Sunday, September 3, 2017

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3


தெரிபொருளும் புரி பொருளும்

  சொல் இடத்திற்கு ஏற்பப் பொருளைப் பெறுகின்றது என்பதை மறந்து நாம் ஏற்கெனவே அறிந்த பொருளையே பொருத்திப் பார்க்கும்பொழுது சொல்லாக்கம் தவறாய் அமைகிறது. இத்தவறு நேரக்கூடாது என விழிப்புடன் இருக்கையில் சொல் விளக்கமாய் அமைந்து விடுகிறது. அதையே மற்றொரு வகையாகவும் கூறலாம். ஒவ்வொரு சொல்லும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருள் ஒன்று உண்டு. அதே சொல் உணர்த்திப் புரிய வைக்கும் பொருள் பல உண்டு. தெரிபொருளும் புரிபொருளும் மாறுபடுகையில் அதைச் சரியாய் உணர்த்தாவிட்டால் சொல்லாக்கம் செப்பமாய் அமையாது. எனவே புரிபொருளை உணர்த்த வேண்டும் என்பதற்காகவும் சில நேர்வுகளில் விளக்கமான பொருளில் சொல்லை அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவ்வாறான நேர்வுகளில் சொல்லின் பயன்பாடு மிகுதியாக மிகுதியாகச் சொற்சுருக்கம் இயல்பாக ஏற்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இதை உணர்ந்து சொல்லாக்கத்தில் தொடக்கத்திலேயே குறுஞ்சொல்லையும் விளக்கச் சொல்லையும் படைப்பது விரைவான பயன்பாட்டிற்கு வழிகோலும்.
  தொடக்கத்தில் கூட்டுச்சொல்லாய் இருப்பினும் பின்னர் சொல்லாக்க ஆர்வலர்களால் சுருங்கிய வடிவம் உண்டாக்கப்படும் நிலை இப்பொழுதும் உள்ளது. பழக்கத்தின் அடிப்படையில் சுருங்கியவடிவம் நிலை பெறும் நிலையும் உள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கெனவே கூட்டுச் சொற்களாய் அமைத்தவற்றிற்கு நாம் சுருங்கிய வடிவம் காண வேண்டும்.
எ.கா.
  District Collector –  தெரிபொருள் அடிப்படையில் மாவட்டத் தண்டல் அலுவலர் என்று சுருங்கிய வடிவில் மாவட்டத்தண்டலர் என்றும் முதலில் கூறப்பட்டது. பின் தண்டல்/வசூல் மேற்கொள்வது மட்டும் இப்பதவியாளரின் பணியன்று என்பதை உணர்ந்து புரிபொருளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எனப்பட்டது.
இச்சொல் மாவட்ட ஆட்சியாளர் எனச் சுருங்கிய வடிவம் பெற்றது. பின் செயலாளர்-செயலர் எனச்சுருங்கிய வடிவம் பெற்றதுபோல், மாவட்ட ஆட்சியர் எனக் குறுகியுள்ளது.

நீள்வடிவின் குறுக்கம்
District Collector என்றால் மாவட்ட ஆட்சியர் எனக் குறித்தாலும் District Collectorate என்னும்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் என்றே பெரும்பாலும் குறிக்கப்படுகின்றது. இதன் நீள்வடிவத்தால் ஆங்கிலச் சொல்லே பயன்பாட்டில் உள்ளது. செயலரின் அலுவலகம் செயலகம், இயக்குநரிpன் அலுவலகம் இயக்ககம் எனப்படுகின்றன. இவைபோல் (மாவட்ட) ஆட்சியரின் அலுவலகம் (மாவட்ட)ஆட்சியகம் எனப்பெற வேண்டும். இதேபோல்  (தீயணைப்பு  நிலையம்) தீயணைப்பகம், (காவல் நிலையம்); காவலகம், (பதிவாளர் அலுவரகம்) பதிவகம் என்ற முறையில் பிற சொற்களும் குறுக்கப்பெற வேண்டும்.
  தனிச் சொல் கூட்டுச்சொல்லாய் அமையும் நேர்வுகள் உண்டு.  இந்நேர்வுகளில் முன்னொட்டு அல்லது பின்னொட்டாக இணைப்புச் சொற்கள் உருவாக்கப்படுவது வழக்கம். இச்சூழலில் கூட்டுச் சொல்லாகப் பயன்படுத்தாமல் குறகிய வடிவத்தைப் பயன்படுத்தும் பழக்கம்வரவேண்டும்.

எ.கா.
register – பதிவேடு என்கிறோம்.
இச்சொல் முறையே பணம், செலவினம், பணி முதலானவற்றுடன் இணைகையில் பணப்பதிவேடு, செலவினப்பதிவேடு, பணிப்பதிவேடு என்கிறோம். இவ்வாறு குறிப்பிடாமல் சுருக்கமாகப் பண ஏடு, செலவின ஏடு, பணியேடு என்பனபோல் குறிப்பிட வேண்டும்.  இம் முறையையே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும்.

கூட்டுச்சொல்லின் குறுவடிவம்
புதிய சொற்களைக் குறுஞ்சொற்களாய் அமைப்பதுடன் நில்லாது நடைமுறையில் கூட்டுச்சொல்லாக அமைந்தனவற்றைப் பொருள் மாறாதவகையில் குறுவடிவில் அமைக்க வேண்டும்.
எ.கா. நுழைவுச்சீட்டு , நுழைமம் எனலாம். (ஒப்பு நோக்குக உரிமம்)
நுண்ணுயிரி – நுண்ணி (ஒ.நோ. உண்ணி)
எனினும் ஏற்கப்பெற்ற சொற்களைக் குறுஞ்சொற்களாகய் உருவாக்கும்பொழுது  வேறு புதுச்சொல் என்று குழப்பம் இல்லாத வகையில் தொடக்கத்தில் நெடுஞ்சொற்களை அடைப்பில் குறிக்கலாம்.

முன்னோர் செல்வத்தை மறத்தல்
பழந்தமிழ்ச்சொற்களை மறந்து விடுவதாலும் தொடர் சொற்கள் அமைகின்றன. சான்றாக, அருவியை மறந்துவிட்டு நீர் வீழ்ச்சி என்கிறோம். துரவு என்பதை மறந்துவிட்டு இறங்கும்படிகள் கொண்ட சதுரக்கிணறு என்கிறோம். பழந்தமிழ்ச்சொற்கள் இருக்குமபோது அவற்றை உலவவிட்டு உயிர் கொடுக்க வேண்டுமெயல்லாமல் தொடர் சொற்களை அமைக்கக்கூடாது.
(தொடரும்)
. இலக்குவனார் திருவள்ளுவன்
எட்டாவது உலக தமிழ் மாநாடு , 1995,
தஞ்சாவூர், தமிழ்நாடு

No comments:

Post a Comment

Followers

Blog Archive