Saturday, May 27, 2017

இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்


இரசினி கட்சி அரசியலில் இறங்கினால் என்ன?

  சிவாசி (இராவு) கயக்குவாடு(Shivaji Rao Gaekwad) என்னும் இயற்பெயர் கொண்ட நடிகர் இரசினிகாந்து அல்லது இரசினிகாந்தன், 160 திரைப்படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த நடிகர்.  திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததுமே அரசியல் உலகில் காலடி எடுத்து வைக்க ஆசைப்படும் இன்றைய சூழலில் அவருக்கும் அரசியல் உலகில் அரங்கேற்றம் காண ஆசைவருவதில் வியப்பில்லை. ஆனால், ஒரு புறம் ஆசையும் மறுபுறம் அச்சமுமாக இருதலைக் கொள்ளி எறும்பாக அவர் இருப்பதால் அரசியல் பூச்சாண்டி காட்டுவதுபோல் நடந்துகொள்கிறார். மக்கள்திலகம் எம்ஞ்சியார்  தவிர, நடிகர்திலகம் சிவாசிகணேசன் முதலான நடிகர்களின் அரசியல் வாழ்வு எதிர்பார்த்த அளவு ஒளிவிடவில்லை: சேர்த்துவைத்த செல்வம் கரைந்ததுதான் கண்ட  பலன். எனவேதான், இரசினிகாந்தும் தயங்குகிறார்.
  அண்மையில் இரசினிகாந்து தன் நேயர்களுடன் கட்சி அரசியலில் ஈடுபடஉள்ளதுபோல் பேசிய பேச்சால் பல எதிர்வலைகள் எழுந்துள்ளன. அவருடைய குடி முதலான தீய பழக்கங்கள், தமிழர் துன்புறும்போது அமைதி காத்தல்போன்ற பலவற்றைச் சுட்டிக்காட்டி அவரது அரசியல் நுழைவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவ்வாறு கூறப்படுவன எல்லாம் இதற்கு முன்னரே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த பிறருக்கும் பொருந்தும். அவ்வாறிருக்க இவரிடம் மட்டும் வினா எழுப்பிப் பயனிலலை.
 மன்பதை நோக்கில் எந்தப்படததில் நடித்துள்ளார் என்கின்றனர். திரைப்படம் கதையாசிரியர், இயக்குநர் சார்ந்தே உருவாகிறது. அந்த நிலைகளில் அவர் இல்லை. படம் எடுப்பவராகவும் அவர் இல்லை.  எனவே, வாங்கும் ஊதியத்திற்கேற்ப நடிப்பதைக் கொண்டு அவரைக் குறைகூறக்கூடாது.
  திடீரென்று தன்னைப் பச்சைத் தமிழன் என்பது, அப்படிச் சொன்னால்தான் தமிழ்நாட்டில் அரசியல் பருப்பு வேகும் என்ற நிலையை உணர்த்துகிறதே தவிர, அவரைத் தமிழனாகக் காட்டவில்லை. நடிகர் என்ற முறையில்  சிறப்பாகத் தன் பொறுப்புகளை ஆற்றியவரிடம் வேறுவகையில் எதிர்நோக்குவதும் நம் தவறு. எனவே, அவருக்கு எதிரான போராட்டங்கள் அவரை உயர்த்த வழிவகுக்குமே தவிர அவரது குறைகளை வெளிப்படுத்த உதவாது. அவரது அரசியல் நுழைவை விரும்பாதவர்கள், அதனைப் புறக்கணிக்க வேண்டுமே தவிர எதிர்ப்பதில் பயனில்லை. அதுபோல், இரசினிகாந்தின் நேயர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர,  அவரிடம் சண்டையிட்டுப் பயனில்லை.
  தமிழ்வழிக்கல்வி, தமிழ்வழி வழிபாடு, முழுமையான தமிழ்ஆட்சிமொழிச் செயலாக்கம், இந்தித்திணிப்பு எதிர்ப்பு, சமற்கிருதத்திணிப்பு எதிர்ப்பு, மத்தியில் தமிழ் ஆட்சிமொழி,  சல்லிக்கட்டு முதலான பண்பாட்டு தொடர்பான சிக்கல்கள், கூடங்குளம், நெடுவாசல் முதலான மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கைவிடல்  முதலான பல்வேறு பொருண்மை சார்ந்த கருத்தோட்டமும் செயல்திட்டமும் என்ன வைத்துள்ளார்? ஈழத்தமிழர்களின் படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கித்தரல், எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள் நல வாழ்விற்கும் நில மீட்பிற்கும் உடைமைகள் காப்பிற்கும் வழி காணல், தமிழ் ஈழம் மலர வழி வகுத்தல்,  உலகத் தமிழர்களிடையே தமிழ் கற்பிக்கப்படவும் தமிழர் மேம்படவும் என்ன திட்டம் வைத்துள்ளார்? பாசகவின் கையாளாகச் செயல்படுவார் என்ற அச்சம் போக்க என்ன உறுதி தருகிறார்? என்பன போன்று அவர் விளக்கவேண்டியன ஏராளம்! ஏராளம்! ஆனால், இவற்றிலுள்ள  தெளிவின்மைகளுக்காக அவரை, அரசியலில் நுழையக்கூடாது எனச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை  இல்லை! இவர்களைக்கேட்டுத்தான் கட்சி தொடங்க வேண்டும்என்பதும் அவருக்கும் தேவையில்லை.
  ஆனால், “கட்சிதொடங்கினால் கெட்டவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன்” என்கிறார் அல்லவா? அதனை இப்பொழுதே நிறைவேற்றச் சொல்லலாம்! கொலை, மோசடி முதலான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரது மனைவி நடத்தும் பள்ளியை மக்கள் நலம் நாடும் தமிழ்வழிப் பள்ளியாக நடத்தச் சொல்லலாம். கருப்புப்பண நிறவனங்களிடம் நன்கொடைகள் வாங்காமல் எப்படிக் கட்சியை நடத்துவார் என விளக்கச்சொல்லலாம். இவற்றிற்கான விளக்கங்கள் தருவதும் அவரது கடமை என்பதை அவரும் உணர வேண்டும்.
தமிழ் ஏங்கே! தமிழன் நிலை
என்ன எனத் தாமறியாத்
தமிழர் ஏன்பார்
தமிழர் நலம் காப்பவராய்
அரசியலின் சார்பாக
வர முயன்றால்

இமைப்போதும் தாழ்க்காமல்
எவ்வகையும் கிளர்ந்தெழுதல்
வேண்டும்!  (பாரதிதாசன், தமிழியக்கம்)
  என ஆர்ப்பரிப்போரைப் பாராட்டுகிறோம். என்றாலும் இந்தத் தகுதியில்லாதவர்கள்தான் நாட்டை ஆளத் துடிக்கிறார்கள். ஆதலின், மக்களைப் பக்குவப்படுத்தாமல் தனியரை எதிர்த்துப் பயனில்லை என்பதை உணர வேண்டும்.
தமிழாய்ந்த தமிழன்தான்
தமிழ்நாட்டில் முதலமைச்சாய்
வருதல் வேண்டும்

தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த்
தமிழ்நாட்டில் வாராது
தடுத்தல் வேண்டும்.

நமை வளர்ப்பான் நந்தமிழை
வளர்ப்பவனாம்! தமிழ் அல்லால்
நம்முன்னேற்றம்
 அமையாது. சிறிதும் இதில்
ஐயமில்லை, ஐயமில்லை! (பாரதிதாசன், தமிழியக்கம்)
 என்பதையும்
தமிழறியான் தமிழர் நிலை
தமிழர்நெறி தமிழர்களின்
தேவை, வாழ்வு

தமையறிதல் உண்டோ எந்
நாளுமில்லை! (பாரதிதாசன், தமிழியக்கம்)
என்பதையும் இரசினி நேயர்களுக்கு உணர்த்த வேண்டும்.
நடிப்பைப் பார்த்து மகிழ்! நடிகனாகப் போற்று!
ஆனால், அடிமையாக மாறி ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க எண்ணாதே!
என நாம் இரசினி அன்பர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்  (திருவள்ளுவர், திருக்குறள் 517)
என, நம் நாட்டிற்கும் மக்களுக்கும் உலகத்தமிழ் இனத்திற்கும் நேரிட்டுள்ள இன்னல்களைக் களையவும் நலமான பாதையில் இட்டுச்செல்லவும் தக்கவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவுறுத்த  வேண்டும்.
தமிழ்நலம்நாடும் தமிழர்கள் தமிழக அரசியலை அணி செய்வார்களாக!
இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive