அகரமுதல 203, ஆவணி 25, 2048 / செட்டம்பர் 10, 2017
தெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware
1/2
எந்த ஒரு சொல்லுக்குமான பொருளும் அச்சொல் பயன்படும் இடத்தைப் பொருத்தே அமையும். எனவே, வெவ்வேறு பயன்பாட்டுத்தளங்களில் அல்லது இடங்களில் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு பொருள் அமைவதும் இயற்கை. நமக்கு
அறிமுகமான சொற்கள் நாம் கருதக்கூடிய பொருள்களிலேயே பிற இடங்களிலும்
வருவதாகத் தவறாக எண்ணும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இப்போக்கால் கலைச்சொல்
பெருக்கம் தடைப்படுகிறது; அறிவியல் துறையின் வளர்ச்சியும்
இடர்ப்படுகின்றது.
இங்கு நாம் ஆங்கிலத்தில் ஆர்டுவேர் / hardware எனச் சொல்வதைத் தமிழில் வன்பொருள் அல்லது வன்மி எனத் தவறாகக் குறிப்பது குறித்துக் காணப்போகின்றோம்.
hardware என்பதை hard + ware என இரு சொற்களாகப் பார்ப்போம்.
hard என்னும் சொல்லுக்கு நமக்கு நன்கு
அறிமுகமான பொருள் கடினம் என்பதும் அதனடிப்படையிலான வன்மை என்பதும் ஆகும்.
ஆனால், இதே பொருளிலேயே இச்சொல் எல்லா இடங்களிலும் கையாளப்படுவதில்லை. சில
நேரங்களில் கடினம் என்னும் பொருளை உணர்த்தும் வேறு சொல்லும் கையாள்வோம்.
சான்றாகக் கடின நெஞ்சுக்காரன் எனச் சொல்லாமல் நாம் கடினமாக
இருக்கும் கல்லோடு தொடர்பு படுத்திக் கல்நெஞ்சக்காரன் என்று சொல்வோம்.
இவ்வாறுதான் சொற்கள் அமைய வேண்டும்.
கடினமான இரும்புப்பொருளைக் குறிப்பதற்கு hardware என்றுதான்
ஆங்கிலத்தில் குறிக்கின்றனர். இதையே வலிமைவாய்ந்த பொருள் என்ற அளவில்
வன்பொருள் என இப்போது சொல்லும் பழக்கம் வந்து அதனைத் தவறாகக் கணிணியியலில்
பயன்படுத்துகிறோம்.
வேளாண்துறையில் hardening என்பதைக் கடினமுறுதல் அல்லது கடினப்படுத்தல் அல்லது கடினமாதல் எனக் குறிப்பிடுகிறோம்.
seed hardening – விதைக் கடினப்படுத்தல்
case hardening – புறணிக் கடினமாதல்
அதே நேரம், பொறியியலில், secondary
hardening என்றால் இரண்டாம்நிலை இறுகல் என்றுதான் குறிக்கின்றனர். இங்கே
நேரடியாக வன்மையாக்கல், கடினமாக்கல், வலுவாக்கல் என்பன போன்று சொல்வதில்லை.
பயிரியலில் hardened plants –
வலுப்பெற்ற தாவரங்கள், hardening – வலுப்பெருகல் எனக் குறிக்கப்பெறுகின்றன.
மாழையியலிலும் வலுவூட்டல் என்னும் பொருள்தான் கையாளப்பெறுகின்றது.
கணிப்பொறியியலில் hardening கணிணியைப் பாதுகாப்பதற்கான செயல்முறையைக்
குறிக்கிறது. எனவே, காப்பூட்டல் எனலாம்
hard woods – வன் மரங்கள், என்று நேரடியாக மொழிபெயர்க்க்கூடாது.
உறுதியான மரங்களைத் தமிழில் வயிரம் பாய்ந்த மரங்கள் அல்லது காழ் மரங்கள்
என்பர். நாம் தமிழ் மரபிற்கேற்ப அவ்வாறுதான் குறிக்க வேண்டும். சூழல்
அறிவியலில் hard wood – கடினக் கட்டை என்பது தவறான வழக்காகும்.
hard wood cuttings என்றால் வலிமையான மரங்களின் வெட்டுகள் என்று சொல்லாமல் காழ்மரத் துண்டுகள் என்று சொல்ல வேண்டும்.
hard seeds என்றால் கடினமான விதைகள் அல்லது வன்மி விதைகள் என்று சொல்லாமல் கெட்டி விதைகள் என்றுதான் சொல்கிறோம்.
மேல்மண்ணுக்கு அடிப்படையாய் அமையும்
கெட்டியான நிலப்படலத்தின் மண்ணைத் தன்மையின் அடிப்படையில் சொன்னால்
மண்இறுக்கம் (hardpan) என்பர்.
pan என்பதற்குத் தட்டு, தட்டம்,
வெற்றிலை, கீழ்மண்படுகை எனப் பல பொருள்கள் உள்ளன. இருப்பினும் இங்கே
மண்படுகையைக் குறிக்கையில் (நிலத்தட்டின் அடிப்படையில் சொல்வதானால்,)
கடின அடுக்கு அல்லது கடினத்தட்டு(hard-pan) (வனத்துறை) என்பர்.
பெறுவதற்குக் கடினமாக இருப்பதைக் கிடைத்தற்கரியது என்றுதானே சொல்வோம். எனவேதான் வங்கியியலில்
அரிய கடன் – hard loan
அரிய பணம் – hard money
அரிய செலாவணிப் பகுதி – hard currency area
அரிய செலாவணி – hard currency
எனக் குறிக்கின்றனர். இவற்றைக் கடினக் கடன், கடினப்பணம், கடினச் செலாவணி என்றெல்லாம் குறிப்பதில்லை.
hard and fast என்பது மாற்றமோ
நெகிழ்ச்சியோ அற்ற வன்கடுமையான நிலையைத்தான் குறிக்கின்றது. இருப்பினும்
மரபு வழக்கில், இதனை வன்மையும் விரைவும் எனக் குறிப்பதில்லை. மாற்ற இயலாத
அல்லது கட்டாயக்கடைப்பிடிப்பு என்னும் பொருள்களில்தான் குறிக்கின்றோம்.
hard and fast rule என்றால், கட்டளை
விதி என்றும் கோடுதல் – வளைந்துபோதல் – அற்ற விதி என்னும் பொருளில் கோடா
விதி என்றும் (வங்கியியில்) குறிக்கின்றனர்.
வானூர்தி தரையில் இறங்குவதை landing
என்பர். திடீரென்று வானூர்தியை இறக்க வேண்டிய சூழல் ஏற்படின் அது
கடினமாகத்தான் இருக்கும். என்றாலும் hard landing என்பதைத் தமிழில், திடீர்த் தரையிறக்கம் என்றுதான் கூறுதல் வழக்கம். வன்தரையிறக்கம் என்று சொல்வதில்லை.
பொறியியிலில் hard silk- கரட்டுப் பட்டு எனக் குறிக்கப்பெறுகிறது.
பொறியியிலில் strain hardening – விகள
விறைப்பு எனப்பெறுகின்றது. ஆனால், விகளம் என்று எந்த அகராதியிலும்
சொல்லில்லை. இழுவிசை நீட்சியைக் குறிப்பதாக இருந்தால் இழுவிசை விறைப்பு
எனலாம். எவ்வாறு இருப்பினும் இங்கே விறைப்பு என்னும் பொருளில்
கையாளப்படுகிறது. ஆகவே, இடத்திற்கேற்ப பொருள் மாறுபடுவதற்கேற்பச் சொல் ஆக்கம் பெறுகின்றது.
பொறியியலில் air-hardening (steel) என்பது காற்றில் பதமாகும் (எஃகு) என்பதைக் குறிக்கிறது.
பொறியியலில் hardstand –
சிப்பக்கிடங்கு எனப் பயன்படுத்து கின்றனர். சிப்பங்கள் வைக்கப்படுகின்ற
இடத்தைக்குறிக்கும் hardstand வான்முகம், துறைமுகம், படைமுகம் முதலான
இடங்களில் கனமிகு ஊர்தி நிறுத்துமிடம் என்னும் பொருளில்
கையாளப்பெறுகின்றது.
மீன்வளத்துறையில்
hard lay – முறுக்குக்கயிறு
hard fish- பதனிட்ட மீன்
என்று குறிக்கிறார்களே தவிர, வன் கயிறு என்றோ வன்மீன் என்றோ குறிப்பதில்லை. (lay – கயிற்றுப்புரி முறுக்கினைக் குறிக்கின்றது.)
மனையியலில் hard spun / hard twist
முறுக்குமிகு இழையைக் குறிக்கின்றன. முறுக்கப்படுவது கடினமாகத்தான்
இருக்கும் என்றாலும் கடின இழை என்பதில்லை.
hard wheat என்பது கடினக்கோதுமையைக் குறித்தாலும் மனையியலில் இது தன்மையின் அடிப்படையில் பிசின்மிகு கோதுமையைக் குறிக்கும்.
மனையியலில் hards என்றால் கடினங்கள் என நேர் பொருள் கூறாமல் முரட்டுநார் வகையைத்தான் குறிக்கின்றனர்.
hardship என்றால் பிரித்துப் பொருள் கொள்ளாமல், (எதிர்கொள்வதற்குக் கடினமான) இன்னல் அல்லது இடும்பை என்றுதான் குறிப்போம்.
கால்நடையியலில் hardware
disease என்பது துருநோய் இதயஅழற்சி எனக் குறிக்கப் பெறுகிறது.
இரும்புப்பொருள் எனக் குறிக்காமல் அதில் ஏற்படும் துருவினால் வரும்நோய்
எனத் தன்மையடிப்படையில் குறிப்பிட்டுள்ளனர்.
கால்நடையியலில் hard milker என்பது – பால்கறக்க அரிதான மாட்டினை – ‘பால்கறக்க மறுதளிக்கும் மாடு’ எனக் குறிக்கிறது.
hard தொடர்பான மேலும் சிற சொற்களைப் பார்ப்போம்.
hardened – கெட்டியாக்கப்பட்ட, உணர்ச்சியற்ற.
hardface (n) – இரக்கம் சிறிதுமற்றவர்.
hard-bitten – மூர்க்கமாகச் சண்டையிடுகிற.
hard-cured (உப்பிட்டு வெயிலில்) நன்றாக உலர்த்தப்பட்ட.
hard-bitten -. மூர்க்கமாகச் சண்டையிடுகிற.
hardboard .(விறைப்பான) அட்டைப்பலகை
hard-won -. அரிதிற் பெற்ற
hard-riding – விரைவான குதிரையேற்றம்
hard-a-lee – காற்று மறைவான பகுதி
hard-bake -. வாதுமைப் பண்ணியம்
இவ்வாறு hard இடத்திற்கேற்றவாறு பல பொருள்களை வெளிப்படுத்துவதுபோல், hardware என்னும் பொழுதும் வன்மைப் பொருள் அல்லா வேறு பொருளை உணர்த்துகின்றது.
அடுத்து ware என்பது குறித்துப்பார்ப்போம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்
தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரை, 2017, மலேசியா
No comments:
Post a Comment