விரைவாக நடைபெறும் சமற்கிருதத் திணிப்பு!
மெல்லவும் விழிக்காத தமிழ் மக்கள்!
ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக!
பாரதிய மக்கள்(சனதாக்) கட்சியும்
பேராய(காங்கிரசு)க் கட்சியும் இந்தித்திணிப்பிலும் சமற்கிருதத்
திணிப்பிலும் ஒற்றுமை உள்ளவை. பேராயக்கட்சி மெல்லத்திணிப்பதுபோல்
நடிக்கும். பா.ச.க.விற்கு அந்த நடிப்பு பிடிக்காது. ஆனால், வேறொரு
வேற்றுமை உண்டு. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என
இந்துமதத்தைத்திணிப்பதிலும் பாசக கவனம் செலுத்தும்.
நம் நாட்டில் இந்தியையைும் சமற்கிருதத்தையும் திணித்துத் திணித்துச் சலிப்பு ஏற்பட்டு விட்டது பா.ச.க.விற்கு. எனவே, உலக
அளவில் சமற்கிருதத்திணிப்பு வேலையில் இறங்கியுள்ளது. அதில் ஒரு பகுதிதான்
பன்னாட்டு மன்றத்தின் அலுவல் மொழியாக இல்லாது போனாலும் சமற்கிருதத்தில்
அதன் ஆவணப் பட்டயத்தை வெளியிடச்செய்தது.
செப்.08, 2016 ஆம் நாளிட்ட தினமலரில் இது செய்தியாக வந்தது. சக்தி புத்தகங்கள் (SAKTHI BOOKS சமீப நிகழ்வுகள்)
என்னும் இணையத்தளத்திலும் செய்தி வந்துள்ளது. ( வேறு யார், யார்
வெளியிட்டார்கள் எனத் தெரியவில்லை.) “சமற்கிருத மொழித் திணிப்பின் இன்னொரு
படிநிலை வளர்ச்சியாக இச்செய்தி வெளிவந்துள்ளது” என முகநூலில் கவிஞர் ந.க.துறைவன் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் கிணற்றில் போட்ட கல்லாக இச்செய்தி இருந்தது.
தமிழாலயம் என்னும்
இருமாத இதழின் மார்ச்சு-ஏப்பிரல் 2017 இதழில், “ஐ.நா அவையின் பட்டயம்
சமற்கிருத மொழியிலேன்?” என அதன் ஆசிரியர் பேரா.முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் கேள்விகேட்டுத் தமிழ்க்காப்பு உணர்வை வெளிப்படுத்தி உள்ளார். (இக்கட்டுரை அகரமுதல இதழில் வந்துள்ளது.)
இதனை ஏதோ ஒரு செய்தியாகவோ தலையங்கமாகவோ
நாம் கருதி ஒதுக்கிவிடக் கூடாது. இப்பொழுதே மத்திய அரசு பிற எல்லா
மொழிகளையும் விட இந்திவளர்ச்சிக்கும் சமற்கிருத வளர்ச்சிக்கும எனப்
பலமடங்கு பணம் செலவழித்து வருகிறது. இந்தியப் பாட நூல்களில்
சமற்கிருதத்தைத் திணித்து வருகிறது. அயலகங்களில் வாழும்தமிழர்கள்
தமிழ்க்கல்வி கேட்டால் இலவச இந்திக் கல்விஅளிக்கிறது. இனி
உலகெங்கும் “இந்தியா என்றால் அதன்மொழி சமற்கிருதம்தான்” எனத் தவறாக நிறுவி
சமற்கிருத மொழியைத் திணிக்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கும். ஆகவே,
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது குறித்துப் பல முறை
தெரிவித்துள்ளோம். இப்போதுநாம் ஐ.நா.மன்றத்தின் அலுவல் மொழியாகத்தமிழையும்
அறிவிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2001 ஆம் ஆண்டுக்
கணக்கெடுப்பின்படி 15,000இற்கும் குறைவானவர்கள் பேசும் சமற்கிருதத்தை
ஐ.நா.வின் அலுவல் மொழியாக ஆக்க மத்திய அரசு முயலும்பொழுது, நாம் பாரில்
பரந்துபட்ட பகுதிகளில்பேசப்படும் தமிழ்மொழியை ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள்
ஒன்றாக ஆக்காதது குற்றம்தானே!
தமிழக அரசின்சார்பில் அவ்வாறு
எழுதச்செய்ய வேண்டும். தமிழ் அமைப்புகளும் எழுத வேண்டும். சிங்கப்பூரில்
தமிழ் ஆட்சி மொழியாக உள்ளதால், சிங்கப்பூர் அரசு மூலம்
உலகெங்கும் ஏறத்தாழ 80 நாடுகளில் தமிழர்கள் வசிப்பதாலும் உலகின்
தொன்மையான செம்மொழியாக விளங்குவதாலும், தமிழை அலுவல் மொழியாக ஏற்குமாறு
ஐ.நா. மன்றத்திற்கும் பிற பன்னாட்டுஅமைப்புகளுக்கும் எழுதச் செய்ய
வேண்டும். இதேபோல், மலேசியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் எழுதச் செய்ய
வேண்டும். இந்திய அரசு எழுதாவிட்டாலும் இலங்கை அரசு எழுத வாய்ப்பு உள்ளது.
கனடா, மொரீசியசு முதலான நாடுகளிலிருந்தம்
ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குமாறு வேண்டுகோள் விடுக்க
வேண்டும். உலகெங்கும் வாழும் தமிழர்கள், தாம் வாழும் நாடுகளின் அமைப்புகள்
மூலம் முறையிட வேண்டும்.
பிற நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் அங்கங்குள்ள தமிழர்கள் முயல வேண்டும்.
சிங்கப்பூர் அரசு வலியுறுத்தினாலே போதுமானது என்றாலும் இவ்வாறு நாம் அனைத்து முனைகளிலிருந்தும் அழுத்தம்கொடுக்க வேண்டும்.
நாம் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் குரல்
கொடுத்தால், இந்தியாவிலுள்ள பிற மொழியினர் உடனே தத்தம் மொழிகளையும்
ஐ.நா.மொழியாக ஆக்குமாறு போராடி, நம் முயற்சியைச் சிதைத்து விடுவார்கள்.
எனவேதான், உலக மொழியான தமிழை உலக அமைப்பின் அலுவல் மொழியாக ஆக்குமாறு,
உலகெங்கும் உள்ள பகுதிகளிலிருந்து குரல் கொடுக்க வேண்டும்.
தமிழீழம் காலத்தே மலர்ந்திருந்தால், இந்நேரம் ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றிருக்கும். அதற்கான வாய்ப்பு தள்ளிப்போனதால், நாம் அதுவரை காத்திராமல் விரைந்து செயல்பட வேண்டும்!
“தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்
வேண்டும்” என்ற பாரதியாரின் கனவை நனவாக்க நாம் பன்னாட்டு அவையின் அலுவல்
மொழியாகத் தமிழை இடம்பெறச்செய்து அதனை என்றுமுள்ள பயன்மொழியாக மாற்ற வேண்டும்.
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 540)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை : அகரமுதல 177, மாசி 28, 2048 / மார்ச்சு 12 , 2017
No comments:
Post a Comment