அகரமுதல
மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!
மாநிலக்கட்சிகள் கூட்டைமப்பு அமைத்திடுக!
தமிழ்நாடு-புதுவையில் ஓரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வாகை சூட வைத்துள்ளார் மு.க.தாலின். அவரது தனித்தன்மையை ஏற்க வேண்டுமே தவிர, அவரின் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்ப் பேசக்கூடாது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். எனினும் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசுநருக்கும் விடையிறுக்கும் முகமாக வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளார். சிறப்பான வெற்றிக்கு அடிததளமாகவும் அரணாகவும் இருந்த மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்.
தலைமைய(மைச்ச)ர் பதவி ஆசையில் கூட்டணிக்கு உடன்படாத மே.வங்க, உ.பி. முதலான வட மாநிலத் தலைவர்கள் மு.க.தாலின் வழியைப் பின்பற்றி இருந்தால் இன்றைக்கு மீண்டும் பா.ச.க. அரியணையில் ஏறியிருக்க முடியாது. எனவே, பிற மாநிலத்தலைவரகளையும் இணைக்கும் பொறுப்பை ஏற்று மு.க.தாலின் செயல்படவேண்டும்.
தமிழ், தமிழக நலன் கருதி முதலில் அவர் செயல் பட வேண்டும்.
தில்லியில் தமிழக அரசின்சிறப்புச்சார்பாளர் என ஒருவர் உள்ளார். இப்பொறுப்பில் இருந்தவர்கள் தமிழக நலன் கருதி என்ன செய்தார்கள் அல்லது இருப்பவர் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. எனவே, தமிழ்நாட்டின் சார்பாக மத்தியத் தொடர்புக் குழு ஒன்றை மத்தியில் அமைக்க வேண்டும். அனைத்துக்கட்சியின் சார்பாண்மையும் இதில் இருக்க வேண்டும். இதன் மூலம் எல்லாத் தொகுதிகளிலும் உள்ள குறைகளை நீக்கவும் மத்தியில் நிலுவையாக உள்ள திட்டங்களை நிறைவேற்றவும் கட்சிச்சார்பின்றிப் பாடுபட வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு தொகுதியும் தனிக்கவனம் பெற்று மக்களின் குறைகள் களையப்படும்.
“பிற கட்சித் தலைவர்களிடம் உயர்தனிச்செம்மொழியான தமிழின் பெருமையையும் உலக மொழிகளின் தாயானஅதனை இந்திய மக்கள் படிப்பது என்பது மூதாதையருக்குச்செலுத்தும் மதிப்பு என்பதையும் புரியச் செய்து தமிழின்சிறப்புகளை அவரவர் பகுதிகளில் பரப்ப நற்றொண்டாற்றவலியுறுத்தி வெற்றி காண வேண்டும்” என முன்பு குறிப்பிட்டாற்போல், தமிழைப்பற்றிய அறியாமையில் உள்ள பிற மாநிலத்தவருக்கு உணர்த்தும் வண்ணம் தமிழின் சிறப்பை உணர்த்தும் பரப்புரையை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
நாம் முன்பு குறிப்பிட்ட சிலவற்றை மீள நினைத்துப் பார்க்கிறோம்.
இடைத் தேர்தல்கள் நடந்ததெனில் இன்றைய சூழலில்திமுகவிற்கு அவற்றில் வெற்றி பெற வாய்ப்பில்லை. எனவேபொதுத் தேர்தல்களில் திமுக கவனத்தைச் செலுத்தவேண்டும். அதற்கு இந்திய அரசியலில் தாலின் முனைப்புடன் ஈடுபட வேண்டும். (இந்திய அரசியலில்தாலின் கவனம் செலுத்த வேண்டும்,15.10.2018)
தாலின் தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் இந்தியஅரசியலிலும் கால்பதித்துத் தமிழ்நாட்டின் உயர்விற்குப்பாடுபடவேண்டும். (செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! 26 பிப்பிரவரி 2017)
நாம் குறிப்பிட்டபடி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி முழு வெற்றி பெறவில்லை. ஆனால், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் முழு வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமிழ்நாட்டு நலன் கருதியும, இந்திய அரசியல் நலன் கருதியும் முனைப்புடன் இந்திய அரசியலில் ஈடுபடவேண்டும்.
இந்தியக்கட்சிகளை வழிநடத்தும் திசைகாட்டியாகத் தாலின்மாற வேண்டும் ……. எப்பொழுதும் பிற கட்சித் தலைவர்கள், இவர் கருத்திற்கு மதிப்பு கொடுக்கும் அளவில் தாலின்தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டுத் தன்னைஉயர்த்திக்கொள்ள வேண்டும்.(மத்தியத் தலைவரானார் தாலின்! முன்மொழியுநராக மாறுக! – 25 சூன் 2017 )
மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியாமாறத் தாலின் இராகுலுடன் இணைந்து செயல்பட்டு வலிவும்பொலிவும் மிக்க நாடாக நம் நாட்டை மாற்ற வேண்டும்.
“தன்னாட்சி மாநிலங்களின் கூட்டாட்சி குறித்து வலியுறுத்தவேண்டும். …..சம உரிமையுடைய கூட்டாட்சியாக இந்தியஒன்றியத்தை மாற்றப் பாடுபட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
இக்கருத்துகளுக்கு இணக்கமாக, “மாநில நலன்களும்உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றைமீட்டெடுக்கவும் சனநாயகம் காக்கவும் அமைதியானஅறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்” என மு.க.தாலின் தொண்டர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்தவற்றைச் செயல்படுத்த மாநிலக் கட்சிகளின்கூட்டமைப்பு அல்லது மாநில நலன்களுக்கானகூட்டமைப்பை அமைத்து இந்திய அரசியலைத் தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும்.
பா.ச.க. வெற்றி குறுக்கு வழியிலான வெற்றி, மோசடியிலான வெற்றி என வாக்கெடுப்பிற்குப் பிந்தைய செய்திகள் உணர்த்துகின்றன. எதிர்க்கட்சிகள் அமைதியாக இருந்து ஆக்கப்பணிகளையும் விழிப்புணர்வுப் பணிகளையும் மேற்கொண்டால் இந்த ஆட்சி நிலைக்காது. ஒரு வேளை அவ்வாறு நடைபெறாவிடிலும் அடுத்த பொதுத்தேர்தலில் பா.ச.க.வை வெல்ல வேண்டுமென்றால் இப்பொழுதிருந்தே செயலாற்ற வேண்டும். எனவே, மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பு மூலம் அனைத்துக் கட்சிகளின் கருத்து ஒற்றுமையையும் செயல் ஒற்றுமையையும் உருவாக்க வேண்டும்.
இன்றைய சூழலில் இதைத் தொடங்கினால் பிற மாநிலக்கட்சிகள் இவரின் கீழ் இணையும். காலங்கடந்து முயன்றால் அவரவர் தங்களைத் தலைவராக எண்ணி ஒதுங்குவர். பயன் இராது. “காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்”வதுதான் நல்லது.
அனைத்துக் கட்சியினரும் பகையாகக் கருதுபவரையும் நட்பாகக் கருதி இணைந்து செயல்பட்டால் அவர்களுக்கும் நல்லது என உணர வேண்டும். எனவே, தற்செருக்கு எதுவுமின்றி மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பின் மூலம் மாநிலக்கட்சித்தலைவர்களின் மாநிலங்களின் உரிமையை மீட்கவும் காக்கவும் வேண்டும்.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல் (திருவள்ளுவர், திருக்குறள் 679)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment