இலக்குவனார் திருவள்ளுவன் 24 செப்தம்பர் 2017 கருத்திற்காக..
நீதிமன்றம் அறம் காக்கவே! – செல்வாக்கினரைக் காக்க அல்ல!
நீதிமன்றத்தில் உரைக்கப்படும் தீர்ப்பு
ஒவ்வொன்றும் சட்டத்தின் பகுதியாகின்றது. சட்டம் என்பது அறத்தை நிலை
நிறுத்தவே என்னும் பொழுது தீர்ப்புகளும் அறத்தை நிலை நிறுத்தவே வழங்கப்பெற
வேண்டும். மக்களுக்கு அறம் வழங்கும் வகையில் தீர்ப்புகள் வந்து கொண்டுள்ளன.
அதே நேரம், “சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது பல நேர்வுகளில் ஏட்டுச்
சுரைக்காயாகத்தான் உள்ளது. செய்தி யிதழ்களைப் பார்த்தே நடவடிக்கை
எடுக்கும் நீதிபதிகள், தங்கள் முன் வரும் வழக்குகள்பற்றிய செய்திகளைக்
கண்டு கொள்வதில்லை.
“பனை மரத்தடியில் இருந்து பால் குடிக்கக்கூடாது” என்பதன் காரணம் தவறான ஊகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான். ஐயத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டிய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சில, நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையைப் பொய்யாக்கிவிடுகின்றன.
ஏழை எளியவர்களுக்குப் பிணை மறுக்கப்படுவது குறித்தும் செல்வர்கள் எளிதில்
பிணை பெறுவது குறித்தும் நீதிபதிகளே நீதிமன்றத்தில் குறை கூறிய இரு
நாளிலேயே செல்வாக்கின் காரணமாகவும் சாதியின் காரணமாகவும் பிணை
வழங்கப்பட்டதாகக் கருதி மக்கள் வருந்தியுள்ளனர்.
காலத்தாழ்ச்சியாக வழங்கப்பெறும் தீர்ப்பும் அநீதியானது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சார்பாக இழுத்தடித்துத் தரப்படும் தீர்ப்பு குற்றச்சாட்டப்படுபவர்களுக்குக் கேடயமாக அமைகின்றது.
தாய்மொழியாம் தமிழ்மொழிவழிக் கல்விக்கு எதிரான நவோதயா பள்ளி தொடர்பான தீர்ப்பு ஒருதலையானது என்பது அனைவரும் அறிந்ததே.
அரசு ஊழியர் போராட்டம் தொடர்பான
வழக்கில், 1 மணி நேரத்தில் முடிவைத் தெரிவிக்குமாறு நீதிபதி சொல்வது அரசு
காவல்துறை மூலம் அடக்கியாள நினைப்பதுபோல், நீதித்துறை மூலமும் மக்களை ஒடுக்க முயல்கிறது என மக்கள் கூறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. நீதிமன்றங்கள் அறிவுறுத்தலாம், தீர்ப்பு வழங்கலாம். ஆனால் மிரட்டக் கூடாது என்பதை மறக்கலாமா?
இத்தகைய தீர்ப்பு கூறுவோர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஆராயாமல் தீர்ப்புகள் வழங்கும் நேர்வுகள் இனி எழாது.
அரசு ஊழியர் வழக்கு தொடர்பாக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த கருத்தாளரைக் கைது செய்துள்ளனர். தீர்ப்புகள் திருத்தத்திற்கு உரியனவே! இல்லை என்றால், மேல்முறையீடுகள், சீராய்வுகள் என ஒவ்வொரு தீர்ப்பும் பல் வேறு அடுத்த நிலைகளில் ஆராயப்படுமா? நாம் மக்களாட்சி நாட்டில்தான் வாழ்கிறோமா இல்லையா என்னும் ஐயத்தை இத்தகைய நடவடிக்கைகள் எழுப்பி விடுகின்றன.
பல்வேறு தீர்ப்புகள் சாதி, சமய, இன
அடிப்படையில் உரைக்கப்படுவதாக மக்கள் கருதுவதை நீதிமன்றங்கள் அறியாமல்
இருக்கா. அத்தகைய எண்ணம் வராத வகையில் சட்டத்தின் முன் யாவரும் இணை என்பதை மெய்ப்பிக்கும் வகையில்தானே தீர்ப்புகள் இருக்க வேண்டும்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு
தொடுத்த பொழுது, “நீ விரும்பாவிட்டால் வீட்டிலேயே இரு” என்பதுபோல் சொல்வது
எல்லாம் எப்படி நடுவுநிலையாக இருக்க முடியும்? வேலைக்கான நேர்காணல் விதி
முறையின்றி நடப்பதாக ஒருவர் வழக்கு தொடுத்தால் இதை முன்மாதிரியாகக் கொண்டு,
“நீ விரும்பாவிட்டால் வீட்டிலேயே இரு” என்று சொல்ல மாட்டார்களா? இவ்வாறு
முறைகேட்டைச்சுட்டிக்காட்டும் பொழுது அதை ஆராய்ந்து முறையானது அல்லது
முறையற்றது எனத் தீர்ப்பு கூறாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல்
சொல்லலாமா? வழக்கு தொடுத்தவரும் சட்ட மன்ற உறுப்பினர் என்னும் பொறுப்பில்
உள்ளவர். அவர்சார்ந்த கட்சியின் பொறுப்பாளர்களுள் ஒருவர். நாளை
அமைச்சராகவும் – முதல்வராகவும் – ஆக வாய்ப்பு உள்ளவர். அது முதன்மையல்ல.
அன்றைய நாளில், பொதுக்குழு, கூட்டப்படுவதாகச் சொல்லிய கட்சியின்
உறுப்பினர். பொதுமக்களே பொதுநல வழக்கு போடலாம் என்றால், கட்சி உறுப்பினர் கட்சி தொடர்பான கூட்டம் தொடர்பில் நீதி கேட்பது எப்படி தவறாகும்?
ஆகவே உரிமையில் வழக்கு தொடுக்கும் பொழுது ஒறுப்புத் தொகை என்பதெல்லாம்,
அரசிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் இப்படித்தான் தீர்ப்பு அமையும் என
மக்களை மிரட்டுவதாக அமையாதா?
நீதிமன்றத்தில் பொதுக்குழுக் கூட்டம் அல்ல, இரண்டு அணிகளின் இணைப்பு எனத் தெரிவித்துவிட்டு, அதன்பின்னர்ப் பொதுக்குழுக் கூட்ட முடிவுகள் என அறிவிப்பதும் அவ்வாறே தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்பதும் முறையற்றவை அல்லவா? உடனே தவறான தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்குரைஞர், ஆளும் அணியினர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?
முதலில் காலை, மாலை இரு வேளைகளில் தனித்தனியே நீதி மன்றம் இரு முறை செயல்பட்டேனும் நிலுவை வழக்குகளை இல்லாமல் ஆக்க வேண்டும்.
அரசு தொடர்பான பல வழக்குகள், வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக இருப்பின் பேசி எளிதில் முடிக்கச் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்காக மாநிலத் தீர்ப்பாயம் அமைப்பதாக அறிவித்தும் எந்நடவடிக்கையும் இல்லை.
அதனை விரைவுபடுத்தத் தெரிவித்து அதனடிப்படையில் அமைக்கப்பட்டால் அரசு
ஊழியர்கள் வழக்குகள் மாற்றப்பட்டுப் பொதுமக்களுக்கான வழக்குகளுக்குக்
கூடுதல் நேரம் கிட்டும். கால வரன்முறையை வகுத்துக்கொண்டு இன்றைய அளவிலான வழக்குகள் நிலுவையில் இல்லா நிலையை உருவாக்க வேண்டும்.
பிச்சைக்காரராக இருந்தாலும் அவருக்கு முகவரிச்சான்று இருப்பின் அவர் பிணை வழங்கலாம் என நல்ல தீர்ப்பு
ஒன்று அண்மையில் வந்தது. இது போன்று பிணைவிடுப்பை எளிதாக்கும் வரைமுறைகளை
உருவாக்க வேண்டும். அதே நேரம் செல்வம், செல்வாக்கால் பிணை பெறுவதை
மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்ல தீர்ப்புகளை வழங்கி மக்களின் கேடயமாகத் திகழும் நீதி மன்றங்கள் எல்லா நிலையிலும் அவ்வாறே செயல்பட அவ்வப்பொழுது நீதிபதிகளுக்கான பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்பட
வேண்டும். தவறான தீர்ப்புகள் வழங்கப்படும் நேர்வுகளில் மேல்
நீதிமன்றங்கள் தாமாகவே நடவடிக்கை எடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
நீதி மன்றங்கள் ஆள்வோர்க்குக் காவலராக, முறை தவறுவோர்களுக்குக் கேடயமாக இல்லாமல் குடியாட்சியின் காவல் அரணாக எல்லா நிலையிலும் திகழ வேண்டும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 204, புரட்டாசி 08 – 15, 2048 / செட்டம்பர் 24 – 31, 2017
No comments:
Post a Comment