அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது?
ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது!
நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது!
மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது!
மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை
கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர
வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே
அகற்றிவிட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத்
தளராமல்படித்தது தவறா? +2 வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்
எடுத்ததுதவறா? தகுவெண்(cut off marks) மதிப்பெண்கள்)196.5 எடுத்தது தவறா?
மேட்டுக்குடியினரையும் பெருநகரத்தினைரையும்போல் பணம் கட்டித் தனிக்கல்விப் பயிற்சி பெறாமல் தானே படித்து உயர் தேர்ச்சி அடைந்தது தவறா?
மக்களுக்காககத்தான் கொள்கைகளும் அரசும்.
ஆனால் மக்கள் நலனுக்கு மாறாகக் கொள்கையை வகுத்து எண்ணற்றவர் வாழ்க்கையில்
அரசுகள் விளையாடி வருகின்றன. வெளியே தெரிந்தது அனிதா. இதற்கு முன்பு ஒரு
மாணவச்சிறுமியின் தந்தையும் தறகொலை புரிந்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும்
வடக்கே கோட்டா நகரில் இப்பொதுத்தேர்வு அச்சத்தால் 17 பேர் தற்கொலை
புரிந்துகொண்டுள்ளதாயும் சூன் 2017 வரை மூவர் தற்கொலை செய்து
கொண்டுள்ளதாயும் இந்துசுதான் டைம்சு (சூன் 14, 2017 )என்னும் ஆங்கில இதழ்
குறிப்பிடுகின்றது.
நாடு முழுக்க இந்த எண்ணிக்கை மிகுதியாக
இருக்கும். எனினும் அனிதாவின் தள்ளப்பட்ட தற்கொலையே மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றம் வரை போராடிய அனிதா,
கையால் ஆகாத மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் இந்த
முடிவை எடுத்தாரோ தெரியவில்லை.
சிலர் ஓராண்டு காத்திருக்கலாம்; அடுத்த
முறை கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பாள் என்றெல்லாம்
உளறுகின்றனர். காத்திருக்கும் ஓராண்டில் கூலித்தொழிலாளியின் மகள்
கூலியாகத்தான் மாற வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டும் உறுதி இல்லை.
அனிதா எடுத்த முடிவு தவறானதுதான். நம் பாடத்திட்டம் தன்னம்பிக்கை தருவதாக இல்லாததும் ஒரு காரணம். ஆனால், அவர் எடுத்த முடிவு தவறானது என்பதாலேயே அந்த முடிவிற்குத் தள்ளியவர்கள் நல்லவர்கள் ஆகிவிடமுடியாது.
ஒரே இந்தியா ஒரே தேர்வு முறை என்பவர்கள்,
ஏன், மத்திய அரசின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுன (AIIMS)
கல்லூரியிலும் சவகர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வியகத்தின்
IJIPMER)கல்லூரியிலு்ம் இத் தேர்வு தேவையில்லை என்கின்றனர்.
ஒரே முறையான பாடத்திட்டம் இல்லாத பொழுது ஒரே வகையான வினாத்தாள் என்பது வஞ்சமல்லவா?
சமமில்லாக் கல்வித்திட்ட அடிப்படையில் மாணாக்கர்களை எடைபோடுவது பெருங்குற்றம் அல்லவா?
முறையற்ற அறமற்ற தேர்வுமுறையால்
பின்தங்கிய பகுதியைச் சேர்ந்தவர்களும் ஊரகப்ப குதியினரும் ஒடுக்கப்பட்ட,
பிற்படுத்தப் பட்டவர்களும் தீங்கிற்கு ஆளாகிறார்கள் எனக் கல்வியாளர்களும்
மன்பதை நல ஆர்வலர்களும் கூறி வருவதை உண்மை என்றே அனிதா காட்டியுள்ளார்.
இனியும் மத்திய அரசிடம் கெஞ்சும்போக்கைத் தமிழக அரசு கைவிடவேண்டும். தமிழ்நாட்டு
வரிப்பணத்தில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை
தமிழ்நாட்டவரருக்கு மட்டுமே என்றும் தமிழக அரசே தேர்வு முறையை
முடிவெடுக்கும் என்றும் அறிவிக்க வேண்டும்.
பிற நாடுகளில் கல்விபயிலச் சென்றால்
அந்நாட்டு மொழியில் தேர்ச்சி இன்றியமையாதது. அதுபோல் தமிழ்நாட்டில் படிக்க
விரும்புபவர்கள், தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
முதலாண்டில் தமிழ்மொழித்தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதைக்
கட்டாயமாக்க வேண்டும்.
மேனிலைப்பள்ளி இறுதித் தேர்வைத் தமிழக
அரசுதான் நடத்துகிறது. தனியார் தங்களுக்கேற்ற பணித்தேர்வை நடத்தலாம்.
ஆனால், அரசு மீண்டும் பணித்தேர்வையோ உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வையோ
நடத்துதல் கூடாது. மேனிலை இறுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் இட ஒதுக்கீட்டு முறையிலும் மட்டுமே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெற வேண்டும்.
. மருத்துவம், பொறியியல் முதலான அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வி வரையிலும் கட்டணமில்லாக் கல்வி வ்ழங்குவதைத் திட்டமிட்டு ஈராண்டிற்குள் செயல்படுத்த வேண்டும்.
மக்களுக்குக்கல்வி தர இயலா அரசு ஏன் தேவை? என்பதை உணர வேண்டும்.
மத்தியக்கல்வித்திட்டம் என்பது நாடு
தழுவியதல்ல. அம்முறையில் பயின்றவர்களால் மாநிலக்கல்வித்திட்டத்தில் உயர்ந்த
மதிப்பெண்கள் எடுக்க இயலாது. ஆனால், மத்தியக் கல்வித்திட்டம்தான்
உயர்ந்தது என்னும் மாயையை அரசு புகுத்துகிறது. அதன்மூலம் இந்தியையும்
சமற்கிருதத்தையும் திணிப்பதே அதன் நோக்கம்.
எனவே, மத்திய அரசு
கல்வியை மாநில அதிகார் வரம்பிற்குள் மீண்டும் கொண்டுவரவேண்டும். தான்
ஏதும் கல்விமுறையில் கருத்து சொல்ல விரும்பினால், மாநில அரசுகளிடம்தான்
கருத்தினைச் சொல்ல வேண்டும். தானே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய
அரசிற்குக் கூடாது. எல்லா இடங்களிலும் இந்தியா தழுவிய ஒரே முறையிலான
தேர்வுத்திட்டத்தைக் கைவிடவேண்டும்.
மத்தியக்கல்வி வாரியப்பள்ளிகளை மாநிலப்பள்ளிகளாக மாற்ற வேண்டும்.
இவை இனிமேல் செய்ய வேண்டியவை. ஆனால் அனிதாவை மரணக்குழிக்குள் தள்ளியவர்கள் அனிதாக்களின் வாழ்க்கையைச் சிதைத்தவர்கள், சிறைக்கம்பிகளை எண்ண வேண்டியதே உரிய தண்டனையாகும். எனினும் உடனடியாகத் தத்தம்
பொறுப்புகளில் இருந்து விலகுவதே அவர்கள் ஏற்றுக் கொள்ளும் குறைந்த அளவு
தண்டனையாகும். ஆனால் அத்தகைய அறவாணர்களாக இவர்கள் இருப்பின் இந்த நிலையே
ஏற்பட்டிருக்காதே! எனவே, மக்கள் வாக்கு ஆயுதத்தால் ஆட்சிப்
பொறுப்பில் இருக்கும் காரணமானவர்களை அகற்றியும் அதன் வழி அதிகாரப்பீடத்தில்
இருப்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கச் செய்யவும் ஆவன செய்ய வேண்டும்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 551)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 202, ஆவணி 18, 2048 / செட்டம்பர் 03, 2017
No comments:
Post a Comment