சொல் விளக்கம்:  முன்னுரையும் முற்காட்சியும் (preface &  preview)

நண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில்,
preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா?”
கேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை.
பொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும்.
 ஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது.
preface என்பதற்கு,
அணிந்துரை
சிறப்புப் பாயிரம்
தந்துரை
தலைவாசகம்
நூன்முகம்
பதிகம்
பாயிரம்
பீடிகை
புறவுரை
புனைந்துரை
பெய்துரை
பொதுப்பாயிரம்
முகவணை
முகவுரை
முற்சேர்பு
முன்னுரை
என நாம் பயன்படுத்தி வந்துள்ளோம்.
preview என்பதற்கு,
முந்திய பார்வை
முற்காட்சி
முற்காண் .
முன் பார்க்கை
முன்காட்சி
வெள்ளோட்டம்
எனப் பலவாறாகப் பயன்படுத்தி வந்துள்ளோம்.
இப்பொழுது இவற்றுள் சிலவற்றையும் இவை தவிர,
ஆய்வுரை,
கருத்துரை,
சிறப்புரை,
 திறனுரை
 நயவுரை,
பாராட்டுரை,
 மதிப்புரை
என்பனவற்றையும் புத்தகத் தொடக்கத்தில் வரும் கருத்துரைக்குத் தலைப்பிட்டுப் பயன்படுத்தி வருகிறோம்.
  ஒரு நூலுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் கருத்துரை பெறும் பொழுது வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வெவ்வேறு சொற்களைக் கையாள்கிறோம்.
  புத்தகத்திற்கு அமையும் கருத்து,  கருத்தாளர் ஆகியோருக்கேற்ப நாம் உரிய சொல்லைக் கையாளலாம்.
 preview show  – திரைப்படத்திற்கான   முன்காட்சி என்றும் ஊர்திஓட்டத்திற்கான வெள்ளோட்டம் என்றும் அழைக்கப்படுவதுபோல், இடத்திற்கேற்ற சொல் பயன்பாடு அமைகின்றது.
தமிழில் சொல் வளம் இருப்பதால் நாம்  இவற்றுள் எதைப் பயன்படுத்தினாலும் சரியாகவே இருக்கும்.
இலக்குவனார் திருவள்ளுவன்