‘கலாச்சாரம்’ தேவையா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
‘கலையும் கலாச்சாரமும்’, ‘கலாச்சாரமும் பண்பாடும்’, ‘கலையும் கலாச்சாரமும் பண்பாடும்’
என்றெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கலாச்சாரம் என்பதைப்
பண்பாடு என்னும் பொருளில்தான் பெரும்பாலும் கையாள்கின்றனர். சில இடங்களில்
கலை என எண்ணிக் கையாள்கின்றனர். கலை – பண்பாட்டுத்துறை என்பதைக் கலை –
கலாச்சாரத்துறை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, கலையும் கலாச்சாரமும்
என்றால் கலையும் பண்பாடும் என்று கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால்,
கலாச்சாரமும் பண்பாடும் என்றால் என்ன பொருள்? நாகரிகமும் பண்பாடும் என்று
பொருள் கொள்ள இயலவில்லை, இங்கே கலாச்சாரம் என்பதைக் கலை என்னும் பொருளில்
வருவதாக எண்ணுகின்றர். அப்படியானால் கலை, கலாச்சாரம், பண்பாடு என்று
சொல்கிறார்களே! உண்மையில் சொல்லப்போனால், பொருள் குறித்த எண்ணமின்றி, வழிவழியாக இவ்வாறு தவறாகவே சொல்லி வருகின்றனர் என்பதே உண்மை.
கல்ச்சர் (‘culture’) என்னும்
ஆங்கிலச்சொல்லுக்குப் பண்பாடு என்றுதான் பொருள். (அறிவியலில் கல்ச்சர்
என்பது வளர்நிலையை – வளர்மத்தைக் குறிக்கிறது.)
‘ஆசுபிடல்’ (hospital) என்பது மக்கள் நாவில் ‘ஆசுபத்திரி’ எனத் திரிந்ததுபோல் கல்ச்சர் என்பது கலாச்சாரமாகத் திரிந்தது.
கலாச்சாரம் என்ற சொல் சென்னைப் பேரகராதி
முதலான அது வரை வெளிவந்த எந்த அகராதியிலும் இடம் பெறவில்லை. பின் வந்துள்ள
அகராதிகளில்தான் கலாச்சாரம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது.
நிலத்தைப் பண்படுத்தப் பயன்படுத்த
இச்சொல் பின்னர் மனத்தைப் பண்படுத்துவதையும் குறித்துள்ளது. தமிழில்
மட்டுமல்ல, உரோமன், இலத்தீன், ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும்
பண்படுத்தப்பட்ட நிலையே பண்பாடானது.
சில நேர்வுகளில் நாம்
பழக்கவழக்கத்தையும் ‘கலாச்சாரம்’ எனக் குறிப்பிடுகிறோம். “காலில் விழும்
கலாச்சாரம் பெருகிவிட்டது” எனக் கூறுவதைச் சான்றாகச் சொல்லலாம். நல்ல பழக்க
வழக்கங்களை ஒழுகலாறு எனக் குறிக்கலாம்.ஒழுகலாறு/ஒழுகல் ஆறு என்றால் ஒழுக்க
நெறி எனப் பொருள். பெரியோரை வணங்குவது சிறப்பு நாள்களில் வணங்குவது
முதலானவற்றை ஒழுகலாறு எனலாம். ஆனால், கால், கை பிடிப்பதுபோல் தன்னலம்
கருதிக் காலில் விழுவது, வானூர்தி இறங்கும் வரை மேலேயே பார்த்துவணங்குவது
ஊர்தி புறப்படும் வரை ஊர்திச்சக்கரங்களை வணங்குவது முதலானவற்றை ஒழுக்க நெறி
என்றால் ஒழுக்கம் என்பதற்கே பொருள் இல்லாதுபோய்விடும். இறைவன் கோயில் உள்ள
திசையைப் பார்த்து அல்லது பண்பாளர்கள் இருக்கும் திசையைப் பார்த்து ஒருவர்
திசை நோக்கி வணங்கினால் அது ஒழுகலாறு. ஆனால், முற்றிலும் தன்னலம் சார்ந்து
அடிமைத்தனத்தில் ஊறி வணங்குவது எப்படி ஒழுகலாறு எனப்படும்? எனவே, இப்படிப்பட்டட இடங்களில் கலாச்சாரம் என்றால் பண்பாடு எனக் கருதாமல், பழக்கம் என்றே குறிப்பிட்டால் போதும்.
பழந்தமிழகத்தில் நாகரிகம் என்பதே பண்பாடு என்னும் பொருளிலும் வந்துள்ளது. திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம்
என்கிறார்(குறள் 580). அஃதாவது எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகம்
என்கிறார் அவர். அதனால் பண்பாடு அப்பொழுது இல்லை என்று அவசரப்பட்டு
முடிவிற்கு வந்துவிடாதீர்கள். பண்பு, பண்புடைமை என்பன பழந்தமிழர்க்கே உரிய
பண்புகள் அல்லவா?
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (திருவள்ளுவர், திருக்குறள் 996)
எனத் தமிழ்மறை பண்பாட்டை வலியுறுத்துகிறது அல்லவா?
சால்பு, சான்றாண்மை முதலான பிற சொற்களாலும் பழந்தமிழர் பண்பாட்டைக் குறிப்பிட்டனர்.
“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” எனக் கலித்தொகை (பாடல் 133) கூறுகிறது. பண்பு + பாடு என இணைத்துப் பண்பாடு எனத் தி.தீ.சிதம்பரநாதர்(டி.கே.சி.) உருவாக்கினார் என்பர்.
பண்பு, சால்பு, சான்றாண்மை, பண்பாடு
முதலான தமிழ்ச்சொற்களை விட்டுவிட்டுக் ‘கலாச்சாரம்’ என்னும் பொருளற்ற
சொல்லை நாம் பிடித்துக் கொண்டிருப்பது நம் அறியாமையே!
எனவே, கலாச்சாரத்தை அகற்றுவோம்! பண்பாட்டைப் பேணுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment