படைப்பாக்கப் பொதும உரிமப்பரவலாக்கலுக்குப்
பாராட்டு!
தொடர்நடவடிக்கைகளுக்கு வேண்டுகோள்
எல்லாத்தமிழ் நூல்களும் எண்மியமாக்கப்பட வேண்டும் என்பதே இணையத்தமிழ் ஆர்வலர்களின் உள்ளக்கிடக்கை. இது குறித்துப் பலரும் பேசியிருந்தாலும் தமிழ்க்காப்புக்கழகம்
சார்பில் முறையாக முறையீடு அளித்துத் தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
எல்லா நூல்களையும் எண்மியமாக்கல் என்பது பொதுவான கருத்து. அதைப்
படிப்படியாக எப்படிச் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளோம். முதலில் அரசுத்
துறைகள், அரசுசார் நிறுவன நூல்களை எண்மியமாக்க வேண்டும் என்பது போன்று
படிநிலைகளை வேண்டியிருந்தோம்.
தமிழ்இணையக் கல்விக்கழகத்தின்
ஆட்சிக்குழுவில் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலர், தமிழ்வளர்ச்சித்துறை
இயக்குர் ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்பது போன்ற பல முறைப்பாடுகளை அரசு
ஏற்று உரிய ஆணை பிறப்பித்துள்ளது. அதற்காகத் தமிழக அரசையும் கருத்துடன் கவனித்து ஆவன செய்யும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் திரு தா.கி. இராமச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இவை போல் நூல்களை எண்மியமாக்குதல் தொடர்பான கோரி்க்கையையும் ஏற்று ஆணை
பிறப்பித்தமைக்காக அரசையும் தகவல் தொழில்நுட்பச்செயலரையும்
பாராட்டுகின்றோம்.
இந்தக் கோரிக்கை முனைவர் நக்கீரன் இயக்குநராக இருந்த பொழுதே வைக்கப்பட்டதுதான். அவரும் நிறைவேற்றும் ஆர்வத்துடன்தான் இருந்தார். இருப்பினும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப. இணையக்கல்விக்கழகத்தின் இயக்குநர் பொறுப்பேற்ற உடன், ஓர் எழுச்சி ஏற்பட்டடது.
முந்தைய மடல்களின் படிகள் ஆட்சிக்குழு
உறுப்பினர் என்ற முறையில் அவருக்கும் அனுப்பப்பட்டிருந்ததாலும், இவை
தொடர்பில் அவரிடம் பேசி வந்திருந்தமையாலும், இயக்குநர் பொறுப்பேற்றவுடன்,
த.இ.க.கழகத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவரம்
அனுப்புமாறு கேட்டிருந்தார். தமிழறிஞர்கள் கருத்துகளுக்கிணங்கவே
கணிணி வல்லுநர்கள் செயல்பட வேண்டும், இணையக்கல்விக்கழகம்
தமிழ்ப்பரப்பலுக்கும் வளர்ச்சிக்குமானதேயன்றிக் கணிணிக் கல்விக்கானதல்ல
என்று பலமுறை வலியுறுத்தியிருந்தமையால், தமிழறிஞர்கள் கருத்துகளுக்கே
முதன்மைஅளிப்பேன் என்றும் தெரிவித்தார். (கருத்தறிந்து செயல்படும் அவர்
கழற்றிவிடப்பட்டது தமிழ் ஆர்வலர்களுக்கு வருத்தம்தான்.)
எண்மியமாக்குதல் குறித்துப் பின்வரும் கருத்துகளை முன்னரே வலியுறுத்தி வந்தோம்.
தமிழில் உள்ள எல்லா நூல்களும் இணையத்தில் கிடைக்கும் வண்ணம் தமிழ்நூல்கள் தரவு அமையவேண்டும். சமற்கிருதத்தளத்தில் மத்திய அரசு முழுமையான நூற்பதிப்புகளை வழங்குகிறது. நாமும் அவ்வாறு செய்ய வேண்டும்.
. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள்
தமிழ்நூல்களை வெளியிட்டு வருகின்றன. நாம் அதை மின்னூலாகத் தந்தால்
விற்பனைப் பாதிப்பு, காப்புரிமை போன்ற சிக்கல்களால் இயலாமல் போகும். எனவே,
அனைத்துப் பல்கலைக்கழகங்களும் உ.த.நிறுவனம் முதலான நிறுவனங்களும் அனைத்து வெளியீடுகளையும் மின்னூல் வடிவில் அளிக்க அரசாணை பிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்நூல்களுக்கான இணைப்பினை நம் தளத்தில் தரவேண்டும்.
இவ்வாறு, மின்னூல் பதிப்புக்குழு, பிற
தரவுத்தளங்கள் இணைப்பு, மின்னூலாக்கப் பணிகளைப் பொதுமக்களிடத்தில்
ஒப்படைத்தல், அரசு நூலக நூல்களை மின்னாக்கம் செய்தல், மின்னூல் உரிமை
அளிப்பவருக்கே நூலக ஆணை, அனைத்துத் தமிழ் அகராதிகளையும் தமிழ்-பிறமொழி
அகராதிகளையும் தளத்தில் தரவேண்டும் என முன்னரே வேண்டுதல்கள்
அளித்திருந்தாலும் மீண்டும் அவர் வேண்டியதற்கிணங்கத் த.இ.க.கழகம் புதிய
பொலிவிற்கான கருத்துரு என அனுப்பினோம்.
கருத்துருவில் பின்வரும் குழுக்கள் அமைக்க வேண்டியிருந்தோம்.
1. செம்மையாக்கக் குழு:
2. மின்னூல் பதிப்புக்குழு:
3. மீள்பார்வைக் குழு :
4. சொல்லாக்கக் குழு:
5. நன்னடைக் குழு:
6. பணித்தரவுக் குழு:
7. கணிணிசார் பணிஆய்வுக்குழு:
8. நெறியாளர் குழு:
9. பணியாளர் நலன்குழு:
மேலும்,
10. மொழிக்கொலைக்குத் துணை நிற்கக்கூடாது :
11. அயல்மொழியருக்கான தமிழ்க்கல்வி – அறிமுகப்படுத்தல்
என்பன குறித்தும் வேண்டியிருந்தோம்.
இவற்றுள் எண்மியமாக்கம் குறித்துப் பின்வரும் கருத்துகள் தரப்பட்டன.
1. இதுவரை எண்மியமாக்கப்பட்ட நூல்களின் பட்டியலைத் திரட்டி த.இ.க.க.தளத்தில் தரவேண்டும்.
2. இதுவரை மேற்கொள்ளாத நூல்களை மட்டுமே எண்மியமாக்க வேண்டும்.
3. அலகிட்ட ஒவ்வி(scan) வடிவில்-பட வடிவில்- மட்டுமல்லாமல் படி எடுக்கும் வகையில் எழுத்து வடிவிலும் தரவேண்டும்.
4. இதற்கெனப்
பணியாளர்களை நியமிப்பின் மிகுதியாகச் செலவழித்தாலும் குறைவான பயன்தான்
கிட்டும். எனவே, பொதுமக்களிடம் பொறுப்பை ஒப்படைத்து உரிய கட்டணங்களை
உடனுக்குடன் தர வேண்டும்.
5. கட்டணமில்லாத்
தளமாகத்தான் இருக்க வேண்டும். அதே நேரம் எண்மியமாக்க உரிமை தர விரும்பா
பதிப்பாளர்கள், படைப்பாளர்கள் கட்டணமுறையில் அவற்றைத் தருவதாயின் கட்டணம்
பெற்றுக் கொண்டு அத்தகைய பக்கங்களுக்கான இணைப்பைத் தரலாம்.
6. மொழிக்கொலை புரியும் சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், பிற படைப்புகளை எண்மியமாக்குவதை அடியோடு தவிர்க்க வேண்டும்.
7. பல்கலைக்கழகங்கள்,
தன்னாட்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நூல்களை எண்மியமாக்க
ஊக்கப்படுத்தவேண்டுமே தவிர, அவர்களின் படைப்புகளைத் த.இ.க.க.
எண்மியமாக்கக்கூடாது.
8. எண்மிய உரிமை தருநர்க்கு மட்டுமே நூலக ஆணைகள் வழங்கப் பெற வேண்டும்.
9. நூலகத்திற்கு
வாங்கப் பெறா புதிய நூல்களுக்கு எண்மிய உரிமை தருவதற்காக நூலகத்துறையினர்
பதிப்பாளர்கள், நூலாசிரியர்களுக்கு உரிய தொகை தருவதற்கும் வேண்டலாம்.
தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, அ.ஆ.நிலை
எண் 105 நாள் ஆனி 17, 2047 / சூலை 01, 2016 இன்படி, தமிழ்ப்பல்கலைக்கழக
வெளியீடுகள், ஆய்வேடுகளையும் பிற அரசுத்துறையினரின் திரட்டல்களையும்
படைப்பாக்கப் பொதும உரிமங்களின் கீழ், வெளியிடுமாறு தமிழ்வளர்ச்சித்துறை
ஆணை பிறப்பித்துள்ளது.
இதன் தொடர்பில் தமிழ்வளர்ச்சிச் செயலருக்கும் தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கும் தஇ.க.கழகத்தினர், த.தொ.நுட்பத்துறைச்செயலர், செயலகத்துறையினர் ஆகியோருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்ற போதும் எண்மியமாக்கல் பணிக்கான முழுமைச் செயல்திட்டமாக இஃது அமையாது. ஆனால், த.இ.க.க. நல்லமுறையில் தொடங்கி வைத்து விட்டது. எனவே, பிற வேண்டுகைகளையும் நிறைவேற்றும் என எதிர் நோக்குகின்றோம்.
த.இ.க.க.கூட்டங்களில் எண்மியமாக்குதல்
பற்றி வலியுறுத்தி வந்தமையையும் அரசிற்கு முறையீடுகள் அனுப்பி வந்தமையையும்
அறிந்த நண்பர்கள், “இவை குறித்துக் குறிப்பிட்டால், பிறரும் தொடர்
நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பாக இருக்கும்; எனவே எழுதுங்கள்” என்றனர்.
தஇககழகத்தல் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் உமாராசு,
”தனியார், தனி அமைப்புகள் நூல்களை எண்மியமாக்கப் பணம் செலவழியும்;
இயலாது” என்று சிலர் சொன்னபோது, திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., ‘‘செலவானாலும்
அரசு பணம் கொடுத்து உரிமைவாங்கலாம், எனவே இக்கருத்துருவை நிறைவேற்றலாம்’’
என்று உங்கள் கருத்துரு தொடர்பான உரையாடலில் நம்பிக்கையுடனும்
உற்சாகத்துடனும் தெரிவித்தது இன்னும் நி்னைவில் உள்ளது. இவற்றை யெல்லாம்
தெரியப்படுத்தினால்தான் நாம் எக்கருத்தையும் தொடர்ந்து வலியுறுத்தினால் அதனை நிறைவேற்ற முடியும் என்பது பிறருக்குத் தெரியும் எனவே எண்மியமாக்கல் குறித்து எழுதித் தொடர்நடவடிக்கை எடுங்கள்” என்றார்.
இலங்கை அரசு தமிழ் எண்மிய நூலகத்தைச் செயல்படுத்துகிறது.
இது போன்ற பிறநாட்டுத் தமிழ் எண்மிய இணைப்புகளையும் தர வேண்டும் என்பது
போன்ற இனிச் செயற்படுத்த வேண்டியன குறித்தும் அரசிற்குத் தனியே அனுப்பி
வைக்கப்படும் என்றும் தெரிவிக்கிறோம்.
நம் உழைப்பை அறிந்து அது பதிவாக்கப்பட வேண்டும் என விரும்பிய நண்பர்களுக்கு நன்றிகள்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்(திருவள்ளுவர், திருக்குறள் 673).
செல்லும்வாய் நோக்கிச் செயல்(திருவள்ளுவர், திருக்குறள் 673).
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 150, ஆவணி 19, 2047 / செப்.04, 2016
No comments:
Post a Comment