நினைவேந்தலுக்குத் தடை! :  சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா?

  இறந்தவரைப் போற்றுவது என்பது உலகம் தோன்றியது முதலே உலக மக்களிடம் இருக்கும் பழக்கம். தமிழ் மக்கள் இந்தப் பண்பாட்டில் திளைத்தவர்கள். எனவே, இறந்தவர்களைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பண்பாடு காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. இன்று நாம் வணங்கும் தெய்வம் பலவும்  வழி வழி, வழிபட்ட இறந்தவர்களே!
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
(திருவள்ளுவர், திருக்குறள் 42)
என இறந்தவரைப் போற்றல் இல்லறத்தான் கடமை என்கிறது உலகப்பொதுநூல். இறந்தபின்னர் எவ்வாறு  துணை நிற்பது என்கிறீர்களா? இறந்தவர்களின் பணிகளையும் பண்புகளையும் போற்றி  நம் நினைவில் அவர்களை நிலைக்கச்  செய்வதுதான் இறந்தவர்க்கு நாம் செய்யும் கடமை.
 அத்துடன் திருவள்ளுவர் நிறுத்திக்கொள்ளவில்லை. கடல்கோள்களால் தமிழினம் அழிந்துபோனது கண்டு மிகவும் வருந்தி அவர்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டும் என்கிறார்.
  குமரிக்கடலால் கொள்ளப்பட்டுக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைத்துப்போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (திருவள்ளுவர், திருக்குறள் 43)
என்கிறார்.
  அக்காலத்தில் இயற்கையால் அழிவுற்றளவர்களை   நினைவில் கொள்ள வேண்டும் என்னும் பொழுது இக்காலத்தில்,  இனப்படுகொலையில் உயிர்பறிக்கப்பட்டவர்களின் நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டியது நம் கடமை அன்றோ!
  இத்தகைய நினைவேந்தலின் ஒரு பகுதியாகச் சென்னைக் கடற்கரையில் மெழுகு ஒளி ஏற்றி வணங்குவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  தொன்றுதொட்டு வரும் நினைவேந்தல் கடமையை ஆற்றுவதற்காக மே 17 இயக்கத்தினரும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னைக் கடற்கரைக்கு வந்தபொழுது தளையிடப்பட்டுள்ளனர்.
   சல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு இவ்வாறு சென்னைக் கடற்கரையில் நினைவேந்தல் கொண்டாடுவதாகப் பாசக. வினர் கூறுகின்றனர். மே 3 ஆவது  ஞாயிறு, சென்னைக் கடற்கரையில் மெழுகுஒளி ஏற்றி அஞ்சலி செலுத்துவது என்பது கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான். இவ்வாறு ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தும் திருமுருகன் காந்தியையும் அவரது மே 17 இயக்கத்தினரையும், அதுபோல் வேல்முருகனையும் அவரது தமிழக வாழ்வுரிமைக்கட்சியினரையும் அரசு தளையிடப்பட்டுள்ளது.
  சென்னைக்கடற்கரையில் கூடுவதற்குத் தடையிருந்ததாகக் கூறுகின்றனர். தடையிருக்கும் பொழுது கூடினர் என்றால், பொதுக்கூட்டம் நடத்தாமல் நினைவேந்தல் நிகழ்ச்சிதானே எனக் கருதியிருக்கலாம். அவர்களுக்கு மாற்றுஇடத்தைக் காவல்துறை ஒதுக்கி இதனை அமைதியாக முடித்திருக்கலாம்.
  தமிழ்நாட்டில் இந்தித்திணிப்பிற்கு எதிரான தமிழ்க்காப்புப் போரில்   இறந்தவர்களையும் சிறை சென்றவர்களையும் மொழிக்காவலர் எனப் பாராட்டி, உதவித்தொகை அளிப்பதற்கு இந்திய அரசு தடைசெய்தது.  எனவே, இந்தி எதிர்ப்பு ஈகியர் எனக் குறிப்பிடாமல் தமிழக அரசு உதவி வருகிறது.
  இலங்கையில் இந்தியத்தின் வழியில், சிங்கள அரசு சிங்கள வன்முறைப்படைகளால் உயிர் நீத்தவர்களைப் போற்றத் தடை விதிக்கிறது; நினைவேந்தல் இல்லங்களை உடைத்தெறிந்துள்ளது;  இனப்படுகொலையில் உயிர் பறிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கல்லறைகளைச் சிதைத்துள்ளது; ஆண்டுதோறும் மே 17 அன்று கடைப்பிடிக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து வருகிறது. இதனை மீறித்தான் ஈழத்தமிழர்கள் உயிர் ஈகியரைப் போற்றி வருகின்றனர்.
  தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி இருக்கும் பொழுது தமிழ்மக்கள்இறந்த தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்த்தத் தடை என்பது அறமற்ற செயல் அல்லவா? தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழத்திற்கும் ஆதரவாகத் தீர்மானம் இயற்றிய அ.தி.மு.க.கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுதே இந்த இழிநிலை ஏன்?
  “எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பதுபோல் தமிழக அமைச்சர்கள், மத்திய (பா.ச.க.) அரசின் தலையீடு இல்லை என்று சொன்னாலும்,  உண்மை அதுதான் என்பதற்கு இதுவும் சான்று. தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகக் காவல்துறைக்கு  முதலாளி மத்தியஅரசுதான்..
   சல்லிக்கட்டிற்காக மக்கள் திரண்ட பொழுது, மாநில அரசிற்கு எதிரானது எனக் கருதி மத்திய அரசு அமைதிகாத்தது. ஆனால், அங்கே நரேந்திரருக்கு(மோடிக்கு) எதிராக முழக்கம் எழுந்ததும், தங்கள் ஆட்சிக்கும் எதிரானது எனப் புரிந்து கொண்டனர். எனவேதான் சல்லிக்கட்டு போராட்டத்தை அடக்குமுறையுடன் முடித்து வைத்தது,
 அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேயல்லவா? எனவே சென்னைக் கடற்கரையில், நினைவேந்தலுக்கான நிகழ்வு என்றதும் கூடப்போகும் மக்கள்   திரள் கண்டு மத்தியஅரசிற்கு அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் தடை என மக்கள் கருதுகின்றனர்.
  ஆளுங்கட்சியின் நிலை  நமக்குப் புரிகின்றது. சிறு  குழுவாக இருக்கும் ஒன்றைப் பெரும் பிளவாக மத்திய அரசு அச்சுறுத்திக் காட்ட முயன்றாலும் வெற்றி காண இயலவில்லை. இருப்பினும் தொடர்ந்து வரும் மத்திய அரசின் அச்சுறுத்தல்களால்இது போன்ற செயல்களுக்கு மாநில அரசு இடங்கொடுக்கக்கூடாது. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசிற்கு எதிராக அணிவகுப்பதாக அதனை அச்சுறுத்தியேனும் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. எனவே,
தளையிடப்பட்ட அனைவரையும் உடனே அரசு விடுதலை செய்ய வேண்டும்!
தமிழக உரிமைகளைக் காவு கொடுக்காமல் மத்திய அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும்!
 தமிழர் நலன்களுக்குக் கேடு வரும் எனில் மத்திய  ஆட்சிக்கு எதிராகச் செயல்பட வேண்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை  : அகரமுதல 188, வைகாசி 14, 2048 / மே 28, 2017