2/3

  Department – துறை என்கிறோம். அரசு பல்வேறு துறைகளாகச் செயல்படுகின்றது. இவற்றை மேலாண்மைப்படுத்தும் செயலகத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு தேவை. ஏனெனில், செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தன்னுள் பல துறைகளை அடக்கியது. எடுத்துக்காட்டாகச் செயலகத்தில் உள்ள உள்துறையில் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை போன்ற பல துறைகள் அடங்கும். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழிலும் இரண்டிற்கும் துறை என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துவது குழப்பத்தைத்தான் தருகின்றது. இரண்டிற்கும் வெவ்வேறு சொல் இருப்பின், இடர் நீங்கும். எனவே, செயலகத்துறைகளை நாம் திணை என்று  வேறுபடுத்திக் கூறின் ஏற்புடைத்தாய் இருக்கும். ஆதலின் இதன்படி, உள்திணை, நிதித்திணை, பொதுத்திணை என்று நாம் கூறலாம். இத்திணையில் அடங்கியனவே பல்வேறு துறைகள். எனவே, இவ்வாறு வேறுபடுத்திப் பயன்படுத்தினால் திணை, துறை வேறுபாடுகளை நன்கு புரிந்து கொள்ளலாம்.

நாம் Dispensary, Clinic, Hospital போன்றவற்றை மருத்துவமனை என்றே குறிப்பிட்டு வருகிறோம்.

Clinic (நோய்) தணிப்பறை
Dispensary பிணி நீக்ககம்
Hospital மருத்துவ விடுதி
Nursing Home (மருத்துவப்) பேணகம்
Diagnose Center நோய்நாடி மையம்

என வேறுபடுத்தி  வகைப்படுத்தின் சிறப்பாய் அமையும்.
கலைச்சொல் தொகுப்புகளை எடுத்துக்கொண்டு இவ்வாறு நாம்ஆய்ந்து பார்த்தோம் என்றால் கலைச்சொல்லாக்கத்தில் நாம் தொடக்கநிலையில்தான் இருப்பது புலனாகும்.

  ‘இக்காலத்தமிழில் சொல்லாக்கம்’ என்ற, முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டின் பின்னிணைப்பாக முனைவர் இ.மறைமலை அளித்துள்ள ஆட்சிச்சொல்லடைவு இவ்வுண்மையைப் புலப்படுத்தும்.
  ஓர் ஆட்சிச்சொல்லகராதியும் 44(துறைகளின்) சிறப்புச்சொற்கள் துணை அகராதிகளும் சேர்ந்து உள்ள 1172 பக்கங்களையும் அகரவரிசைப்படி இதில் தொகுத்து அளித்துள்ளார். (1250 பக்கங்கள்). இத்தொகுப்பில் ஒரே தமிழ்ச் சொல்லே பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கும் பொருளாக உள்ள நிலைமை ஒவ்வொரு பக்கத்திலுமே மிகுதியாகக் காணக் கிடக்கின்றது. (அதே நேரத்தில் ஒரே ஆங்கிலச் சொல்லுக்குப் பல்வேறு தமிழ்ச்சொற்பொருள் தெரிவித்துள்ள நிலைமை மிகமிகக் குறைவாகவே உள்ளது.)
எடுத்துக்காட்டாகப்  பக்கம் 2இல் Ousting, Eradicate, Expel, Remove   ஆகிய சொற்களுக்கு அகற்று(தல்) என்ற ஒரே பொருள்தான் வெவ்வேறு துறைகளில் தரப்பட்டுள்ளன. மாறாக,
Ousting – அகற்றல்
Eradicate – வேரறு
Expel – வெளியேற்று
Remove – நீக்கு
எனத் தனித்தனிப் பொருள் வழங்கப்பட்டிருப்பின் பொருத்தமாக இருக்கும்.

பக்கம் 31, 32களில்  composition, constitute, construction, dispensation, disposition, installation, structure,
என்று பல சொற்களுக்கும் அமைப்பு என்றே பொருள் தரப்பட்டுள்ளது.   அமைப்புமுறை என்பதுபோல் அமைப்பு அடிப்படையிலான சொற்களும் பல்வேறு சொற்களுக்கு இணையாகத் தரப்பட்டுள்ளன. அமைப்பு என்று பொருள்தரப்பட்டுள்ள சொற்களைப் பின்வருமாறு வேறுபடுத்தினால் நன்று.

composition கூட்டமைப்பு
constitute அமைவம்
construction அமைப்பு
dispensation வகைமை
disposition ஒழுங்கமைவு
installation அமர்விப்பு
structure கட்டமைப்பு
design பாங்கு

இவைபோல் பிற சொற்களுக்கும் தனித்தனிப்பொருள் வழங்க வேண்டும்.
  பக்கம் 780இல் நிறுவனம் என்ற பொருளில் firm, establishment, organisation, institution, corporate என்னும் சொற்கள் குறிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

firm நிறுவனம்
establishment பணியமைப்பு
organisation அமைப்பகம்
institution நிலையம், (பயிற்சி நிலையம் எனில் ) பயிலகம், (நிறுவுவதைக் குறிப்பின்) நிறுவம்
corporate கூட்டாண்மை


(தொடரும்)
. இலக்குவனார் திருவள்ளுவன்
ஆறாவது உலக தமிழ் மாநாட்டில் அளிக்கப் பெற்ற கட்டுரை,
கோலாலம்பூர், மலேசியா