அகரமுதல
மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக!
தேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்?
தேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை.நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான் தேவை.
ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று வாக்கு இல்லை என்று திரும்புவோர் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். இந்தத் தேர்தலிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50,000 மீனவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற வேதனையான முறையீடு வந்ததை அறிவோம். (கடந்த ஆண்டு கருநாடகாவில் 16,00,000 இசுலாமியர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.) இதற்குத் தேர்தல் ஆணையம்தானே பொறுப்பேற்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க முறையீடு வந்தது என்றால் அவ்வாறு நீக்க என்ன காரணம் என்று அறிய வேண்டாவா? பட்டியலில் பெயர்கள் மறைவதுபோல் பெயர்களுக்குரியவர்களும் மறைந்து விட்டார்கள் என எண்ணி விடுவார்களா?
புதுப்பேட்டையை சேர்ந்த சிசிலி மோரல் என்னும் பெண் வாக்கு மையம் சென்று பட்டியலில் பெயர் இன்மையால் வேதனையுடன் வீடு திரும்பி மாரடைப்பில் மரணமடைந்ததாகச் செய்தி வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் இவரின் உயிரைத் திருப்பித் தர இயலுமா?
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் ஏட்டுச்சுரைக்காய் போன்றது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மயிலாப்பூரில் குடியிருந்தேன். முதலில் குடியிருந்த தெருவிற்கு இரு தெரு தள்ளிக் குடி மாறினோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மயிலாப்பூர் அஞ்சலகம் சென்றேன். “எங்களிடம் வாக்காளர் பட்டியல் இல்லை” என்றார் அஞ்சலகத் தலைவர். எனவே, வாக்குச்சாவடி அமையும் பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளித் தலைமை ஆசிரியர்/முதல்வர், எங்களுக்கு அந்தத் தகவல் வந்தது. மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை என்றார். வாங்கி வைத்திருந்தால் நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே வைத்துச் சரிபார்த்துக் கொள்வோமே என்றேன். எப்படி இருந்தாலும் பொதுமக்கள் கூடுவது எங்களுக்குத் தொல்லைதான் என்றார்.
மாநகராட்சி மூலம் பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தமையை அறிந்து மகிழ்ந்தோம். ஆனால், வாக்குப்பதிவிற்குச் சென்றபொழுது பட்டியலில் பெயர்கள் அடிக்கப்பட்டிருந்தன. இணைப்பில் நீக்கப்பட்ட பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தன. காரணம் கேட்டதற்குத் தெரியாது என்றனர். தேர்தல் ஆணையம் கொடுத்திருந்த தொடர்பு எண்களில் பேசினேன். எங்களுக்குத் தெரியாது, மண்டல அலுவலரைக் கேளுங்கள், மேல் அலுவலரைக் கேளுங்கள், என மாறி மாறி மூவரிடம் பேசியும் பட்டியலில் பெயர்கள் உள்ளன, நீக்கப்பட்ட விவரம் தெரியவில்லை என்றனர். நான்காவதாகப் பேசிய துணை ஆணையர் நிலையில் இருந்த அம்மையார் தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சொன்னார். அங்குள்ள அலுவலகத்தினர், எங்களுக்குப் பட்டியல் வந்த பொழுது உங்கள் பெயர்கள் இருந்தன. நாங்கள்தான் நீக்கியுள்ளோம் என்றனர். காரணம் கேட்டதற்கு இறுதியாக நாங்கள் சிலவற்றைச் சரிபார்ப்போம். நீங்கள் வீடு மாறிச் சென்றதாகத் தகவல் வந்தது. எனவே, நீக்கி விட்டோம் என்றார். வீடு மாறிச்சென்றால் நாங்கள் வந்து வாக்களிக்கக் கூடாதா? நாங்கள் அதே பகுதியில்தான் மாறியுள்ளோம். நீங்கள் இப்படிப்பட்ட தகவல் வரும் பெயர்களைச் சிவப்பு மையால் குறித்துக் கொண்டு வாக்களிக்க வரும் பொழுது சரி பார்க்கச் சொல்லலாம் அல்லவா என்றேன். அதெல்லாம் தெரியாது. பட்டியல் முகவரியில் நீங்கள் இல்லை; நீக்கி விட்டோம் என்றார்.
அடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தோம். சரி பார்க்க என 2 பெண்கள் வந்தனர். பொதுவாகப் பெண்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஆடவர்களைத்தான் அனுப்புவார்கள். ஆனால், பெண்களே வந்தது வியப்பாக இருந்தது. அதைக்கேட்டதும் நாங்கள் வரவேண்டிய பெண்களின் நாத்தனார்கள் என்றும் தங்கள் கணவன்மார் வேறு பகுதிக்குச் சென்றிருப்பதாகவும் கூறினர். குடும்ப அட்டையில் உள்ள முகவரி மாற்றத்தைக் காட்டினேன். நாங்கள் ஊருக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் வந்தனர். அவர்கள் மறுநாள் மாநகராட்சி சென்று தேர்தல் பகுதியில் இதன் படியைத் தர வேண்டும் என்றனர். நீங்கள்தான் சரிபார்த்துவிட்டீர்களே ஏன் வரவேண்டும் என்றதற்கு நீங்கள் குடும்ப அட்டையின் படியுடன் 1 வாரம் கழித்தாவது வந்துதான் ஆக வேண்டும் என்றனர். 1 வாரம் கழித்து மாநகராட்சிக்குத் தொடர்பு கொண்ட பொழுது, விசாரணை அடிப்படையில் பெயர்கள் சேர்க்கப்படும், வர வேண்டா என்றனர்.
ஆனால், பெயர்கள் சேர்க்கப்படவில்லை. வழக்கம்போல் முறையீடு அனுப்பினேன்; தலைமைச் தேர்தல் அதிகாரிக்கு அடுத்த நிலையில் இருந்த அம்மையாரிடம் பேசினேன். “மன்னித்து விடுங்கள். இதை விட்டு விடுங்கள். வரும் சனவரியில் அடுத்த அறிவிப்பு வருகிறது. அதில் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலில் வாக்களிக்கலாம். உங்கள் குடும்பத்தினர் பெயர்கள் சேர்க்கப்படுவதற்கு நான் பொறுப்பு” என்றார். அவ்வாறு சேர்த்து அடுத்த தேர்தலில் வாக்களித்தோம். ஆனால், நாம் வாக்குரிமையைக் காக்க இப்படிப் போராட வேண்டிய சூழல் இருப்பது சரிதானா?
சிக்கலுக்கேற்ற நடைமுறைகளை மாற்றிக் கொள்ளாமல் 100 விழுக்காட்டு வாக்காளர் பதிவில் கருத்து செலுத்தாமல் வாக்காளர் விழிப்புணர்வில் தேவையற்ற வீண் செலவுகளைச்செய்து கொண்டு பெருமை கொள்கிறது தேர்தல் ஆணையம்.
ஒருவர் முகவரி மாறியதாகத் தகவல் வந்தால், அஞ்சலகம் அல்லது காவல் நிலையம் மூலம் மாறிய முகவரியை அறிந்து பட்டியலில் உரியவாறு பெயர் இடம் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
குடும்ப அட்டை, ஆதார் அட்டை மூலமும் முழுமையான வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் உருவாக்கலாம்.
இந்நாட்டுக் குடிமக்களில் வாக்களிக்கும் அகவை எட்டிய அனைவர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இந்த அடிப்படைப்பணியைக்கூடச் செய்ய முடியாவிட்டால் தேர்தல் ஆணையம் எதற்கு? கலைத்து விடலாமே! அரசின்தேர்தல் பணித் துறை இந்தப் பணியை ஆற்றினால் போதும்.
அடுத்தவர் கூறியும் செய்வதில்லை. தானாகவும் செயல்படுவதில்ல. இத்தகைய அமைப்பு இருக்கும் வரை நோயே!
நோயைப்போக்குவோம்! மக்களாட்சியை மாண்புறச்செய்வோம்!
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.(திருவள்ளுவர், திருக்குறள் 848)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment