Sunday, September 2, 2012

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி - Principle of Ilakkuvanar is the right way to get liberty

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி

  நட்பு : பதிவு செய்த நாள் : 03/09/2012

(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாள் இன்று.)

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
தமிழ் உணர்விற்கு வந்ததடா பஞ்சம்
என்பதுதான் இன்றைய தமிழ்நாட்டவர் நிலை. எனினும் பல தரப்பு மக்களிடையேயும் நம்நாடு தமிழ்நாடு நாமெல்லாம் தமிழ் மக்கள் என்ற எண்ணம் அரும்பி வருகிறது. எனவே,
எண்ணி மகிழுதடா நெஞ்சம்
தமிழ் உணர்வு மலருதடா கொஞ்சம்
எனச் சிறிது மகிழ்ச்சி கொள்ளலாம். உலகின் முதல் இனம் நம் தமிழினம், உலக முதல் மொழி நம் தமிழ் மொழி என்றெல்லாம் நாம் பெருமை பேசிக் கொண்டாலும்  கல்வி முதலான அனைத்திலும் நாம் அடிமைப்பட்டே கிடக்கின்றோம்.  அடிமைத் தளையை அறுக்கத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இக்குரலின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டாலும், பெரிய கட்சித் தலைமைகளின் கொத்தடிமைகளாகவே விளங்குகின்றனர். தமிழ்த்தேசிய வாணர்களும் கட்சி அரசியல் ஈர்ப்பாலும் தோழமைக் கட்சிகளின் பதவி நலம் சார்ந்த பிணைப்புகளாலும் உட்பகையினரிடமே உறவாடி வருகின்றனர். இதனால் உண்மையாகவே தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க முயல்வோர் பின்னடைவையே சந்திக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். தமிழ் மக்களாகிய நாம், நம் நாட்டிலும் பூமிப்பந்தின் பிற பகுதிகளிலும் முழு உரிமையோடு வாழ வேண்டும்.  இதற்கு  இன்று வழிகாட்டக்கூடியவர்களோ மாணாக்கர்களையும் இளைஞர்களையும் தலைமை ஏற்று நடத்திச் செல்பவர்களோ யாருமில்லை. ஆனால், தமிழ்த்தேசிய உணர்வைப் பரப்பித் தமிழ்ப்போராளியாக வாழ்ந்த பேராசிரியர்  முனைவர் சி.இலக்குவனாரின் கருத்துகளைப் பின்பற்றி நடந்தால் நாம் எளிதில் வெற்றி காண முடியும். பேராசிரியர் இலக்குவனார் நமக்குத் தந்த அறிவுரைகளே இலக்குவம் ஆகும். இலக்குவ நெறியில் நாம் வாழ்ந்தால் தமிழ் மக்கள் உரிமை வாழ்வுடன் உயர்ந்தோங்கித் திகழ்வர். தமிழ் மக்களும் அவர்களை வழி நடத்திச் செல்ல விரும்பும் தலைவர்களும் செல்ல வேண்டிய இலக்குவ நெறியில் ஒரு பகுதியை நாம் காண்போம்.

தேசிய நெறி :
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் ஒரு புறம்,  பிற அறிஞர்கள் வழியில் இலக்கியப் பணியில் ஈடுபட்டாலும் மறுபுறம் தமிழ்த்தேசிய அறிஞராகத் திகழ்ந்தார்.  நாம், மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழரே என்பதை வலியுறுத்தினார்.  இந்தியமும் திராவிடமும் பேசப்பட்ட காலத்தில்

தமிழரின் அரசை ஆக்குவோம்! – இனித்
 தமிழகம் சிதைவதைத் தாக்குவோம்!
 தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
 தரணியோர் மதித்திடச் செய்குவோம்!
என்றும்
 உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா!
 உன்றன் நாடும் உரிமை பெற்றிட உழைத்திடு தமிழா!
என்றும் எழுதி வந்தார்.

  இந்திய விடுதலைக்குப் பின்னரும், தமிழர்க்குத் தேசிய மொழி தமிழே என்பதை வலியுறுத்தி வந்தார். இவ்வுணர்வை அனைவரும் பெற்றால்தான் தமிழர் உலகெங்கும் பாதுகாப்புடன் வாழ இயலும். நம் கடமை, நம் தேசியம் தமிழே என்பதை எல்லா வகையாலும் எல்லார்க்கும் உணர்த்த வேண்டுவதே!

அரசு நெறி :
பேராசிரியர்  தனியுரிமை உடைய மொழி வழித் தேசியக் கூட்டரசே நமக்குத் தேவை என்றும் மொழி  வழி மாநிலங்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தி வந்தார். அவ்வப்பொழுது எழும்பும், மாநிலத்தில் தன்னாட்சி மையத்தில் கூட்டாட்சி என்னும் வெற்றுக்குரலால் எள்ளளவும் பயனில்லை. ஆசியக் கூட்டரசு, உலகக் கூட்டரசு என்னும் படிநிலைகள் வருவதற்காக  இந்தியக் கூட்டரசு வேண்டும் என்ற பேராசிரியர்  வழியில்  தேசிய  இனங்களின் கூட்டரசை நாம் வலியுறுத்திப் பெற்றால்தான் நம் துணைக்கண்டம் முழுவதும் அமைதி தவழும். நெடுங்காலம் தீராமல் உள்ள காசுமீர்ச்சிக்கல் போன்றவை எல்லாம் காணாமல் போய்விடும்.


தெரிவு நெறி :
அயல்மொழிக் கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்த்திப் பிறமொழிக் கலப்பு இன்றியே எழுதியும் பேசியும், இருக்கின்ற தமிழ்ப்பரப்பையாவது கட்டிக்காக்க வேண்டும் என்பதே பேராசிரியர் வேண்டுகோள்.  இதற்கு அரணான அரசு அமைய வேண்டும் என்பதற்காகத்தான் செந்தமிழைக் காப்போர்க்கே தேர்தலில் எம் வாக்கு என்பதே மக்களின் முடிவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ் காக்கும் உண்மையான தமிழார்வலர்களைத்தான் நாம் தேர்ந்து எடுக்க வேண்டுமே யன்றித் தமிழால் தங்களை மட்டும் உயர்த்திக் கொண்டு தமிழைப் புறக்கணிப்பவர்களை அல்ல. எனவேதான் தமிழ்ப்பகைவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என்றார்.

தூய்மை நெறி :
தமிழின் பேரால் ஆட்சிக்கட்டிலில் ஏறுபவர்கள் காலத்தில்தான் முன்பைவிட மிகுதியாகத் தமிழ்க் கொலைகள் நடைபெறுகின்றன. திரைப்படம், இதழ்கள் என அனைத்து ஊடகங்களிலும் நடக்கும் தமிழ்க் கொலைகளுடன் இப்பொழுது இணையத்தில் நடைபெறும் தமிழ்க் கொலைகள் கணக்கிலடங்கா.  ஒரு மொழியழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகிறது என்பதைச் சான்றுகளுடன் உணர்த்தியவர் பேராசிரியர். அதே நேரம் ஒரு மொழி பேசுநர் உரிமை வாழ்வு வாழாவிடில் அம்மொழியின் பயன்பாடு குறைந்து அம் மொழி அழியும்  என்பதையும் அவர் விளக்கி உள்ளார். தமிழர் உரிமைவாழ்வில் உயர்ந்த நிலையில்  இருந்தால்தான் தமிழ் வாழும் என்பதை வலியுறுத்தியவர் பேராசிரியர். தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்; தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும் என்னும் பேராசிரியர் முழக்கத்தை நாம் மறவாமல் தவறாமல் பின்பற்றி நடந்தால் உலகெங்கும் தமிழும் வாழும்! தமிழரும் வாழ்வர்! உரிமைவாழ்வினைப் பெறாத தால்தான், நம்மால் தமிழ் ஈழப்படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை என்பதையும் ஈழத்தமிழரசை உலகம்  ஏற்கும்படிச் செய்ய இயலவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே நாம் பிழையின்றியும் பிறமொழிக் கலப்பின்றியும் பேசி உழைப்பால் உயர்ந்த செல்வ நிலையை அடைந்து உரிமை வாழ்வைப் பெற வேண்டும்.

எழுத்து நெறி :
மொழியின் வாழ்வு எழுத்தில்தான் உள்ளது. எழுத்தைச் சிதைக்கும் பொழுது அம்மொழியும் அம்மொழி இலக்கியங்களும் சிதைந்து அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது என்பதை ஓயாமல் உணர்த்தியவர் பேராசிரியர். ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்தியமொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டும் என விதிக்கும் நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும் தடுக்கவேண்டும் என எழுதியும் பேசியும் வந்தார். இன்றைக்கு  அயல்மொழி எழுத்துக் கலப்பும்  அதை விரைவு படுத்தும் கிரந்தத்திணிப்பும  மிகுதியாக நடைபெறுகின்றன. எனவே, நாம் நம் எழுத்தைக் காத்து, மொழியைக்காத்து, இனத்தைக் காப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

பயன்பாட்டு நெறி :
 கல்வி மொழியாகவும் கலை மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இறை மொழியாகவும் அனைத்துநிலை மொழியாகவும் தமிழ்  பயன்படுமொழியாக அமைந்தால்தான் இவ்விலக்கை நாம் அடைய முடியும் என்பதையும் பேராசிரியர் வலியுறுத்தத் தவறவில்லை. இவற்றை நிறைவேற்றவே தமிழ்  உரிமைப் பெருநடைப் பயணத்தை அமைத்து அதனால் பாதுகாப்புச் சட்டப்படிச் சிறை சென்றது மூலம் தம் சொல்லும் செயலம் தமிழ்நலம் சார்ந்தனவே  என்பதை மெய்ப்பித்தவர் பேராசிரியர். ஊடக மொழியாகவும் பிற பயன்பாட்டு மொழியாகவும் தமிழே இருக்க  வேண்டும் என்பதே பேராசிரியர் காட்டும் பயன்பாட்டு நெறியாகும்.

உரிமை நெறி :
தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமையும் முதன்மையும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் மத்திய ஆட்சியிலும் சமநிலை உரிமை பெற்ற மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பதே பேராசிரியரின் பெருவிழைவு. ஆட்சிமொழி, பணித்தேர்வு மொழி, நாடாளுமன்ற மொழி, உச்ச நீதிமன்ற மொழி, அறிவியல் துறைகளின் மொழி என இந்தியும் ஆங்கிலமும் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் தமிழும் முழு உரிமையுடன் வீற்றிருக்க வேண்டும் என்பதே பேராசிரியரது முழக்கம்.

நூல் நெறி :
 வாழ்வியல் நூலாம் தொல்காப்பியத்தையும், வாழ்க்கைநெறி நூலாம் திருக்குறளையும் கண்களாகக் கொண்டு போற்றி முழுமையாய்ப் படித்துப் பின்பற்றி வாழவேண்டும்; சங்கஇலக்கியக் காலம் நம்பொற்காலம். சங்கஇலக்கியங்களை மக்களிடையே பரப்பவேண்டும் என்பனவும் பேராசிரியரின் பேரவா. தமிழக வரலாறு எழுதுவோர் தமிழர் கருவூலமாக அமைந்துள்ள தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும்.  அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும் என்பதைப் பேராசிரியர் நமக்கு இட்ட கட்டளையாகக் கொண்டு வரலாற்றுப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியத்தையும் பிற சங்கஇலக்கிய வரலாற்றுச் செய்திகளையும்   சேர்க்க வேண்டும்.

புதுக்கவிதை என்ற பெயரிலும் குறும்பாக்கள் (ஐக்கூ) என்ற முறையிலும் உண்மைச் சிறப்பை உணர்த்தாத, தவறான தகவல்கள் நிறைந்த  மரபு மீறிய தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பாடல்கள் பெருகுகின்றன. பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது.  நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும் என்னும் பேராசிரியர் நூல் நெறியைப் பின்பற்றினால் பண்பாட்டைச் சிதைக்காக அறிவு வளம் நிறைந்த இலக்கியங்கள் பெருகும்.

போராட்ட நெறி :
இன்றைக்கு அரச வன்முறை என்பதே எல்லா  நாடுகளிலும் பெருகி வருகின்றது. வன்முறையை ஒடுக்குவதாகக் கூறி, மக்களின் உரிமைகளுக்குக்  குரல் கொடுப்போரை  அழிப்பதற்கு அரசுகளே கொடுங்கோல் முறையில் ஈடுபடுகின்றன. மக்களாட்சியில் கிளர்ச்சி என்பது நோய்க்கு மருந்து போன்றதாகும். ஆட்சியாளரின் பொறுப்பை உணர்வதற்குக் கிளர்ச்சிகள்தாம் கை கண்ட மருந்தாய் உலகம் முழுவதும் காணப்பெறுகின்றன. எனவே, கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தக்கூடாது. கிளர்ச்சிகளுக்குக் காரணமானவற்றை நீக்கவேண்டும். அவ்வாறு நீக்க முன்வந்தால் கிளர்ச்சியாளர்கள் அரசின் உறுதிமொழிகளை  ஏற்றுப் போராட்டங்களைக் கைவிடவேண்டும் என்ற பேராசிரியரின் அறிவுரையை அரசுகள் பின்பற்றினால், ஆட்சியில் குறைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடக்குமுறையின்றி நீக்கும் நல்லரசுகள் அல்லவா எங்கும் கோலோச்சும்.

கல்வி நெறி:
  தமிழ்நாட்டில் தமிழ்மட்டுமே எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்திப் போராடியவர் பேராசிரியர்.  பாடவழிக்குத் தெ்ரிவே இல்லாமல் தமிழ் மட்டுமே பாடமொழியாக இருக்க வேண்டும் என வழி கூறியவர் பேராசிரியர். தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், – இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் -தோன்றும் நிலை ஏற்படவில்லை.  தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.  ஆதலின் ஆங்கிலம் அகன்றால்  அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும்.  பிற நாடுகளைப் போன்றே நம் நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும் என்பதை நாம் உணர்ந்து தமிழையே என்றும் எங்கும் பயன்படுத்தினால்தான் நாம் உலக அளவில் முன்னணியில் இருப்போம் என்னும் பேராசிரியரின் கல்வி நெறியைப் பின்பற்றினால் நாம் உலகின் முன்னரங்கில் இருப்போம் அல்லவா?

காப்பு நெறி :
பிற மொழித்திணிப்புகளில் இருந்து தமிழைக்காக்கத்  தம் வாழ்வையே போர்க்களமாக ஆக்கியவர்  பேராசிரியர். இந்தியைத் திணிக்கவில்லை எனக்  கூறிக்கொண்டே இந்தியையும் அதன் வழி சமசுகிருதத்தையும் மத்திய அரசு திணித்துக் கொண்டுள்ளது.  இந்தித் திணிப்பிற்கு எதிரான போர்த்தளபதியாக விளங்கிய  பேராசிரியர், எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்; மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்  என நம் கடமையை உணர்த்திச் சென்றுள்ளார். இந்தித் திணிப்பு மட்டுமல்ல! தனித்து வாழக்கூடிய நாம் பல வகைகளில பிற மொழிகளின் அடிமையாக விளங்குகிறோம். அவற்றிற்கு எதிராகவும் பேராசிரியர் தொடர்ந்து போராடி உள்ளார். தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி ஆங்கிலமாம், சமயமொழி ஆரியமாம், பாட்டுமொழி தெலுங்காம், வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும். தமிழர்க்குத் தேசிய மொழியும், கல்வி மொழியும், தொடர்பு மொழியும், பாட்டு மொழியும் தமிழாகவே இருத்தல் வேண்டும் எனப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும்  காக்கப் பேராசிரியர் நமக்குக் காட்டிய காப்பு நெறியைப்  பின்பற்றினால் தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.

ஆளுமை நெறி :
தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை இல்லாச்  சூழலே நாம் அடையும் அனைத்து இன்னல்களுக்கும் காரணமாக அமைகின்றது. தமிழர்க்கு எதிரான  துயரங்களைக்  களைய முடிவெடுக்க வேண்டியவர்கள் பிற மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ்ப்பகுதிகளைத் தமிழ் நிலத்துடன் சேர்ப்பது, சிங்களவர்கள் மீனவர்களுக்கு எதிரான படுகொலைகள், ஈழத்தில் உருவாக்கப்பட்ட பேரின அழிவு முதலானவற்றில்  தலைமைப் பொறுப்புகளில் உள்ள பிறர், அவரவர் மொழியினருக்கும் இனத்தினருக்கும் சார்பாகவும் நமக்கு எதிராகவும் நடப்பதே  நடைமுறை. எனவே, தமிழர் தலைமை பெற வேண்டும் என்றும்  அதற்குத் தமிழ் தலைமை பெற வேண்டும் என்றும் பேராசிரியர்  வலியுறுத்துகிறார். சிலர் ஆங்கிலத் தலைமையை மாற்றி இந்தித் தலைமையைச் சுமத்த முயன்று வருகின்றனர். எந்தத் தலைமையும் நமக்கு வேண்டா. நமக்கு நாமே தலைவராக இருப்போம். தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை வேண்டும். தமிழ் தலைமை பெறும் வரை தமிழர் தலைமை பெறுதல் இல்லை. பழைய வடமொழிக்கடிபணியாது வாழ்ந்த தென்மொழி புதியதொரு இந்தியெனும வட மொழிக்குத் தலை குனிந்து வாழ்ந்திடுமோ? ஒரு நாளும் இல்லை  எனப் பேராசிரியர் காட்டிய  ஆளுமை நெறியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால் தமிழர் முழு  உரிமையுடன் என்றென்றும் வாழ இயலும்.

கட்சி நெறி :
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் இல்லாமல் இருப்பதே சிறந்த நாடு என்கின்றார்  தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  பேராசிரியரும் இங்கிலாந்துபோன்ற சில கட்சி ஆட்சிமுறைதான் நாட்டிற்குத் தேவை என்கின்றார். பல கட்சிகள் உள்ளமை மக்களாட்சிக்குத் துணை புரியாது என்பதே பேராசிரியர் கூறும் தேர்தல் நெறியாகும். பல்குழுவும் என்பதில் சாதிகள் பெயரால் உருவாகும் கட்சிகளும் அடங்கும். சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும் எனச் சாதிக்கட்சிகளைத் தடுத்திட வேண்டும் என்பதே அவரது கட்சி  நெறியாகும்.

பரப்பு நெறி:
தமிழ்க்காப்புக்கழகம் மூலம் தமிழ்க்காப்புப் பணிகளைச் சிறப்பாக ஆற்றியவர் பேராசிரியர். தமிழ் பரப்புக்கழகம்  நிறுவி உயர்தனிச்  செம்மொழியாம்தமிழ் மொழியின்சிறப்பை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பது பேராசிரியர்  திட்டமாக இருந்தது. ஆனால், இப்பணிகளைத் தொடங்கி முடிக்கும்முன்னரே அவரை நாம இழந்து விட்டோம். என்றாலும் அவர் அறிவுறுத்திய வழியில் தமிழ்பரப்புக்கழகம்நிறுவித் தமிழின் சிறப்பை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும். தமிழ்க்காப்பு என்பது  கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது என்று பேராசிரியர் அறிவுறுத்தியதை அனைத்துக் கட்சியினரும் ஏற்று அன்னைத் தமிழைக் காப்பதை அவரவர் கடமையாகக் கொள்ள வேண்டும். இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான் என்றும் திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்றும் பேராசிரியர் கூறியதை நினைவில் கொண்டு பரப்புரை மேற்கொண்டால், இந்தியம் என்றும் திராவிடம் என்றும் தமிழ்  அழுத்தப்படுவதைத் தடுத்துத் தமிழைக் காத்திடுவோம். தமிழ்மொழி இந்நாட்டின் முதல்மொழி; அடிப்படை அமைப்பைத் தந்துள்ள மொழி. ஆரியம் வருமுன் வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாது உருகெழு குமரியின் தெற்கும் உட்பட்ட நிலப்பரப்பில் வழங்கிய தொன்மொழி  என்று ஆய்ந்துரைத்தவர் பேராசிரியர். உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே  என்றும் பேராசிரியர்  அறிஞர்கள் உரைகள் கொண்டு மெய்ப்பித்ததை நாம்  பாரெங்கும் பரப்ப வேண்டும். அப்பொழுதுதான் தமிழின் சிறப்பைப் பிறர் மட்டுமல்ல, நம்மவரே உணர்வர்.

குமுகாய நெறி:
சாதிகளற்ற வாழ்வே சமஉரிமை தரும் நல வாழ்வு என்பது பேராசிரியர் வலியுறுத்தும் குமுகாய நெறியாகும். சாதிகள் தமிழ்நாட்டுக்குப் புதியனவே. சாதி என்ற சொல்லே தமிழன்று. இதுவே, சாதி தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்களால் புகுத்தப்பட்டது என்பதைத் தெற்றென்று அறிவிக்கும் என்றும் அவரவர் தம் பெயர்கட்குப் பின்னால் சாதிப் பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளுதலைத் தாமாகவே நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்றும் ஒரே சாதிக்குள் திருமணம் செய்யக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவருதல் வேண்டும் என்றும் பிறப்பு(சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும்வரை மக்களாட்சி வெற்றி பெறுதல் இயலாது என்றும் பேராசிரியர் காட்டும் சாதிகளற்ற குமுகாய நெறியே பிறப்பு வேறுபாடுகளற்ற உண்மையான மக்களாட்சி நிலைக்க  வழிவகுக்கும்.
குறிக்கோள் நெறி :
நாம்ஒவ்வொருவரும் மேற்கொகாள்ள வேண்டியகுறிக்கோளுக்கான இலக்கினையும் பேராசிரியர் வரையறுத்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை!  தமிழில்தான் எல்லாம்! என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் ஒல்லும் வகையால் அயராது உழைப்பதே  நம் குறிக்கோள் எனக் கொண்டு நாம்  செயல்பட்டால் உரிமை வாழ்வினை வாழலாம்.

தமிழும்தமிழ்நாடும் ஏற்றம் பெறறு உலகில்  தமிழர் சிறந்து  திகழவும் வாழுமிடங்களில் எல்லாம் பிறருக்குச் சமமான உரிமையைப் பெற்று மகிழவும் இலக்குவ நெறியே சிறந்த வழிகாட்டு நெறியாகும். தமிழ்த்தேசியவாணர்களும் மக்களாட்சி ஆர்வலர்களும்  இலக்குவ நெறியைப் பின்பற்றிப் பிறரையும்  பின்பற்றச் செய்வார்களாக!
இலக்குவ நெறியைப்பின்பற்றி உரிமை வாழ்வை எய்துவோம்!

- இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் நடத்திய இதழ்களில் இருந்தும் படைத்த நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன.)

Followers

Blog Archive