Friday, May 5, 2017

கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்




கா.பூ.முனுசாமியைப் பன்னீர் அணியின் தலைவராக்கலாமே!

  அ.தி.மு.க. மூன்றாகப் பிளவுபட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை. தீபா மாதவன் இக்கட்சியைச் சாராதவர். அவர் பக்கம் அதிமுக ஆதரவாளர் சிலர் போனாலும், இதைப் பிளவாகக் கூறமுடியாது. இரத்தத் தொடர்பு உறவு என்று மட்டும் ஒருவரை ஆதரிக்கும் முட்டாள்தனம் உள்ள சிலர் சில காலம் அவர் பக்கம் இருக்கலாம். அதனால், கட்சி உடைந்ததாகக் கூறமுடியாது.
  பா.ச.க. ஆதரவு பன்னீர் செல்வம் பக்கம் சிலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கலைஞர் எதிர்ப்பு என்ற அதிமுக கொள்கையைச் சசிகலா அல்லது சசிகலா குடும்ப எதிர்ப்பு என்ற ஒற்றைக் குறிக்கோளாக மாற்றியுள்ளனர். பாசகவின் வலிமையான பின்னணியும் மிரட்டல் உருட்டல்களும் இருப்பினும் ஒற்றை இலக்க எண்ணிக்கையைத் தாண்டாத இவர்களைக் கொண்டு கட்சி பிளவுபட்டுள்ளதாகக் கூறக்கூடாது. ஊடகத்தின் துணையால்,  பன்னீர் செல்வத்திற்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போன்ற மாயையை உருவாக்கி வருகிறார்கள். இந்த மாயை நிலைக்காது.
  இந்த அணியின் பக்கம் நிற்கும்வரை – அதன் முன் நொடி வரை – சசிகலாவே எல்லாம் என்றவர்கள், திடீரென்று எதிர்ப்புக் குரல் கொடுப்பதிலிருந்தே மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். சசிகலா குடும்பத்தினர்தான் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதாகக் கூறுகிறார்கள். அப்படியானால்,  அவர்களால் பயனடைந்தவர்கள் அவர்கள் பக்கம்தானே இருப்பார்கள். அவ்வாறிருக்க அனைவருமே அக்குடும்பத்தினருக்கு எதிர்ப்பாக உள்ளனர் என்பது  பொய்தானே!
  பன்னீர் அணி உருவாகும் முன்னர் இருந்தே சசிகலா எதிர்ப்பு குரல் கொடுத்து இருப்பவர்  மேனாள் அமைச்சர் கா.பூ.முனுசாமி(கே.பி.முனுசாமி). அவர், பன்னீர்க் கூட்டாளிகள் போல், பயன்களைத் துய்த்துவிட்டுஇப்பொழுது அதிக பயனை எதிர்நோக்கி யார் ஆட்டுவிப்பதற்கோ ஆடுபவரல்லர். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் இவர்களுக்கும் பொருந்தும். எனவே, குடும்பத்தினர் பயனடைவு போன்ற குற்றச்சாட்டுகளையும் ஊழல் நாயகர்கள் போன்ற  உண்மைகளையும் பிறர் மீது சுமத்த அருகதையற்றவர்கள்.
  சசிகலா எதிர்ப்புதான் உண்மையெனில், இவர்களனைவரும் அவ்வாறு தொடக்கம் முதலே சொல்லி வரும் கா.பூ.முனுசாமியைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். முதல்வர் வேட்பாளராக அவரையே சொல்ல வேண்டும். அவர் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனப் பொறுப்புகள் வகித்துப் பட்டறிவு மிக்கவர். ஆனால், அவரை முதல்வராக்குவதற்காக அவர்கள் கட்சித் தலைமையையும் ஆட்சித் தலைமையையும் எதிர்க்கவில்லையே! எனவே, அவ்வாறு சொல்ல மாட்டார்கள்.
  நேர்மையான ஆட்சியோ, தமிழ்நாட்டவர் நலனோ, இவர்கள் இலக்கு அல்ல. பா.ச.க.வின் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க வேண்டும்; திரட்டிய செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்; மேலும் செல்வம் குவிக்க வேண்டும் என்பனதாம் நோக்கங்கள்.
   பா.ச.க.வின் கைக்கூலிகள் என்று மக்களால் சொல்லப்படுகின்ற இவர்கள், தங்களை   நேர்மையாளராக மாற்ற, இதுவரை அளவுக்கு மீறிச் சம்பாதித்த சொத்துகளை அரசிடம் ஒப்படைக்கட்டும்! தங்களின் நிறுவனக் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக அறிவித்து உள்ளபடியான வரிகளைச் செலுத்தட்டும்! குடும்பங்களில்  ஓர் உறுப்பினர் தவிர பிறர் கட்சிப்பொறுப்புகளிலிருந்தும் அதன் மூலம் பெற்ற பிற   பொறுப்புகளிலிருந்தும் விலகட்டும்! முன்னர்க் குறித்தவாறு முனுசாமியின் தலைமையை ஏற்கட்டும்!
 இல்லையேல் இணைவதாகக் கூறிக் கேட்கும்அமைச்சர் பதவிகளை, இப்பொழுதே தாய்க்கழகத்திற்குத் திரும்புவதாகக் கூறிப் பெறட்டும்!
  பா.ச.க.வின் ஊதுகுழலாகச் செயல்பட்டுத் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தைப் பிடுங்கியிராவிட்டாலோ, கட்சிப்பெயரைத் தடை விதிக்காமல் இருந்தாலோ பொறுப்பிலுள்ள அதிமுக கட்சிதான் வாகை சூடும். அவ்வாறில்லாமல் பொதுமக்கள் கருத்துகளுக்கேற்ப முடிவெடுப்பதாகப் பொய்யாகக்  கூறுவது தவறாகும். பொதுமக்கள் தங்கள் முடிவுகளை வாக்குச்சீட்டுகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். அது குறித்துத் தேர்தல் ஆணையம் கவலைப்பட வேண்டா!
  என்னதான் அடாவடித்தனம் செய்தாலும் அதிமுகவில் பெரும்பான்மையர் நிலைமாறாமல் இருப்பதைப் பா.ச.க.வும் உணரவேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக அல்லது திமுக என்ற நிலைதான் உள்ளது. இதை மாற்ற விரும்பித், தான் அரியணையில் அமரவேண்டும் என்ற பாசக கனவு கண்டு தவறான முயற்சிகளில் இறங்க வேண்டா!
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. (திருவள்ளுவர், திருக்குறள்  1080)
என்பதற்கு இலக்கணமாகத் தங்களை விற்றுக்கொள்ளும் போக்கில் ஆளுங்கட்சியினரும் இறங்க வேண்டா! இனியேனும் ஒன்றுபட்டுச் செயல்பட்டு செம்மையான ஆட்சி தர முடிவெடுக்கட்டும்!
  ஊடகங்களின் நாணயம் எத்தகையது என்பதற்கு ஒரு சான்று. அண்மையில் மேனாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுச் சிறைத் தண்டனை கிடைத்தது. இவர் எடப்பாடி பழனிச்சாமிபக்கம் இருந்திருந்தால் பெரிதாக இச்செய்தி பரப்பப்பட்டிருக்கும். ஆனால்,பன்னீர் அணியில் உள்ளதால் அவ்வாறு சொல்லாமல்  செய்தியை அடக்கியே வாசித்தனர். பன்னீரை ஆதரிக்க வேண்டும் என்பது ஊடகங்களின் நோக்கம் அல்ல! ஒருவேளை இப்பொழுது பன்னீர் முதல்வராகத் தொடர்ந்து வேறு யாரும் எதிர்த்து நின்றால், அவர் பக்கம் ஆதரவாக இருந்து பன்னீருக்கு எதிராகச செய்திகளை வெளியிட்டிருப்பர். எனவே,  ஊடகங்களை அளவுகோலாகக் கொண்டு எதையும் முடிவெடுக்கக்கூடாது. தம்மை வாழவைத்த கட்சியின் நிலைப்பிற்குப்பாடுபட வேண்டுமே தவிரமடியில் கனம் கொண்டவர்கள் அச்சத்தில் ஆடுவதற்கேற்பக் கட்சியினரும் ஆடக்கூடாது.  அதிமுக ஆட்சியில் பல குறைபாடுகள் உள்ளன. எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்காலம் முழுமையும் ஆட்சிபுரிய வேண்டும் எனபதற்காகவே இதனைச் சொல்கிறோம்.
  ஆட்சியினர்  ஆட்சியில் முழுக் கருத்து செலுத்தும் வண்ணம் அமைதியான சூழல் தேவை. அவ்வாறில்லாமல் நாடு நலிகிறது.   எனவே, நாட்டு நலன்கருதியாவது, பா.ச.க.காட்டும் கற்பனை உலகிலிருந்து மீண்டு, கட்சிக்குத் திரும்பி ஒற்றுமையாகச் செயல்பட வேண்டுகிறோம். பா.ச.க.வும் தன் அத்துமீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டுகிறோம். இதே நிலை தொடர்ந்தால் பா.ச.க., தி.மு.க.விற்கும் இதே  குழப்பநிலையை ஏற்படுத்தும். எனவே, தி.மு.க.வும் இதை எதிர்க்க வேண்டும். தேர்தல்மூலம்ஆட்சியில் அமருவதற்கான வழிவகைகளில் ஈடுபடவேண்டும்!
தமிழக அரசியல் குழப்பம் விரைவில் அகலட்டும்!
மக்கள் குறைகளைக் களைய அரசு ஆவன செய்யட்டும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive