பகுத்தறிவு முத்து மீனாட்சிசுந்தரம் 


விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (திருவள்ளுவர், திருக்குறள் 548)
   தொகுத்து இனிமையாகச் சொல்பவர்  கூறுவதை உலகம் விரைந்துகேட்கும் என்கிறார் தெய்வப்புலவர்.
  இவ்வாறு இனிமையாகவும் தணிமையாகவும் சொல்லும் வல்லமை மிக்கவர் முத்துச்செல்வன் என்னும் திரு மீனாட்சி சுந்தரம். எனவேதான் அவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பொழுது எண்ணியவற்றை எளிதில் நிறைவேற்றினார்.
  சொந்தஊரான திருச்சிராப்பள்ளியில் இருந்து பெங்களூர் வந்த ஆண்டு 1966. வந்தவுடன் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். உறுப்பினராகவும் தலைவர் முதலான பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். இப்பொழுதும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து  தொண்டாற்றிவருகிறார்.
  பெங்களூரில், 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதை நாமறிவோம். பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த பொழுதுதான், இவரின் முயற்சிகளால் சிலை  திறக்கப்பட்டது.  தலைவராக இருப்பதற்கு முன்னரே அம்மாநில முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி  ஆகியோரிடம் சங்கம் தொடர்பு கொண்ட பொழுது உற்றுழி உதவியாக இருந்தார். தலைவரானதும்  திருவள்ளுவர் சிலை திறக்கச்செய்து  அனைவரும் மறவாப் புகழ் எய்தியுள்ளார்.
   இவரது பணிகளும் பழகும் பாங்கும் இவரை அச்சங்கத்தின் தலைவராக மூன்று முறை இருக்கச் செய்தது.
  தமிழ்ச்சங்கத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு மற்றுமொரு சான்று. இவர், பெற்றோர் பெயரில் இராதா அம்மாள் முத்துக்கருப்பன் அறக்கட்டளை என ஒன்றும் மனைவி பெயருடன் இணைத்து முத்துசெல்வன் வசந்தா அறக்கட்டளை என ஒன்றும் நடத்தி வருகிறார். இதனால் மாணாக்கர்கள் கல்வி வளர்ச்சிக்கும் தமிழ்க்கல்விக்கும் தூண்டுகோலாய் விளங்கி அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறார்.
  தனித்தமிழ்ப்பற்றாளர். முதல் பெண் அருட்செல்வி (பொறியியல் முனைவர்), பொற்செல்வி( உயிரிநுட்பவியல் முனைவர்), தாமரை (மருத்துவர்), செம்பியன் (கணிப் பொறியாளர்) முதவான இவரது மக்களின் பெயர்களே, இவரது தமிழ்ப்பற்றுக்குச்சான்றாகும். பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ்ப்பெயர்களே சூட்டியுள்ளார்.
  தமிழ்ப்பற்றாளர் என்றாலே, ஈழத்தமிழர்  நலன் நாடுநராகவும் தமிழீழ ஆதரவாளராகவும்தானே இருப்பர். இவரும் அதற்கு விதி விலக்கல்ல! தமிழீழ ஆதரவு பேரணிகளையும் மாநாடுகளையும் நடத்தியுள்ளார். பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் மூலமாக ஈழத்தமிழர்  இன்னல்களை உரைக்கும் ஆங்கில நூலை வெளியிட்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உண்மை அறிய உதவினார்.
 தமிழகத்தில் மட்டுமல்லாமல், கருநாடக மாநிலத்தில் உள்ள பிற தமிழ்ச்சங்கங்கள், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், தில்லித் தமிழ்ச்சங்கம் எனப் பிற மாநிலத் தமிழ்ச்சங்கங்கள் நடத்தும்  நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்று வருகிறார். இத்தகைய விரிந்த தொடர்பால், அனைத்திந்தியத்தமிழ்ச்சங்கம் அமையத் தூண்டுகோலாக இருந்தார். இப்போது அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செயல் தலைவராகத்திகழ்ந்து இந்திய அளவில் தமிழ்ப்பணி யாற்றிவருகிறார்.
  குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தலைநகரத்தமிழ்ச்சங்க நிறுவனர் சுந்தராசன் முதலானோர் ஈடுபாட்டால் அமைந்த தொல்காப்பியர் சிலை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவையால், இவர் செயல்தலைவராக இருக்கும் இக்காலக் கட்டடத்தில் அமைக்கப்பட்டு இவரால் திறக்கப்பட்டதே! இவ்வாறு இவர் தன் தமிழ்ப்பணிகளை நாடுமுழுவதும் ஆற்றி வருகிறார். இவரது தமிழ்த்தொண்டறிந்தே சிங்கப்பூர் தமிழர் இயக்கம் இவரை அழைத்துச் சிறப்பித்துள்ளது.
   அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கத்தின் ‘தமிழ்ப்பணிச் செம்மல்’ விருது முதலான  விருதுகள் இவரது தொண்டுகளை அறிந்து அணி சேர்ப்பனவாகும்.
  இவர், தன்னைப் பொறியாளராகச் சொல்லிக் கொள்வதைவிடத் தமிழ்த்தொண்டனாகவும்  பகுத்தறிவு இயக்கத் தொண்டனாகவும் கூறிக்கொள்வதில் பெருமை கொள்பவர்.
  முத்துக்கருப்பன்-இராதா அம்மையார் இணையருக்கு மகனாகப் பங்குனி 23, 1974 / ஏப்பிரல் 05, 194  அன்று பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் அல்லவா? இவரது தமிழ்த் தொண்டும் பகுத்தறிவு இயக்க ஈடுபாடும் பள்ளிப்பருவத்திலேயே  மலரத் தொடங்கிவிட்டது.  எட்டாம் வகுப்பு மாணாக்கனாக இருக்கும் பொழுது  தந்தை பெரியார் திருச்சியில் நடத்திய இந்தி அழிப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
  பத்தாம் வகுப்பு மாணாக்கனாக இருக்கும் பொழுது முத்தமிழ்க் காவலர்  கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய”ஆகாசவாணி” எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார். அந்தத்தமிழ்உணர்வு இன்றும் அவரிடமிருந்து விடை பெறாமல் இணைந்தே உள்ளது.
  மாணவப் பருவம் முதல் முதல் தடம் புரளாமல்திசை மாறாமல் பெரியார் இயக்கத்  தொண்டனாக விளங்கி வருகிறார்; கருநாடகத்தில்  பகுத்தறிவாளர் கழகம் அமைய உறுதுணையாக இருந்ததுடன்  பகுத்தறிவுக்கழக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருகிறார்; கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போகத் தொண்டாற்றி வருகிறார்; பெங்களூருக்குத் தநதை பெரியாரை வரவழைத்து மாநாடும் நடத்தியுள்ளார். குடும்பத் திருமணங்கள் அனைத்தையும் தமிழ் முறையில் பகுத்தறிவு வழியில் நடத்தியுள்ளார். பல சீர்திருத்தத் திருமணங்களை நிகழ்த்தி  மக்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்து வருகிறார்.
 இவர் களப்பணி யாற்றும் வீரருமாவார். தமிழ்ச்செம்மொழிப் போராட்டங்கள்,  கருநாடகத் தமிழர் உரிமைப் போராட்டங்கள், ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆதரவுப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளதுடன் இவரும் சில போராட்டங்களின் ஏற்பாட்டாளராக இருந்து அவற்றை நடத்தியுள்ளார்.
  திருக்குறள் தேசிய நூல் மாநாடுகள், தமிழ் ஆட்சிமொழி மாநாடுகள், உலகத்தமிழ்க்கழக மாநாடுகள், திராவிடர் கழகக் கூட்டங்கள், பெங்களூர்த் தமிழ்ச் சங்க அறக்கட்டளைப்.பொழிவுகள், முதலானவற்றில் பங்கேற்று  உரையாற்றியுள்ளார்.
 சொற்பொழிவாளராக மட்டுமல்லாமல் கட்டுரையாளராகவும் திகழ்கிறார். ‘ஊற்று’ என்னும் பெங்களூர்த்தமிழ்ச்சங்கத் திங்களிதழ். ஆசிரியராகப் பல ஆண்டுகள். திகழ்ந்து கட்டுரைகளும் ஆசிரியஉரைகளும் எழுதி, இதழியலிலும் முத்திரை பதித்துள்ளார்.
  சங்க இதழ் தவிர,  உண்மை, விடுதலை, தமிழ்ப்பணி, தமிழர் முழக்கம், அகரமுதல மின்னிதழ் எனப் பல இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
 தமிழ்த்தொண்டர், பகுத்தறிவுத் தொண்டர், சங்கத்தொண்டர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், இதழாளர், அமைப்பாளர் முதலான பல்துறைச் சிறப்புகள் மிக்க ஆன்றோர்
பொறி.மீனாட்சிசுந்தரம்,தம் வாழ்க்கைத்துணைவியுடனும் குடும்பத்தினருடனும் நலமும் வளமும் உயர்வும் புகழும் சிறக்க நூறாண்டுகள் வாழ்க! வாழ்க! வாழ்கவே!
 
 இலக்குவனார் திருவள்ளுவன்
[அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து சித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017 அன்று சென்னையில் நடத்திய பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழாவின் பொழுதுஅளித்த வாழ்த்துரை]