அகரமுதல
பாவம் வைகோ!
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார்.
பிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ.
நாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத் தொகுதி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
முந்தைய தேர்தல் முடிவுகளின்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் இது பொருந்தாது. ஏனெனில் முந்தைய தேர்தலில் மண்ணைக் கெளவினாலும் அடுத்த தேர்தலில் முழு வெற்றி பெறுவது தேர்தலில் வழக்கமே!
சாதிக் கட்சிகளுக்குச் சில இடங்களில் கணிசமான ஆதரவு உள்ளது. ம.தி.மு.க.விற்கான மக்கள் ஆதரவு அதனை விட மிகுதியாக இருந்தாலும் பரவலாக உள்ளது. எனவேதான், சில இடங்களில் ஆதரவு உள்ள கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் பரவலாக உள்ள வாக்கு வங்கியால் கூட்டணிக்கட்சிகளுக்குப் பயன் கிடைப்பது கருதிப்பார்க்கப்படவில்லை.
உண்மையில் இந்த நிலை வந்ததற்குக் காரணம் வைகோவின் அடிமைத் தனமே! தொடக்கத்திலேயே வைகோ தாலினை எப்படியும் முதல்வராக்கித் தீருவேன் என உறுதி மொழிப் பத்திரம் அளித்து விட்டார். பெட்டியில் இடத்திற்காகத் துண்டு போட்டு விட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், ஆதரவு உறுதிப்பாட்டைத் தரும் அவர் குறித்துக் கவலைப்படத் தேவையில்லையே! யாருக்கு ஆதரவு என அலை பாய்பவர்களைத்தானே பிடித்துப் போட வேண்டும். எனவேதான் அவருக்கு ஒற்றைத் தொகுதி மட்டும்.
ம.தி.மு.க.வில் வைகோ போன்றே பிற தலைவர்களும் நாடாளுமன்றத்திற்குச் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது என்ற எண்ணம் கூட்டணித் தலைமைக்கு இல்லை. அப்படி இருந்தது என்றால் 5 தொகுதிகளையாவது ஒதுக்கி யிருக்கும். முன்பு ஒரு தொகுதி குறைந்ததற்கே போர்க்குரல் கொடுத்துப் பின்னர், பா.ச.க. விட்டுத் தர முன்வந்த பொழுது வேண்டா என மறுத்த தன் மதிப்பு உணர்வினர் வைகோ. தேர்தலில் கூட்டணிப் பேரத்தில் ஒதுக்கப்படுவதாக உணர்ந்து சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிய தன் மான உணர்வினர் வைகோ.
வைகோ மிகுதியாக உணர்ச்சி வயப்படுபவராக இருப்பதால் இன்றைக்கு இந்த நிலை. சூழ்நிலை மாறும் பொழுது முடிவை மாற்றுவது தவறல்ல. எனவே, வைகோ, ம.தி.மு.க. போட்டியிடும் ஈரோட்டுத் தொகுதியில் மட்டும் முழுக் கவனம் செலுத்தி மிகுதியான வேறுபாட்டில் வெற்றியை ஈட்ட வேண்டும். நாடு முழுவதும் உள்ள ம.தி.மு.க. பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் ஈரோட்டில் குவித்து மக்கள் ஆதரவை முழுமையாகப் பெறும் வகையில் செயல்பட வேண்டும்.
கூட்டணி என்று சேர்ந்து விட்டதால், பா.ச.க. போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அதற்கு எதிராகப் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். பரவலாகப் பரப்புரை மேற் கொள்ளாமைக்குக் காரணம் கேட்டால் கட்சித் தொண்டர்களின் வருத்தத்தைப் போக்க அப்பொழுதுதான் முடியும் என்பதை விளக்க வேண்டும்.
ம.தி.மு.வின் சின்னமான பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டுமே தவிர, உதயசூரியனில் போட்டியிடக் கூடாது.ஒருவேளை ம.தி.மு.க. உதய சூரியனில் போட்டியிடும் நிலை வந்தால், இது வரை அவர் கட்சி நடத்தியதில் பயனில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு அவரவர் விரும்பிய கட்சியில் இணையவும் அல்லது ஒதுங்கவும் வழிவிட்டு ம.தி.மு.க.விற்கு மூடுவிழா நடத்த வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிடா இயக்கங்கள் போல் செயல்பட்டுப் பொதுவான தலைவராக உயர வேண்டும்.
மக்கள் பாதிப்புறும் போதெல்லாம் வெற்றுக் குரல் கொடுக்காமல் போராடும் போராளிச் செம்மல் வைகோ, உள்ளத்தில் வருத்தத்தை மூடி வைத்துக் கொள்ளக் கூடாது. இந்திய அளவிலும் தமிழகக் கட்சித் தலைவர்களில் பிற கட்சித்தலைவர்களின் நன் மதிப்பு பெற்றவர் வைகோ ஒருவர் மட்டுமே!தமிழீழத்திற்குக் குரல் கொடுப்பதால் உலகத் தமிழர்களின் தலைவராக உயர்ந்துள்ள அவர், தாய்த் தமிழகத்தில் குன்றிப்போய்க் காட்சி அளிக்கக் கூடாது. இப்போதைய கூட்டணியில் இருந்து விலகி அ.ம.மு.க. உடன் கூட்டணி கண்டாலும் தவறில்லை.
எனினும் அதை நாணயக் குறைவாகக் கருதினால், பரப்புரைப் பணிகளில் முதலில் கூறியவாறு வரம்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
துடிப்பாகச் செயல்படும் தி.மு.க.தலைவர் தாலின் 3 தொகுதிகளாவது கொடுத்தால், அதுதான் கட்சியின் தன்மானத்தைக் காக்கும் செயல் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மேலும் 2 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே நாடு முழுவதுமான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். அல்லது கூட்டணி மேடைகளில் கட்சிப் பொறுப்பாளர்களைக் கூட ஏற்றக் கூடாது.
கூட்டணிப் பரப்புரையில் இடம் பெறாவிட்டால் கூட்டணிக்கட்சிகளின் வாக்கு கிடைக்காமல் போகும் சூழல் வந்தால் பாசக போட்டியிடும் தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. முழு வீச்சில் ஈரோட்டில் மட்டும் களங்காண வேண்டும்.
தி.மு.க. கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல இது. ம.தி.மு.க. ஆதரவாளர்கள் கருத்தை எதிரொலிக்கும் வழிகாட்டுரையே இது. இதனால் தி.மு.க.கூட்டணி வலுவான நிலைக்கு மாறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல, இதழுரை
No comments:
Post a Comment