எச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி
பாசக, தன் காவி
ஆணவத்தைப் பல இடங்களிலும் விரித்து வருகிறது. தமிழக அரசியலில் உள்ள
குழப்பமான சூழலைப் பயன்படுத்தித் தமிழக அரியணையில் ஏறவும் முயன்று
வருகிறது. இவற்றிற்குத் தமிழக மக்களின் உடன்பாடு இல்லை என்பதை நம்பாமல்
பொதுத்தேர்வு(நீட்டு தேர்வு)த் திணிப்பு, தமிழக நலன்களுக்கு எதிரான
திட்டங்களைச் செயற்படுத்தல், நவோதயா பள்ளிகள் மூலமும் பிற வகைகளிலும்
இந்தி, சமற்கிருதத்தைத் திணித்தல் எனத் தமிழ்நாட்டைச் சிதைத்து வருகிறது.
இவையெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் வலிமைக்கு ஊறுநேர்விக்கும் என
அறிந்தும் தன்னை மேல்நிறுத்துவதற்காக இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு
வருகின்றது. பதவி ஆசைகள், செல்வாக்கு பெறல் போன்றவற்றால் சிலர் பாசக பக்கம் காலடி வைப்பதால் தமிழ்நாடே அதன் காலடியில் இருப்பதுபோல் கனவு கண்டு வருகிறது.
மத்திய அரசின் துறைகள் சிலவற்றின் மூலமும் தன் செல்வாக்கை உயர்த்த பாசக
முயன்று வருகிறது. இவற்றிற்கெல்லாம் மரண அடி கொடுத்ததே சாரணர் தலைவர்
தேர்தலில் போட்டியிட்ட பாசக தேசியச் செயலர் எச்சு இராசா மண்ணைக் கௌவியது.
ஒருவேளை இராசா வெற்றிபெற்றிருந்தால் எனக் கற்பனையாகக்கூடச் சொல்ல முடியாது. எனினும் 50 வாக்குகளைமட்டுமே எட்டி மண்ணைக் கௌவிய இராசா கூடுதலாக வாக்கு பெற்றிருந்தாலே விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திருப்பார்; அவர் கட்சியும் குதித்திருக்கும், தமிழக ஆட்சியையே கைப்பற்றியதுபோல்! ஆனால் குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிக்க எண்ணும் பாசகவிற்கு மரண அடியைச் சாரணர் இயக்க வாக்களார்கள் அளித்துள்ளனர்.
அனைவரையும் மகிழச்செய்த தேர்தல் முடிவாக இது நிகழ்ந்தமைபோல் வேறு எந்தத்
தேர்தல் முடிவும நிகழ்ந்ததில்லை. வெற்றி பெற்ற பள்ளிக்கல்வி மேனாள்
இயக்குநர் மணியை அறிந்தவர்கள் குறைவே! எனவே, அவர் வெற்றிக்காக மகிழ்வதன்
காரணம் அவர் செல்வாக்கு என்று சொல்ல முடியாது. ஆனால் எச்சு இராசாவின் உண்மை
முகத்தை அறிந்தவர்களே பொது மக்கள். எனவே அவர் தோல்வி கொண்டாட்டத்திற்கு
உரியதாக மாறியுள்ளது-
தலைவருக்குப் போட்டியிட்ட மணி துணைத்தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டார். 3 பதவிகள் உள்ளமையால் ஒவ்வொருவருக்கும் 3 வாக்குரிமை உண்டு. இதில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும் இரண்டாம்நிலையில் 204 வாக்குகள்தாம் பெற்றுள்ளார். எனவே,
தலைவர் தேர்தலில் எச்சுஇராசாவிற்கு எதிரான வாக்குகளே பதிவாகியுள்ளன
என்றும் பாசகவின் தலையீட்டை வாக்காளர்கள் விரும்பவில்லை என்பதையும்
புரிந்து கொள்ளலாம்.
‘அம்மா ஆட்சி’, ‘அம்மா ஆட்சி’ என்று
கூறிக்கொண்டே மறைந்த முதல்வர் செயலலிதா எதிர்த்து வந்த
திட்டங்களுக்கெல்லாம் ஒப்புதல் கொடுத்து வருதல், கல்விக்கூடம் மூலமாக
இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்க நவோதயா பள்ளிக்கு ஆதரவு நிலையை
உருவாக்கல் எனப் பாசகவின் அடிமையாட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை. (பாசகவின்
நிழலாட்சி எனச் சொல்வதை விட அடிமையாட்சி என்பதே பொருத்தமாக இருக்கும்.)
ஆனால், ஆள்வோர் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதை உணர்த்துவதற்கு வந்ததே
சாரணர் இயக்கத்தலைவர் பதவிக்கான தேர்தல்! இத்தேர்தலில் போட்டியிட்ட எச்சு இராசாவிற்கு அரசின் ஆதரவும் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலும் இருந்ததாகச் சொல்கின்றனர். அவ்வாறு இருப்பினும் கணிசமான வாக்குகளைக்கூட அவரால் பெற இயலவில்லை.
யார், யார் மீதோ அவதூறு வழக்கு தொடுக்கும் தமிழக அரசு, இவரது பேச்சுகளுக்காக இவர் மீது பல அவதூறு வழக்குகள் தொடுத்திருக்க வேண்டும். எனினும் பாசகவின் செல்லப்பிள்ளையாகக் கருதி அரவணைத்தது. தேர்தல்
நேரத்தில் முதல்வர் அவரைச் சந்தித்ததே தவறு. பள்ளிக்கல்வி இயக்குநர்
வெற்றி பெற்ற தோரணையில் பொன்னாடை அணிவித்ததும் அதற்கேற்றவாறான மடல் ஒன்றை
அவருக்கு அனுப்பியதும் தவறு. எச்சு இராசா அரசின் வேட்பாளர்
என்பதுபோல் சொல்லாமல் சொல்லியது தமிழக அரசு. ஆனால் நடந்தது என்ன?
துண்டைக்காணோம், துணியைக் காணோம் எனப் பின்னங்கால்கள் பிடரியில் பட அவர்
ஓடியதுதானே நடந்துள்ளது! இதற்குப் பின்னரும் ஆட்சியாளர்கள் விழித்துக்
கொள்வது அவர்களுக்கு நல்லது. இல்லை யென்றால் புதைகுழியில் வீழ்வது உறுதி!
மின்வாரியத்தின் ‘உதய்’ திட்டம், தேசிய
உணவுப் பாதுகாப்புச்சட்டம், சரக்கு-சேவை வரிச்சட்டம், மருத்துவக்கல்லூரி
(சேர்க்கைக்கான) பொது நுழைவுத் தேர்வு(NEET) என்பனவற்றிற்கெல்லாம் முந்தைய
முதல்வர் செயலலிதா எதிர்ப்பாக இருந்தார். முதல்வர் எதிர்க்கிறார் என்றால்,
அவரது அமைச்சரைவையும் எதிர்க்கிறது என்றுதான் பொருள். கூட்டுப்பொறுப்பில் எதிர்ப்பிற்கு உடன்பட்டவர்கள், இப்பொழுது இசைகிறார்கள் எனில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பே பொருளற்றதாகிறது.
வழக்கு, சிறை வாழ்க்கை முதலானவற்றிலிருந்து தப்பிக்கவும் தத்தம் பதவிகளைக்
காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தங்கள் நலன்களைக் காப்பாற்றிக்
கொள்கின்றனர். மக்கள் நலன்கள்பற்றிய எண்ணமே இல்லை. பா.ச.க.வின் கால்களில்
வீழ்ந்து கிடப்பது விரும்பியல்ல. அச்சுறுத்தல்களில் இருந்து தம்மைக்
காப்பாற்றிக் கொள்ள நாட்டைத் துன்பத்தில் தள்ளுகின்றனர். தாங்கள் என்ன
செய்தாலும் மக்கள் ஏற்பர் என்ற தவறான நம்பிக்கையும் இதற்குக் காரணம்.
எச்சு இராசாவின் தோல்வி மூலம், ஆசையில்
அடி விழுந்தது! இடி விழுந்தது! பாசகவிற்கும் இது புரிந்துஇருக்கும். பிற
மாநிலங்களில் காலூன்ற அவர்களுக்குச் சார்பாக நடந்து கொள்ளும் பாசக
தமிழ்நாட்டில் காலூன்ற எதிரான வழிகளில் இறங்குகிறது. எனவேதான் இந்த நிலை.
எச்சு இராசா சாரணர் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் தெரிவித்து எச்சரித்த மு.க.தாலினுக்கு நன்றி சொல்ல
வேண்டும். இதனால் விழிப்புற்ற இளைஞர்களும் மன்பதை நல ஆர்வலர்களும்
தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்கவும் கல்வித்துறை காவிமயமாவதைத்
தடுக்கவும் முகநூல் முதலான இணையத் தளங்கள் மூலம் கிளர்ந்து எழுந்தனர்.
இதனால் சாரணர் தேர்தல் வாக்காளர்களும் விழிப்புற்றனர். எச்சு இராசாவிற்குப்
பாதை வகுத்துக்கொடுக்க முயன்று ஆள்வோர் குறுக்கு வழிகளில்
இறங்காமிலிருந்திருந்தால், கூடுதல் வாக்குகள் பதிந்திருக்கும். அவை யாவும்
எச்சு இராசாவிற்கு எதிராகவே பதிவாகியிருந்திருக்கும். எப்படியோ பாசகவின் குறுக்கு வழிக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை அவர்களும் அதற்கு வழி வகுத்துக்கொடுக்க முனைந்த தமிழக ஆட்சியாளர்களும் புரிந்து கொண்டிருப்பர்.
அதிகாரச்சுவையை இழக்காமலிருக்க யாருடைய
கால்களிலும் வீழ்ந்து கிடக்கட்டும்! ஆனால், தமிழக நலன்களை உதைத்துத்
தள்ளக்கூடாது. மிரட்டப்படுவதை வெளிப்படையாகச் சொல்லித், தமிழ்நாட்டு
மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கை, தமிழகக்கல்வித்திட்டத்தின்படியான
மாணாக்கர்களுக்கே என்பதை அறிவிக்க வேண்டும்; நெடுவாசல் துயரக்களமாக
மாறிவருவதைத் தடுக்க வேண்டும்; கீழடியைப் பேண வேண்டும்; தமிழக நலன்களுக்கு
எதிரான அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் எதிர்ப்பதாக வெளிப்படையாக
அறிவிக்க வேண்டும்.
தமிழக நலன்களுக்காகப் பாடுபட்டால்
ஒருவேளை மத்திய ஆட்சியாளரால் கீழே தள்ளப்பட்டாலும் தமிழக மக்கள் கைதூக்கி
அவர்களை எழுப்பி நிற்கச் செய்வர்.
முடிந்து போன தேர்தலை நீக்கும் முயற்சியில் பாசக இறங்கினால் துணைபோக வேண்டா என்றும் வேண்டுகிறோம்!
இறைநம்பிக்கையுள்ள நிலம்தான் இது. என்றாலும் பெரியார் மண்! புரிந்து கொண்டு விழிப்படைய வேண்டியவர்கள் விழிப்படையட்டும்! தம் பாதையைத்திருத்திக் கொள்ளட்டும்!
சாரணர் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மணி, துணைத்தலைவர்
கோ. பெரியண்ணன்,துணைத்தலைவர் அரங்கநாதன், மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன்,
பிற பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்!
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். (திருவள்ளுவர், திருக்குறள் 1071)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017
No comments:
Post a Comment