்ந்து மணம் வீசக் காரணம் ஆயின எனலாம். இறையருள் நம்பிக்கையும்
தன்மதிப்பு இயக்க ஈடுபாடும் உடைய சிலருள் ஒருவராகப் பேராசிரியர் மாறினார்.
பெண்களைப்போல் ஆண்களும் தலைமுடியை
வளர்க்கும் அக்கால வழக்கப்படி பேராசிரியரும் நீண்ட கூந்தலைப்போல் முடி
வளர்த்திருந்தார். இதனால் பேன்கள் பெருகித் தலையில் சிரங்குகள்
தோன்றிவிட்டன. மருந்து தடவினாலும் சிரங்குத் தொல்லை பொறுக்கமுடியாமல்
இருந்துள்ளது. ஆனால், தலைமுடியோ, ஒரு முறை நோய்வந்தபொழுது அவரின் அன்னையார்
வேண்டியதற்கு இணங்கத் திருப்பதி வேங்கட மலையானுக்கும் வைத்தீசுவரன் கோயில்
அப்பனுக்கும் உரியதாய் இருந்தது. ஆகவே அவ்விடங்களில்தான் முடியிறக்க
வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால், பேராசிரியர் உடல்நலனுக்கு
முதன்மை அளித்தார். இது பற்றி அவர் எழுதி உள்ளது வருமாறு:
“தலைமயிரைப்
போக்குவதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? உயிரைக் காத்த கடவுளுக்கு
மயிரைக் கொடுப்பது என்பது மூட நம்பிக்கையால் எழுந்ததாகும். சிரங்கு காரணமாக
மயிரை அகற்றுவது குற்றமாகாது. கடவுள் சீற்றம் கொள்ள மாட்டார் என்ற எண்ணம்
தோன்றியது; சில மாணவர்களும் இக் கருத்தை ஏற்றனர். பின்னர் மயிர் வினைஞரிடம்
சென்று தலைமயிரைப் போக்கிக் கொண்டேன். சிரங்கு தொலைந்தது. பின்னர்க்
கூந்தலை வளர்க்க விரும்பவில்லை. குட்டையாகக் கத்தரித்துக் கொள்ள விரும்பி
முன் பக்கம் பாதியை மழித்தும் பின்பக்கம் இக்கால முறைபோல்(crop)
கத்தரித்தும் விட்டுக்கொண்டேன். இது பெரும் புரட்சியாகி விட்டது. என்
வகுப்பில் – ஏன் பள்ளிக்கூடத்திலும் – இம்மாதிரி (‘கிராப்’ஆக) யாரும்
தலைமயிரை வெட்டிக் கொள்ளவில்லை.. . . . .”
சில திங்கள் கழித்து முழுமையாகக்
கத்தரித்து(‘கிராப்’) வைத்துக் கொண்டாராம். நடுநிலைப்பள்ளியில் படிக்கும்
பொழுதே பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயலாற்றியது அக்காலத்தில் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது. மன்பதையின் மூடப்பழக்க வழக்கங்களுக்குத் தன்னை இரையாக்கிக் கொள்ளாமல் பகுத்தறிந்து பாங்குடன் நடந்து கொண்ட இப்போக்கு அவரின் வாணாள் முழுவதும் நின்று நிலைத்து உள்ளது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment