கலைச்சொல் : இடைநல அரசு – care taker government
காபந்து அரசு என்றால் என்ன என்பது இன்றைய தலைமுறையினர் கேள்வி?
காவந்து(kawand) என்னும் உருதுச்
சொல்லில் இருந்து காபந்து என்ற சொல் உருவானதாகத் தமிழ்ப்பேரகராதியில்
(பக்கம் 869) குறித்திருக்கும். “முந்தும் அரவம் நச்சுயிரிகளால் ஏதம் வந்து கெடாமலே காபந்து செய்தாயே‘ என்பது சர்வசமய சமரசக் கீர்த்தனை)
காபந்து அரசு என்பதற்கு, “மறு அரசு
தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தில் நாட்டை ஆளும்அரசு” என
விளக்குகிறது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. இது விளக்கமே தவிர,
உரிய கலைச்சொல்லன்று.
சிலர் காவல் > காவந்து > காபந்து என விளக்கிக் காபந்து அரசு சரி என்பர்.
சிலர் (மனையறிவியல் அகராதி) care taker – காப்பாளர் என்கின்றனர்.
care taker என்றால் காப்பாளர் என்ற சொல்வதை விடப் பேணாளர் என்பதே பொருத்தமாக இருக்கும்.
என்றாலும் care taker government என்றால் பேணாளர் அரசு என்னும் பொழுது இயல்பான அரசு பேணா அரசா என்ற வினா வரும்.
தற்காலிக அரசு என்கின்றனர் பலர். தற்காலிகம் என்றசொல்லே தவறு. .
“temporary என்பது
நிலையற்றதைக் குறிக்கிறது. உயர் திணை அல்லாதது அல்+திணை = அஃறிணை
எனப்படுவது போல் நிலையற்றதைக் குறிப்பதற்கு அல்+நிலை=அன்னிலை என்று
சொல்லலாம்.” (சங்க இலக்கியச் சொற்களும் கலைச்சொல்
ஆக்கமும் பக்கம் 65, இலக்குவனார் திருவள்ளுவன் ஆய்வேடு,
செம்மொழித்தமிழயாய்வு மத்திய நிறுவனம்)
ஆனால், நிலையற்ற அரசு என்னும் பொருளில் அன்னிலை அரசு என்று சொல்வதும் இச்சூழலில் பொருத்தமாய் அமையாது.
இடைக்கால நல அரசு என்னும் பொருளில் care taker government – இடைநல அரசு என்பது சரியாக இருக்கும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment