அகரமுதல 179, பங்குனி 13 , 2048 / மார்ச்சு 26, 2017
இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்!
இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.
ஈழம், இலங்கை என்பன
தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில்
வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும்
சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது.
‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது.
ஈழம் என்றால் பொன் எனப் பொருள்.
பொன்வேய்ந்த மாடங்கள் இருந்தமையால் – மிகுதியாகப்பொன் கிடைத்தமையால் –
அந்நாட்டிற்கு ஈழம் என்னும் பெயர் வந்துள்ளது. பொன் என்றால்
ஒளிவிடுவதுதானே! இலங்கு என்றால் ஒளிர்தல், திகழ்தல், ஒளிவிடுதல் என்பன
பொருளாகும். பொற்கட்டடங்கள் ஒளியுடன் திகழ்ந்த – இலங்கிய- நாடு என்பதால்
இலங்கை என அழைத்தனர். எனவே, முதற்பெயர் ஈழம் என்பதுதான். எனினும் காலப்போக்கில் இரண்டு பெயருமே அழைக்கப்பெற்றுப் பின்னர் இலங்கை என்பது நிலைக்கத்தொடங்கியது.
இலங்கை > இலங்கா எனச் சிங்களத்தில் மருவியது.
திருநகர், திருநெல்வேலி, திருத்தணிகை
என்றெல்லாம் நாம் அடை மொழி சேர்த்து அழைப்பதுபோல் இலங்கா என்பது சிரீ
என்னும் அடைமொழியுடன் சேரத்து சிரீ இலங்கா ஆனது. இப்பழக்கம் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்தான் அறிமுகமானது.
1935 இல் உருவான இலங்கை மார்க்சியக்
கட்சி – மார்க்சிய இலங்கா சமா சமாசா கட்சி – சிரீ ஒட்டினைச் சேர்த்துப்
பயன்படுத்தியது. 1952இல் சிரீ இலங்கா விடுதலைக் கட்சி தோன்றியது(Sri Lanka
Freedom Party ).
எனினும் இலங்கை அரசாங்கம் 1972 இல்
குடியரசை நடைமுறைப்படுத்தி தன் அரசியல் யாப்பின் மூலம் இலங்கை(சிரீ
இலங்கா) மக்கள்நாயக, சமவுடைமை குடியரசு(இலங்கைச் சனநாயக,சோசலிசக்
குடியரசு-Democratic Socialist Republic of Sri Lanka ) எனப் பெயரைக்
குறிப்பிட்டது.
இவ்வாறு ஆட்சி முறை அடிப்படையில் நாட்டைக் குறிக்கும் பொழுது தமிழில் இலங்கை என்றும் சிங்களத்தில் சிரீலங்கா என்றும் குறித்துள்ளது.
மக்களும் ஊடகத்தினரும் குடியேற்ற அடிமையாட்சியில் பரவிய சிலோன் என்ற பெயரையே பயன்படுத்தி வந்தனர்.
போர்த்துகீசியர்கள் இலங்கை என்பதைச்
சிய்லோ / சிய்லா (Ceilao) என அழைத்தனர். இதனை ஆங்கிலேயர்கள் வந்தபின்னர்
சிய்லான் / சிலான் / சிலோன் என்றனர். இதனையே நாட்டு மக்கள் பயன்படுத்தி
வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 2011 இல் சிங்களத்தில் சிரீ
இலங்கா என்றும் தமிழில் இலங்கை என்றும்மட்டுமே அழைக்கவேண்டும் என அரசு
அறிவித்தது. எனினும் வணிகக்குறியீட்டுப் பெயர்களில் உள்ள சிலோன் தொடர
இசைவளித்தது.
இவ்வாறு பெயர் மாற்றத்ததை வலியுறுத்தியபோதும் சிங்களத்தில் சிரீ லங்கா என அழைக்கவேண்டும் என்ற அரசு தமிழில் இலங்கை என்ற தமிழ்ப்பெயரையே அழைக்குமாறுதான் அறிவித்துள்ளது. சிங்களப் பெயரே ஆங்கிலத்திலும் அழைக்கப் படுகிறது.
இலங்கை விடுதலை பெற்றதிலிருந்து அந்நாட்டு அரசு அந்நாட்டின் பெயரைத் தமிழில் இலங்கை என்றுதான் குறித்து வருகிறது.
இப்பொழுதும் அரசலுவலகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடரி நிலையங்கள்,
திட்டங்களின் பெயர்கள், கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் முதலான எல்லா
இடங்களிலும் இலங்கை அரசாங்கம், இலங்கை என்ற தமிழ்ப்பெயரைத்தான் தமிழில்
கையாண்டு வருகிறது. ‘(இ)லங்காசிரீ’ என்னும் எரிபொருள் நிறுவனம்
ஒன்றுமட்டுமே அதன் பெயரே அவ்வாறு அமைந்துள்ளதால் அப்பெயர்ச்சொல்லையே
தமிழில் குறிப்பிடுகிறது. வேறு எங்கும் அரசின் பெயர் எந்த இடத்திலும்
சிரீலங்கா எனக் குறிக்கப் பெறவில்லை.
எனவே, இலங்கை நாட்டின் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணித் தமிழில் சிரீலங்காஎனக் குறிப்பதை முற்றிலும் நிறுத்துவோம்! அந்நாட்டின்அரசு முறைப்பெயரான இலங்கை என்பதையே எல்லா இடங்களிலும் குறிப்பிடுவோம்!
இலங்கையில் தமிழர்க்குரிய
நிலப்பகுதியை(த் தமிழ்) ஈழம் எனக் குறிப்பது குறித்து இங்கே நாம்
குறிக்கவில்லை. இலங்கை எனக் குறிப்பிடும்பொழுது சிரீலங்கா என்று சொல்லாமல்
இலங்கை என்றே சொல்லுங்கள் என்கிறோம்.
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (திருவள்ளுவர், திருக்குறள் 199)
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment