தேர்வுக்கொள்கை : இடைப்பாடியார்,
செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப்
பாராட்டுகள்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
என்றார் ஔவையார்(மூதுரை 10).
வல்லார் ஒருவர் உளரேல் அவர் செயலால்
எல்லார்க்கும் விளையும் நன்மை
என நாம் சொல்லலாம்.
பணியாற்றும் இடங்களில் எல்லாம் பாங்குடன்
செயல்படும் திரு உதயச்சந்திரன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறைச் செயலர்
பொறுப்பேற்ற பின்னர், பள்ளிக்கல்வித்துறை, நூலகத்துறை முதலானவற்றில்
அனைத்துத் தரப்பாரும் போற்றும் வண்ணம் நற்செயல்கள் புரிந்து வருகின்றார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,
கல்விநலனில் கருத்து செலுத்தும் வண்ணம் செயல்படுவதால், இருவரும் இணைந்து
பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றங்களைக் கொணர்ந்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
காட்சிக்கு எளியராக உள்ளதால், அவருடனும் கலந்து பேசி கொள்கை முடிவு எடுத்து
நடைமுறைப்படுத்துவது எளிதாகிறது.
இம்மூவர்
கூட்டணியால் பள்ளிக்கல்வித்துறை அடைந்துவரும் மாற்றங்களை
எதிர்க்கட்சியினரும் பாராட்டுவதிலிருந்தே அவையாவும் வரவேற்கத்தக்கனவே
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மேனிலைப்பள்ளி இறுதித்தேர்விலும் (+2) உயர்நிலைப்ள்ளி இறுதித்தேர்விலும் (10) மதிப்பெண்தரவரிசையை அறிவிப்பதற்கு முற்றுப்புள்ளி
இட்டுள்ளது தமிழக அரசு. ஆனால், தரநிலையை அறிமுகப்படுத்தியதுபோல்
ஊடகங்களில் வந்துள்ளன. அரசாணையில் அவ்வாறில்லை. சில உரைகளில் மத்தியக்
கல்வி நிலையுடன் ஒப்பிட்டுக் கூறியதால் அவ்வாறான எண்ணம் பரப்பப்பட்டுள்ளது.
மாநில முதல் மதிப்பெண் என்பதுபோன்ற உயர்நிலை வரிசையை அறிவிக்கும் முறையை நிறுத்தியதால், மாணாக்கர்களை
மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக உருவாக்கிக் கல்வி வணிகம் புரிவோர்
கொடுஞ்செயலுக்கும் முற்றுப்புள்ளி இடப்பட்டுவிட்டது.
12 ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களை 11 ஆம்
வகுப்பிலேயே திணித்து, மாணாக்கர்களுக்கு ஓராண்டிற்குரிய பாடத்திட்டங்களை
இருட்டடிப்பு செய்யும் நிலையையே தனியார் பள்ளிகளும் ஆங்கில வழிப்பள்ளிகளும்
நடைமுறைப்படுத்தி வந்தன. இதனால் மாணாக்கர்களுக்குச் சிந்திக்கும் திறன்
இல்லாமல் போனது. மருத்துவம், பொறியியல் முதலான மேற்கல்விக்குச் செல்லும்
பொழுது பெரிதும் இடர்ப்பட்டனர். மிகுதியான மதிப்பெண்கள் பெற்றுக்
கல்லூரியில் சேர்ந்தவர்கள், தோல்வியைத் தழுவும் நிலையே ஏற்பட்டது. 11 ஆம் வகுப்பிலும் பொதுத்தேர்வு என்பதால் கல்வி வணிகர்களின் தவறான சந்தைப்படுத்தலுக்கும் முடிவுகட்டியாகிவிட்டது.
கல்வி உளவியலாளர்கள் நீண்டகாலமாகச் சொல்லி வந்தவை நிறைவேற்றப் படுகின்றன.
மாணாக்கர்கள், 10, 11, 12 எனத்
தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதுவதால்,அவர்களின் உளநிலை பாதிக்கப்படும்
என்றும் பேசப்படுகிறது. கல்லூரிகளில் பருவமுறைத்தேர்வு என ஆண்டிற்கு இரு
முறைகள் பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இவற்றையும் பருவமுறைத் தேர்வுகள் எனக் கருதலாம்
அரசின் அறிவிப்புகள் தமிழ்வழிப்பள்ளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
எனினும் அரசு,
ஆங்கிலவழிப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தினால்தான் மாணாக்கர்கள் வளர்ச்சி பெறுவர்.
பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் தத்தம் சொந்தப்பணத்திலிருந்து கல்விக்கூடத்தை நடத்தக்கூடிய செல்வநிலை உள்ளவர்களுக்கு மட்டுமே அரசு இணைப்பாணை வழங்க வேண்டும். இப்பொழுது உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் இது குறித்து விவரம் கேட்டு இயலாதவர்களின் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
சொந்தச் செல்வத்தில் பள்ளிகளை
நடத்தமுன்வருவோர், எவ்வகைக் கூடுதல் கட்டணமும் பெறக்கூடாது எனவும் இலவசக்
கல்வியாக அளிக்க வேண்டும் எனவும் நடை முறைப்படுத்தி, அனைவருக்கும் இலவசக் கல்வியே அளிக்க வேண்டும்.
10, 10+2 என்னும் முறைக்கு மாறாக, 11, பட்டமுன்வகுப்பு என நடைமுறைப்படுத்தலாமா எனவும் அரசு சிந்தித்துப் பார்த்துத் தக்க முடிவெடுக்க வேண்டும்.
சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வரையறை வேண்டும்.
குறிப்பிட்ட சிறுபான்மைக் குமுகாயம்(சமுதாயம்) மொத்த மக்கள் தொகையில்
இருக்கக்கூடிய விழுக்காட்டு அளவிற்கு அவர்கள் நடத்தும் பள்ளியின்
எண்ணிக்கை, மொத்தப்பள்ளிகளின் விழுக்காட்டிற்கு மிகாமல் அமைய வேண்டும்.
அஃதாவது சிறுபான்மைக் குமுகாயம் ஒன்று மொத்த மக்கள் தொகையில் 5%
இருக்குமெனில், அக் குமுகாயம் நடத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை 5% இற்கு
மிகக்கூடாது. வரம்பின்றிச் சிறுபான்மைக் கல்விக்கூடங்கள் பெருகுவதும் ஆங்கிலவழிக்கல்விப் பெருக்கத்திற்குக் காரணமாகும்.
(பணிஅமர்த்தங்களில் இட ஒதுக்கீட்டிற்கு சிறுபான்மைக் கல்வியகங்களில்
இடமில்லை. எனவே, இட ஒதுக்கீட்டிற்குரியோர் பாதிக்கப்படும் அவல நிலையும்
உள்ளது.)
அரசு பள்ளியிலும் தனியார் பள்ளியிலும் ஊதிய விகிதம் இணையாக இருக்க வேண்டும்.
எல்லார்க்கும் எல்லாமும் தமிழில் என்பதுநோக்கிப் பள்ளிக்கல்வித்துறை செயல்பட வேண்டும்.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.வல்லவர்கள் உள்ள அரசால் இஃது இயலும்!
உதயச்சந்திரன் எண்ணினால் முடியாதது ஒன்றுமில்லை.
செங்கோட்டையார் இதற்கேற்பச் செயல்பட்டால் தமிழ்நாடு கல்வியில் தலைநிமிர்ந்து நிற்கும்!
எடப்பாடியார் வழிகாட்டினால், வளமான தமிழ்நாட்டை நாம் விரைவில் காணலாம்!
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 666)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை :அகரமுதல 187, வைகாசி 07,2048 / மே 21, 2017
No comments:
Post a Comment