(மாசி 18,  1984 /  மார்ச்சு 01, 1953)

செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே!

 இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின்.
  தன் பதினாறாம் அகவையிலேயே  அரசியலில் காலடி எடுத்து வைத்தார்; கட்சியில் படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டார். தந்தையின் ஒத்துழைப்பால் இவர் வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலர், துணைப்பொதுச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார்.  வேறு உயர் பதவிக்கு வர விழைந்தும், தந்தையின்  இப்போதைய உடல்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவராக உயர்ந்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு நிலையிலும் வெற்றி கண்டதும் அடுத்த நிலைக்குப் போனதும் இவரது அமைதியான ஆழமான பணியாலும் முயற்சிகளாலும்தான் என்பதை மறுப்பதற்கில்லை. எனவேதான்,  பல்வேறு பொறுப்புகளுக்கு வந்தாலும் கிழவர் அணி எனப் பிறர் கிண்டல் செய்தாலும் தன்னால் உருவாக்கப்பட்ட இளைஞர் அணி மீது பற்றுடையவராக அதனை உள்கட்சி அமைப்பாகத் திறம்பட வளர்த்துள்ளார். கட்சியிலும் ஆட்சியிலும் இவர் பெற்ற பல்வேறு படிநிலைகள்  இவரது பட்டறிவை வளர்த்தன; தான் வகிக்கும் பொறுப்புகளில் திறம்படச் செயல்பட அவை உதவின.
 வைகோ தி.மு.க.வில் இருந்து விரட்டப்படாவிட்டால் இவர் அந்த அளவிற்கு உயர்ந்திருக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது.  ஆனால், எதிர்ப்புகளை  வீண்  ஆரவாரப்பேச்சுகளால்  எதிர்க்காமல் அமைதியான முறையில் அவற்றைக் களையும் திறம் மிக்கவராக இவர் விளங்குவதால், வைகோவையும் தன்பால் ஈர்த்து இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டிருப்பார் என்பதே உண்மை.
  தந்தையைப்போல் கலையுலகிலும் தடம் பதித்துள்ளார். முரசே முழங்கு, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே முதலான திராவிட இயக்கக் கொள்கைப் பரப்பு நாடகங்கள் மூலம் கலையுலகில் மட்டுமல்லாமல் இயக்ககத்தொண்டர்களின் உள்ளங்களிலும் இடம் பிடித்தார். தொடர்ச்சியாக இவர்,  ஒரே இரத்தம், மக்கள் ஆணையிட்டால் (பாடல்காட்சியில்)  ஆகிய திரைப்படங்களிலும் குறிஞ்சி மலர், சூர்யா எனத் தொலைக்காட்சித் தொடர்களிலும்  நடித்துள்ளார்.  கடந்த தேர்தலில் குறும்பட நாயகனாகவும் விளங்கியுள்ளார். திரைப்டம் எடுப்பவராகவும் இருந்துள்ளார். தந்தையைப்போல் இதழுலகில் கால்பதித்து, இளைய சூரியன் என்னும்  வார இதழின் ஆசி்ரியராக ஏறத்தாழ ஓராண்டு இருந்துள்ளார்.
  தாலின் தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் இந்திய அரசியலிலும் கால்பதித்துத் தமிழ்நாட்டின் உயர்விற்குப் பாடுபடவேண்டும். தமிழ்இலக்கியம், தமிழ்ப்பண்பாடு, தமிழின முன்னேற்றம் குறித்துச் சிறப்பாகப்பேசும் வகையில் தன் நாவன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 கட்சிப்பிடிப்புளால் பண்பாட்டுத் துறப்பு நிகழும் தமிழக அரசியல் போக்குகளை இவர் மாற்ற முனைவது பாராட்டிற்குரியது. அதேபோல் கட்சிவளர்ச்சியுடன் பொதுவான நாட்டு வளர்ச்சியிலும் முனைப்பாகச் செயல்படவேண்டும். சான்றாகக் கூறுவதானால், வேலியில் போகும் ஓணானை வேட்டியில் விட்டுக்கொள்வதுபோல், சட்டமன்ற நிகழ்வு தொடர்பில் இவர் தொடர்ந்த வழக்கு அமைந்துள்ளது. இது நேர்மாறான விளைவிற்கு வழி வகுக்கும். ஆட்சியரிணையில் ஏறத் தேர்தல் அரசியலே உதவும்.  ஆளுங்கட்சியின் மாற்றணியினர் சார்பாக இவர் போராடுவது இழப்பையே ஏற்படுத்தும்.  இது போன்ற செயல்பாடுகள், கட்சித்தொண்டர்களை ஊக்கப்படுத்தலாமே தவிர, மக்களிடம் எடுபடாமல் போகும் தீங்கு உள்ளது. உள்கட்சி அரசியலிலும் குடும்பத்திற்குள்ளும் தனக்கு எதிரானவர்களைக்கையாளத் தெரிந்த செயல்வினைத் திறம் மிக்க  தாலின் அதனை எல்லா நேர்வுகளிலும் கைக்கொள்ள வேண்டும்.
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை    
என்னோற்றான் கொல்எனும் சொல் (திருவள்ளுவர், திருக்குறள் 70)
என்பதற்கு இலக்கணமாகத்திகழும் செயல்வினைஞர் மு.க.தாலின்   தமிழினத்திற்கும் தமிழ்மக்களுக்கும் தமிழ்மொழிக்கும்  தொண்டாற்றி நானிலம் போற்ற நூறாண்டுகள் வாழ்க!
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 175, மாசி 14, 2048 / பிப்பிரவரி 26, 2017