தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை?

  நிலவளத்தையும் மக்களின் பொருள் வளத்தையும் சுரண்டிப்பிழைக்கும் சாமியார் ஒருவர், சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லியுள்ளார். தமிழ் தெரியாத மாந்தருக்கே தமிழ்நாட்டில் இடம் இல்லை என்னும்பொழுது தமிழ் தெரியாத அவரின் சிவனுக்கு இங்கு என்ன வேலை?  அவருடைய சிவனுக்கே இங்கே இடமில்லாத பொழுது அவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!
  சிவ வழிபாட்டைப் பழமையானதாகச் சிலர் கூறி வந்தாலும் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இல்லை.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
என்னும் நூற்பா மூலம் தொல்காப்பியர் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனத் தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்.
  மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களைக் குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்று சொல்லப்படுகின்றது என்றும் அது தவறு என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுகிறார்.   [தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies) பக்கம்397-398 ]
  ஒரு பெயர் ஓருருவம் ஓன்றுமில்லாக் கடவுளுக்குப் பல பெயர்களிட்டுப் பல வழியாக வழிபடுதல் தமிழர் இயல்பு. பெயர் பலவாயினும் கடவுள் ஒருவரே என்ற உணர்வு தமிழர்க்கு என்றும் உண்டு. இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ள மாயோன், சேயோன், வேந்தன், வருணன் முதலியனவும் ஒரு கடவுளைச் சுட்டுவனவே. மாயோன் என்றால் அழியாதவன்; சேயோன் என்றால் சேய்மையிலுள்ளவன்; அறிவுக்கு எட்டாதவன்; வேந்தன் என்றால் தலைவன், விரும்புதற்குரியவன். வருணன் என்றால் நிறங்களுக்குரியவன் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் நான்கு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றன என்று தெளியலாம். வட மொழியில் உள்ள புராண நூல்களைக் கற்றறிந்த உரையாசிரியர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய காலத்து வடமொழிக் கதைகளை உளத்தில் கொண்டு உரையெழுதி விட்டனர். என்றும்அழியாதவன் என்று கருதப்பட்ட இறைவன் பிறந்து இறக்கும் தொழில்களைக்கொண்ட திருமால் என்று கருதப்பட்டு விட்டான். உண்மைப் பற்றில்லார் அறிவினுக்கு எட்டாதவன் எனப்பட்ட இறைவன் முருகனாகி, சிவனின் புதல்வனாகி, இளையோனாகி, கணபதியின் தம்பியாகி விட்டான். யாவர்க்கும் தலைவனாக விரும்பப்படும் இறைவன் (வேந்தன்) தேவர்கட்கு அரசனாம் இந்திரனாகி விட்டான். பெருநிற வண்ணனாய் எல்லா நிறங்களுக்கும் காரணனாகிய இறைவன் (வருணன்) ஆரிய நூல்களில் கூறப்படும் மழைக் கடவுளாம் வருணன் எனப்பட்டான். உரையாசிரியர்களின் உரைப் பொருள் மாற்றம் உண்மையை உணர முடியாமல் செய்து விட்டது. பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 135-136)
  இவ்வாறு தமிழ்க்கடவுள்களை  ஆரியமயமாக்கிய தொடக்கத்தில் கூடச் சிவன் வரவில்லை. பின்னரே சிவன் திணிக்கப்பட்டார். அப்படியானால் பின்னால் வந்த சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று  சொல்வது சரிதானே என்கின்றீர்களா?  தமிழர்களைப் பொருத்தவரை தெய்வம் ஒன்றுதான். அதைத்தான் பல பெயரிட்டு வணங்குகிறார்கள். தெய்வத்திற்கு உருவமும் கிடையாது. இருப்பினும் தாங்கள்விரும்பும் உருவவடிவில் தெய்வத்தைக் காண்கிறார்கள். எனவே, ஒரு நாமம், ஓருருவம் ஒன்றுமில்லா தெய்வத்தைப் பல வடிவிட்டும் பெயரிட்டும் வணங்குகிறார்கள். அவ்வாறு சிவன் என்று அழைத்தும் வணங்குகிறார்கள். அது மட்டுமல்ல,
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
என்று சிவன் நம்நாட்டிற்குரியவர் என்றே சொல்லி வணங்கினார்கள்.
  கடவுள் என ஒன்று இருந்தால், அக்கடவுளுக்கு மண்ணில் உள்ள எல்லா மொழிகளும் தெரியும் என்பதே இயற்கையாகும். அவ்வாறிருக்க மண்ணில் முதலில் தோன்றிய தமிழினத்தின் தமிழ் மொழியும் தெரியும் என்பதே இயற்கை நீதியாகும். தாய்க்குத் தலைமகன் மீது பற்று உள்ளதுபோல், கடவுளுக்கும் முதல்மொழி மீது கூடுதல் பற்று உள்ளது. எனவேதான், உயர் தமிழைக் கடவுளும் ஆராய்ந்து வளர்த்ததாகக் கூறி வருகின்றனர்.
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமிழ்
 என்கிறார் பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடல் புராணம்: திருநகரச் சிறப்பு: 57).
    கவிப்பேரரசர் கம்பர் “கடவுள் தந்த தமிழ் என்கிறார் (கம்ப ராமாயணம்: ஆரணிய காண்டம்: 158 )
    தமிழ் கடவுளால் தரப்பட்டது எனில் தனக்குத் தெரியா மொழியையாக் கடவுள் தருவார்?
  சங்கப்புலவர்குழுவின் தலைமைப்பொறுப்பில் இறைவன் இருந்துள்ளதாகவும் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல தமிழ் தெரியா தெய்வம் என ஒன்று இருக்குமேல், அது தெய்வமன்று; பேயினும் கீழான ஒன்று என்கின்றார்  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்:
 தமிழ்ச்சுவை யறியாத் தெய்வம் உளதெனில்
அஃதுணர லகையில் தாழ்வெனல் அறமே (அறுவகை இலக்கணம்: புலமை)
தன்னைத் தமிழில் பாடுமாறு சிவன் கூறுவதாக
 சொற்றமிழால் நம்மைப் பாடுகென்றான்
தூமறை பாடும் வாயான்”
எனச் சேக்கிழார் சொல்கிறார்
அது மட்டுமல்ல,
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
எனத் திருமூலர் இறைவன் தன்னைத் தமிழால்பாடு வதற்கென்றே படைத்ததாகக் கூறுகின்றார்.
  தமிழ் தெரியாமலா தன்னைத் தமிழில் பாடுமாறு இறைவன் வேண்டியிருப்பான்? ஆகவே, சிவனுக்குத் தமிழ் தெரியாது எனக்கூறி, சமற்கிருத  வழிபாட்டை மேலும் திணிக்கச் செய்யும் சதியே இது.
 அனைத்து இடங்களிலும் தமிழ் வழிபாடு வேண்டும். ஆனால்,  தமிழ் வழிபாடு இருக்கின்ற  இடங்களிலும் சமற்கிருத வழிபாட்டைத்திணிக்கும் முயற்சியே இது. ஆக மீண்டும், தெய்வ மொழி என்று உயர்த்தி ஆரியத்தைத்திணிக்கும் முயற்சியில் போலிச்சாமியார் இறங்குகிறார் என்பது தெளிவு.
   எனவே,  கோவையில் நிலப்பறிப்புப் பகுதியில் அமைந்துள்ள  ஈசா ஓக மையத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் வழிபாட்டை விரைவில் எல்லாக் கோயில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
  கருநாடகாவைச் சேர்ந்த வா.சகதீசு என்னும் சக்கி குறித்துப் பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வந்து கொண்டுள்ளன. ஒழுக்கக்கேட்டின் உறைவிடமாக இவரது மையம் விளங்குவதையும் அறக்கட்டளை என்ற  பெயரில் அறமற்ற செயல்கள் இங்கே நிகழ்வதையும் இச்செய்திகள் மூலம் நாம் அறிகிறோம்.  எனவே, இவற்றையும் அரசு தடை செய்ய வேண்டும்.
  தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராக யார் கூறினாலும் அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்; அவரது உடைமைகள நாட்டுடைமையாக்க வேண்டும்!
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 348)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை: அகரமுதல 176, மாசி 21, 2048 /   மார்ச்சு 05 , 2017