சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்?

தமிழ்நாட்டு மக்கள் சாதிப்பட்டங்ளைத் துறப்பதற்கு முன்னோடியாய் விளங்கிய சீர்திருத்தச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார். பகுத்தறிவு இயக்கத் தலைவர், கல்விப் புரவலர், மது ஒழிப்பைப் பரப்பிய அறவாணர், தமிழ் வளர்த்த தகைமையாளர் எனப் பல சிறப்புகள் கொண்டவர் அவர். அவரது பெயர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது. ஆனால் அப்பெயர் தந்திரமாக  அகற்றப்பட்டுள்ளது.
அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அருந்தலைவர். 21.12.1991 இல் மதுரையில் தி.மு.க.வின் பவளவிழா மாநாட்டு அரங்கத்திற்குச் சிவகங்கை இராமச்சந்திரனார் பெயர் சூட்டப்பட்டது.
27.06.1992 இல் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் வீரவரலாற்றின் வெற்றி மாநாட்டின் நுழைவு வாயில் பெயர் ‘சுயமரியாதைச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார் நுழைவாயில்’ என்பதாகும்.
 1992 இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் இராமச்சந்திரனார் படம் திறந்து வைக்கப்பெற்றது.
27.12.1989 இல் திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் திறக்கப்பட்ட மகளிர் விடுதிக்குச் ‘சிவகங்கை இராமச்சந்திரனார் மகளிர் விடுதி’ எனப் பெயர் சூட்டப்பட்பட்டது.
இவ்வாறு காலந்தோறும் அனைத்துக் கட்சியினராலும் போற்றப்பட்டவர் சிவகங்கை இராமச்சந்திரனார்.
21.10.1992 இல் அன்றைய தமிழக முதல்வர் செயலலிதா அம்மையார், “சிவகங்கையில் இயங்கி வரும் அரசு வட்டத் தலைமை மருத்துவமனை, இனிப் பெரியவர் இராமச்சந்திரனார் அவர்களின் பெயரைத் தாங்கி இராமச்சந்திரனார் அரசு மாவட்டத் தலைமையிட மருத்துவமனை என அழைக்கப்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிவித்தார். இதற்கேற்ப அரசாணை (பல்வகை எண் 1197, நல்வாழ்வு குடும்பநலத்துறை நாள்) 30.10.1992 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், முதலில் குறிப்பிட்டவாறு, சிவகங்கை அரசு மருத்துவமனைப் பெயரில்இருந்து இராமச்சந்திரனார் பெயர் அகற்றப்பட்டுள்ளது.
1925 இல் இராமச்சந்திரனார் தம் மனைவி கிருட்டிணம்மாளின் மகப்பேறு மருத்துவத்திற்கு மிகவும் அல்லல்பட்டார். உடனடி மருத்துவ உதவிக்கும் வெளியூர் செல்ல வேண்டிய நிலை. பெண் குழந்தை பிறந்தும் தாய்க்குக் கடும் வயிற்று வலி; 24 மணி நேரம் கழித்து மற்றொரு பெண் குழந்தை பிறந்ததும்தான் இரட்டைக் குழந்தை என்று தெரிந்தது. இரட்டைக் குழந்தை பிறப்பினால் வீட்டினர் மகிழ்ந்தாலும் நாட்டினர் நிலையால் இவர் உள்ளம் நைந்தார். வசதி உள்ளவர்களே, தக்க மருத்துவ உதவி உடன் கிடைக்காமல் அல்லலுறும் பொழுது ஏழை எளிய மக்களும் போதிய மருத்துவ உதவி இன்றி மிகவும் துன்புறுவார்களே எண்ணினார். அருள் உள்ளம் கொண்ட இராமச்சந்திரனார், உடனே நிலம் தந்து அரசு மகப்பேறுமருத்வதுமனை வர வழி செய்தார். என்றாலும் தன் பெயரையோ தம் குடும்பத்தவரில் ஒருவர் வெயரையோ அதற்குச் சூட்டக் கருதவில்லை. அதுபோல் அரசு பொது மருத்துவமனை அமையவும் நிலம் தந்தார். அதற்கும்  தம் பெயர் சூட்டக் கருதவில்லை.
ஆனால், இவற்றை யெல்லாம் அறிந்த அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையார் அரசு மருத்துவமனைக்கு அவர் பெயரைச் சூட்டினார். அவர் படத்தையும் திறந்து வைத்தார்.
சிவகங்கைக்கு அரசு மருத்துவக்கல்லூரி வந்த பொழுது(2012)  மருத்துவக் கல்லூரியுடன் அரசு மருத்துவமனையும் வேறிடத்தில் (வாணியங்குடியில் ) கட்டப்பட்டது. பழைய இடத்தில் நல்வாழ்வுத்துறையின்  இணை இயக்குநர் அலுவலகமும் துணை இயக்குநர் அலுவலகமும் மட்டும் இயங்குகின்றன. அங்கே இப்பொழுது இராமச்சந்திரனார் பெயர் பொறித்த மருத்துவமனைக்கல்வெட்டுகள் உள்ளன. அதுபோல், இராமச்சந்திரனார் படம் மட்டும் இடிந்த கட்டடத்தில் உள்ளது. அதைப் பயன்பாட்டில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் வைக்க வேண்டும்  என்ற உணர்வு கூடத் துறை அலுவலர்களுக்கு இல்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தில் சிவகங்கையில் உள்ள அரசு தலைமையிட மருத்துவமனையின் பெயர் இராமச்சந்திரனார் அரசு தலைமயிட மருத்துவமனை எனப் பெயர் சூட்டப்படுவதாக அரசாணை தெரிவிக்கிறது. நிலம் தந்ததால் பெயர் சூட்டப்படுவதாக இல்லை.அந்த நிலப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குத்தான் இராமச்சந்திரனார் பெயர் சூட்டப்பட்டது. அந்த மருத்துவமனை எந்த இடத்திற்கு மாற்றப்பட்டாலும் அந்த மருத்துவமனையின் பெயர் அதுதான். அவ்வாறிருக்க அரசு நிலத்தில் எழுப்பப்பட்ட மருத்துவமனை எனவே, தனியா் பெயர் எடுக்கப்பட்டது என்பது பொருத்தமற்றது.
மற்றோர் மருத்துவ அலுவலர், “மருத்துவமனைக்குத்தான் இராமச்சந்திரனார் பெயர் சூட்டப்பட்டது மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனைக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்றுதான் பெயர் சூட்டப்படும். எனவே, இதன்பெயர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்பதுதான் சரி” என்றார்.
அதுவும் தவறான கருத்து. மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. மருத்துவமனைக்கு முந்தைய பெயர் எர்சுகின்; இப்போது இராசாசி மருத்துவமனை. சென்னை மருத்துவக்கல்லூரி உள்ளது. அதற்கான மருத்துவமனையின் பெயர் மட்டும் இராசீவுகாந்தி அரசு மருத்துவமனை. அண்ணல் காந்தி மருத்துவமனை(திருச்சி),  கத்தூரிபாய் காந்தி  பெண்கள் சிறார் மருத்துவமனை (சென்னை) உள்ளன. இவைபோல் கல்லூரிக்கும் மருத்துவமனைக்கும்  தான்லி((Stanley)(சென்னை), மோகன் குமாரமங்கலம்(சேலம்) , கி.ஆ.பெ.விசுவநாதம்(திருச்சி), முதலான பெயர்கள் சூட்டப்பட்டுக் கல்லூரியும் மருத்துவமனையும் இணைந்து இயங்குகின்றன.
எனவே, நிலக் கொடையாளர் என்ற முறையிலேயே அவரது பெயர் நிலைத்திருக்க வேண்டும். எனினும்  அரசு முறையாக அவர் பெயரை மருத்துவமனைக்குச் சூட்டியுள்ளதால், அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் இராமச்சந்திரனார் பெயர்தான் தொடர்ந்து நிலைக்க வேண்டும்.
சிவகங்கையின் மூத்த தலைமுறையினர்  சிவகங்கையின் கல்வி வளர்ச்சிக்கும் தீண்டாமை ஒழிப்பிற்கும் மது ஒழிப்பிற்கும் பாடுபட்டு நாடு முழுவதும் பகுத்தறிவுப் பணிகளை ஆற்றிய செம்மல் இராமச்சந்திரனார் பெயரை எடுத்தது குறித்துப் பெரும் வருத்தத்தைத் தெரிவிக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் அவரை அறியாததால், பழைய மருத்துவமனையின் பெயர் இராமச்சந்திரனார், புதிய மருத்துவமனையின் பெயர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை என்கின்றனர். அனைவருக்கும் இப்பொழுது இவ்வாறுதான் அறிமுகமாகி உள்ளது. மருத்துவமனையினரும் அவ்வாறே ஆவணங்களில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு, அரசாணைக்கு இணங்க சூட்டப்பட்டஇராமச்சந்திரானர் பெயரிலேயே இனி சிவகங்கை அரசுமருத்துவக்கல்லூரியும் மருத்துவமனையும் அழைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.
சிவகங்கை இராமச்சந்திரனார் அரசு மருத்துவக்கல்லூரி – மருத்துவமனை என்ற பெயரை இனி நிலைக்கச் செய்யட்டும்!
புரட்சித்தலைவியின் வழி நடப்பதாகக் கூறும் அரசு அவரது ஆணையைப் பின்பற்ற வழி வகை காணட்டும்!
இருக்கின்ற ஆணையைச் செயல்படுத்த தேர்தலைத் தடையாகக் கருதாமல் விரைந்து செயலாற்றட்டும்!
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.(திருவள்ளுவர்திருக்குறள் 450)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல-இதழுரை 



சிவகங்கை இராமச்சந்திரனார் மருத்துவமனை+ பழைய கட்டடம்

சிவகங்கை இராமச்சந்திரனார் மருத்துவமனை+ பழைய கட்டடம்