Sunday, September 30, 2012

மூ மா(Dinosaur)


மூ மா(Dinosaur)
இலக்குவனார் திருவள்ளுவன்
ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை.  நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை - ஊர்வனவற்றை  மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை  முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள்.  இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.

 மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான்  தயனோசர் என்னும் சொல்லும் குறித்தாலும், ஊர்வன அல்லாத சில உயிரிகளும் இவற்றில் அடங்கும் என்பதால், தமிழறிந்தோர் தவறு என எண்ணுவர். எனவே, மா என்பது விலங்கினத்தைக் குறிப்பதால் இவ்வகை உயிரினங்களை மூமா எனலாம். இவற்றுக்கும் முந்தையவை  தொன்மா  ஆகும்.  எனவே மூமா  என்பதைக் கேலியாக எண்ணாமல் பயன்படுத்தினால் எளிய பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மூமா வகைகளை அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கம் முதலியவற்றின் அடிப்படையில்தான் பெயரிட்டுள்ளனர். அவ்வாறே நாமும் தமிழில் கூறலாம். எனினும் சில உயிரினங்களை அவற்றின் நேர்  பொருளில் குறிப்பதைவிடத் தோற்றம் அல்லது உண்ணும் முறை அல்லது செயல்பாட்டு அடிப்படையில் கூறுவதே ஏற்றதாக இருக்கும். மேலும், இவ்வினங்கள் நீர் வாழ்வன அல்லது பறப்பனவாக இருப்பின் அதற்கேற்ற வகையில் மீனம், நீரி, புள்(பறவை) முதலான அடைமொழிகளுடன் அழைக்கலாம். தமிழில் குறிப்பிடுவதால்  அதன் உடல் அமைப்பை வைத்துக்கொண்டே பெயரைப் புரிந்து கொள்ளவும் அல்லது பெயர் மூலம் உருவ  அமைப்பைப் புரிந்து கொள்ளவும் இயலும். சான்றாகப் பரு மூமா என்னும் பொழுது மிகவும் பருத்துள்ள மூமா எனப் புரிந்து கொள்ளலாம். அல்லது மூன்று கொம்புடைய - முக் கொம்புடைய- மூமாவின் படத்தைப் பார்த்தால் முக்கொம்பு மூமா  எனப் புரிந்து கொள்ளலாம். புரியாமல் பிறமொழிச் சொற்களை மனப்பாடமாகக் கூறுவதை விடப் புரிந்து சொன்னால் எளிதில் மனத்தில் பதியுமல்லவா?
மூமா  வகைகளை இனிப் பார்ப்போம்.


● ஆப்பிரிக்க வேட்டைமூமா (Afrovenator):
 ஆப்பிரிக்க வேட்டையாளர் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்க வேட்டை மூமா எனத் தமிழில் கூறலாம். விலங்குபோல் காலும் மூன்று விரல்களும் கொண்ட இருகாலி. ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. இதன் மூக்கிலிருந்து வால் வரை ஏறத்தாழ 9 கோல்(மீட்டர்) நீளம் உள்ள விலங்கு; இதன் எடை ஏறத்தாழ  1.5 பாரம்(டன்).

● ஈரளவிப் பல்மூமா /இரை கொல் மூமா  (Dimetroden):
 வெட்டுப்பற்களும் கூரிய பற்களும் என  ஈரளவுப்  பற்களை உடையன என்னும் பொருளில்  பெயரிடப்பட்டுள்ளது. ஈரளவிப் பல்மூமா என்பது  சரியாக அமையும். ஏனெனில்  தோற்றத்தின் அடிப்படையில் இதனை  மூத்த ஊர்வனவற்றுடன் கருதினாலும் இவ்வினம் அதற்கும் முந்தைய பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இரையைக் கொன்று தின்னும் மூத்த உயிரினம் என்னும் பொருளில் இரைகொல் மூமா  என்றும் சொல்லலாம். இரையைக் கொன்று தின்பன பலவாக இருப்பினும் மூத்த இனம் என்ற வகையில் அச் சிறப்பை இவ்வுயிரினத்திற்குத் தரலாம். 285 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 3.5 கோல்(மீட்டர்)/11 அடி நீளமானது; சிறு விலங்குகளைக் கொன்று இரையாக உண்ணும் உயிரி; முதுகுத் துடுப்பு உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த உதவும்.

● கிளியலகி மூமா(Achelousaurus):
 கிரேக்கத் தொன்மைக் கதையில் குறிக்கப்படும் ஆக்கிலோசு (Achelous)என்னும் கொம்பிழந்த ஆற்றுத் தேவதையின் பெயரில் இம் மூமா அழைக்கப்பெறுகிறது.  தோற்றத்தில் இதன் மூக்கு,  கிளியின்அலகைப் போல் உள்ளதால் நாம் இதனைக் கிளியலகி மூமா எனலாம். இது 74  நூறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூமா எனப்பெறுகிறது.  இதன் உயரம் 6 கோல்(மீட்டர்). இது பயிருண்ணி விலங்கு.


● கொடு நக மூ மா  (deinonychus):
 பயங்கரமான கை என்னும் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. கொடு(வளைந்த) நகம் உடையதால் கொடுநக மூமா  என நாம் அழைப்பின் ஏற்றதாக இருக்கும்.  மனிதனின் அளவே உயரமானது; விரைவாகச் செல்லக் கூடியது. இரையாகும் உயிரிகளின் குடல்களைக் கிழித்து எடுப்பதற்கேற்ப 12 சிறுகோல்(செ.மீ)/4.5 அங்குலம் நீள வளைந்த நகங்களை உடையது.

● கொம்பு மூமா  (Agathaumas):
 பெருவிந்தை என்னும் பொருளுளில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொம்புமுக உயிரினங்களில் இவ்வகைதான் முதலில் கண்டறியப்பட்டது. கொம்புடைய மூமா என்பதால் கொம்பு மூமா என்று சொல்வது எளிதில் புரிவதாக அமையும். 65 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 30 அடி நீளமும் 6 பாரம்(டன்) எடையும் உடையது.

● சதை உண் மூமா  (Allosaurus):
 பல்லியினங்களில் இருந்து இதன் முதுகு மாறுபட்டு அமைந்துள்ளமையால் மாறுபட்ட பல்லி என்னும் பொருளில் இதற்குப் பெயர் சூட்டி உள்ளனர். பிற உயிரிகளின் சதைகளைக் கிழித்து உண்ணும் பழக்கமுடைய இதனைச் சதைஉண் மூமா என்று சொல்லலாம். 200 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  இருகால் உயிரினம்; 13 கோல்(மீட்டர்)/43 அடி நீளமும் இரண்டு பாரத்திற்கு(ton) மேல் எடையும் உள்ளது; 3 கோல்(மீட்டர்)/10 அடி நீளமானது.  

● சிதள் மூமா  (Stegosaurus):
 கூரைப்பல்லி என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. முதுகில் உள்ள சிதள்கள் கூரைபோல் அமைவதால் அவ்வாறு கூறுகின்றனர். அதைவிடச் சிதள் மூமா என்பது தமிழுக்கு ஏற்றதாக அமையும்.1.5 பாரம்(ton) எடையுள்ளது. முதுகில் உள்ள சிதள்கள் உடல் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும். 8 கோல்(மீட்டர்)/26அடி நீளமுள்ளது; தீங்கற்றது; பயிர் உண்ணி.


● சிறு மூமா  (Euparkeria):
 இங்கிலாந்து நாட்டு இயற்பியலாளர்-விலங்கியலாளர் வில்லியம் கிச்சன் பார்க்கர் (William Kitchen Parker :23.06.1823 - 03.07.1890)  என்னும் அறிஞரைப்  போற்றும்  வகையில் பார்க்கரின் சிறந்த விலங்கு என்னும் பொருள்பட இப்பெயர் இடப்பட்டுள்ளது. எனினும் சிறிய மூமா என்பதால் நாம்  சிறு மூமா என்று சொல்லலாம். 245 பேராயிரம் (மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; கோழி அளவு உடையது; ஊண் உண்ணி; வெகுவிரைவாகச் செல்லக் கூடியது.

● நெட்டெலும்பு மூமா (Acrocanthosaurus) :
 நெடுமுதுகெலும்புப் பல்லி என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. நெட்டெலும்புப் பல்லி  என்று சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, நெட்டெலும்பு மூமா எனலாம். இருகால் உயிரி; பிற உயிரிகளை இரையாகக் கொண்டு வாழும்;  இதன் நீளம் ஏறத்தாழ 12 கோல்(மீட்டர்); இதன் எடை  6 முதல் 7   பதின் பாரம் (மெட்ரிக் டன்).

● நெடுங்கழுத்தி மூமா(Mamenchisaurus):
  தாவர உண்ணி. 156 முதல் 145 பேராயிரம் (மிலலியன்) ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம். 9.3 கோல் (மீட்டர்)/31 அடி நீளமுடைய நெடுங்கழுத்தும் நீண்ட வாலும் உடைய நாற்கால் விலங்கு. மிக நீளமான கழுத்தையுடைய தோற்றத்தின் அடிப்படையில் நெடுங்கழுத்தி மூமா எனப்படுகிறது. இதன் நீளம் 21 கோல்(மீட்டர்).

● பயிர் உண் மூமா  (Dryosaurus):
 இதன்பின் கடைவாய்ப்பற்கள்  கருவாலி(ஓக்) இலை போன்று இருப்பதால் கருவாலி(ஓக்) பல்லி என்னும் பொருளில் அழைக்கின்றனர். பயிரினங்களை உண்பதால், பயிர் உண் மூமா என்று நாம் சொல்லலாம். சதைஉண் மூமாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக மிக விரைவாகச் செல்கிறது.


● பரு மூமா  (Brontosaurus):

 இடி முழக்கப் பல்லி என்னும் பொருளில் பெயர் கொண்டது. பருத்த உடல் அமைப்பின் அடிப்படையில் நாம், பரு மூமா என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 200 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 21 கோல்(மீட்டர்) /69 அடி நீளமுடையது.

● புடைப்போட்டு  மூமா(Stygimoloch) :
 ஃச்டைக்சு(styx) ஆற்றிலிருந்து வந்த பேய் என்னும் பொருளில்  அழைக்கப் படுகிறது.  பயிருண்ணி மூமா; இருகால் விலங்கு. இதன் தலை ஓட்டில் கொம்பு போன்ற 4 அங்குலப் புடைப்பு இருக்கும். எனவே, இதனைப் புடைப்போட்டு மூமாஎன்று சொல்லலாம். இதன் நீளம் 2 முதல் 3 கோல்(மீட்டர்); எடை 170 நிறை.

● புள்ளலகி மூமா(Pterodactylus):
 சிறகு விரல் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. பறவையின் அலகைப் போன்ற அலகு உடையது.  எனவே, புள்ளலகி மூமா என்று சொல்லலாம். மிக நீண்ட இறக்கை உடையது.

● பெரு மூ மா  (Tyrannosaurus):
 பல்லி அரக்கன் என்னும் பொருளில் குறிப்பிட்டுள்ளனர். அரக்கன் என்பது உயர்திணை. அரக்கனைப் போன்ற பெருந்தோற்றம் கொண்டது என்பதால் பெருமூமா என்று சொல்வதே சிறப்பாய் அமையும். 100 பதின்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினம். 5 கோல்(மீட்டர்)/16 .2 அடி உயரமும் 14 கோல்(மீட்டர்)/45 அடி நீளமும் உள்ளது; 6.8 பதின்பார(metric ton)எடை உடையது.

● முக்கொம்பு மூமா  (Triceratops):
 முகத்தில்  மூன்று கொம்புகளை உடையது. மூன்று கொம்புடைய முகம் என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. எனவே, மூன்று  கொம்புடைய - முக்கொம்புடைய - மூமா என்னும் பொருளில் முக்கொம்பு மூமா என்பது பொருத்தமாக இருக்கும். 6 பாரம்(ton) எடையுடையது; 9 கோல்(மீட்டர்)/30அடி  நீளமுடையது. இதுவும் பயிர் உண்ணியே.

● மூச்சிறகி(pteranodon):
 பெரும் சிறகின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  பெருஞ்சிறகினை  உடைய மூத்த இனம் என்பதால் மூச்சிறகி எனப்படுகிறது. 100 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். 7.5 கோல்(மீட்டர்)/25 அடி நீளத்தில் பெருஞ் சிறகுடையது. எனினும் பறவை போல் உயரத்தில் பறக்காது. தலையிலுள்ள தட்டைக் கொம்பு சுக்கான் போல் செயல்படும்.  இரையாகப் பிற உயிரைக் கொன்று தின்னும் இரைகொல்லி விலங்கு.

● மூ நீரி(Plesiasaurus):
 பல்லியை விட நீர் வாழ் மீனினத்துடன் ஒப்புமை மிகுதியாக உள்ளமையால் பல்லியை ஒத்தது என்னும் பொருளில் அழைத்துள்ளனர். நீரில் வாழும் உயிரி என்ற வகையில் தமிழில் தெளிவாகவே மூநீரி என்று சொல்லலாம். 200 பேராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம்; 5 கோல்(மீட்டர்)/16 அடி நீளமுடையது.

● மூப் புள்(archaeopteryx):
 தொன்மைச்சிறகு என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. சில நேரங்களில்  மூலப்பறவை அல்லது முதல் பறவை என்னும் பொருள்கொண்ட உருவோகெல்(Urvogel) என்னும் செருமானியப் பெயரிலும் குறிக்கப்படுகின்றது. மூப்புள் எனத் தமிழி்ல்  இப்பொருளில் சுருக்கமாகச் சொல்வது சிறப்பாக உள்ளது.  195-135 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த உயிரினம்; .5 கோல்(அரை மீட்டர்) நீளம் உடையது; காகம் அளவுடையது. சிறு வடிவப்பறவை. எனினும்  இதன் சிறகுகள் நீளமானவை.



● மூ மீனம்(Ichthysaurus):
மீன் பல்லி என்னும் பொருளில் அழைக்கப்பட்டாலும் நீர் வாழ் உயிரினமான இதனை மூ மீனம் என்பதே பொருத்தமாக இருக்கும். 2 கோல் முதல் 10 கோல்(மீட்டர்)/(6.6 அடி முதல் 33அடி) வரை நீளமுள்ளது. பொதுவாகச் சிறிய அளவிலே காணப்பட்டவை. 225 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த (கடற்பன்றி/டால்பின் வகை) உயிரினம். மீன்களை உண்பது. ஊனுண்ணி; பிற உயிரினங்களின் சதை முதலியவற்றை உண்ணும் உயிரினம்.

● மூப் பெரு முதலை(Deionosuchus):
 பயங்கர முதலை என்னும் பொருளில் பெயரிட்டுள்ளனர். பெருத்த உருவம் கொண்ட முதலை என்பதால் மூப் பெரு முதலை என்று சொல்லலாம். 75 பேராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம். 16 கோல்(மீட்டர்)/52அடி  நீளம் வரை உள்ளது.

 மேலும் நூற்றுக்கணக்கிலான மூமாக்கள் பற்றிக் கண்டறிந்து உள்ளனர். எனவே, இவற்றின் தொடர்ச்சியைப் பிறிதொரு நாளில் காணலாம்.

அல்லது

No comments:

Post a Comment

Followers

Blog Archive