இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்!
பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) – அவரின் பா.ச.க. கட்சியைத் – தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை. இந்தச் சூழலில் பா.ச.க. ஆட்சியை அகற்ற இராகுல் ஏற்றவராகவே உள்ளார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதும் தேவையாக உள்ளது.
அதே நேரம் தமிழக மக்களுக்கு ஆறாத்துயரத்தை அளித்துள்ள பேராயக்கட்சியின்(காங்கிரசின்) தலைவர் இராகுல் ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு மன்னிப்பும் கேட்கவில்லை; வருத்தமும் தெரிவிக்கவில்லை. இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்குமாறு குரல் கொடுத்தால் அவர் அன்னையும் மாட்டிக் கொள்வார்; அவர் கட்சியும் தண்டனைக்கம்பியில் சிக்கிக் கொள்ளும். ஆனால் தானும் தன் அன்னையும் தன் கட்சியும் செய்த கொடுங்குற்றங்களுக்குக் கழுவாயாக அவர் ஒன்று செய்ய இயலும். தமிழ் ஈழத்தைப் பேராயக்கட்சி ஏற்கிறது; உலக நாடுகள் அவை ஏற்பதற்குப் பாடுபடுவோம் என அறிவிப்பதுதான். இதனால் செய்த குற்றங்கள்பற்றிய பேச்சு மங்கி விடும். இவ்வாறு தமிழ் ஈழத்தை ஏற்காத சூழலில் தமிழ்நாட்டில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தமிழ் மக்களுக்கு இதைவிடப் பேரிழுக்கு வேறில்லை.
அவரது கட்சியைச் சேர்ந்த அழகிரி முதலான அடிமைகள் தமிழ்நாட்டில் இராகுல்போட்டியிட வேண்டும் எனக் கூக்குரல் இடுகின்றனர். இதனைத் தமிழ்நாட்டின் குரலாக எண்ணி அவர் தமிழ்நாட்டில் போட்டியிடும் முடிவிற்கு வரக்கூடாது. அவ்வாறு அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால், துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனப் பதறி ஓடும் அளவிற்கு அவருக்குத் தமிழக வாக்காளர்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.
தி.மு.க. தன் தேவைக்கேற்ப அக்கட்சியுடன் வெட்டிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும் அதற்கேற்றாற்போல் காரணங்களைக் கூறிக் கொண்டுள்ளது. எனினும் தமிழ்நாட்டில் இராகுல் போட்டியிட அதுவும் குரல் கொடுத்து ஒத்துழைத்தால் தி.மு.க.வும் மண்ணைக் கெளவும் என்பதை உணரவேண்டும். ஆட்சியமைக்கும் கனவில் உள்ள தி.மு.க.விற்கு இதனால் கனவு சிதையும். முதல்வர் பதவியைக் கனவிலும் காணமுடியாத நிலைக்கு மு.க.தாலின் தள்ளப்படுவார். சிறப்பான முறையில் பேசியும் செயல்பட்டும் மக்களைக் கவர்ந்து வரும் அவருக்கு ஏற்படும் இப்பின்னடைவு கட்சிவளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளும்.
முன் வரலாற்று நிகழ்வு ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். அரசியல் துறவற நிலைக்குத் தள்ளப்பட்ட இந்திரா காந்தி மொரார்சி தேசாய் அரசின் அச்சுறுத்தல்களில் இருந்து தப்பிக்க மக்களவை உறுப்பினராக வேண்டிய கட்டாயச் சூழலில் இருந்தார். அப்பொழுது (1979 இல்) தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திராகாந்தி போட்டியிட முதலில் எம்ஞ்சியார் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். அவரே பின்னர் அவருக்குப் பாதுகாப்பு இருக்காது எனக் கூறித் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டா எனச் சொல்லி விட்டார். மொரார்சி அரசின் அச்சுறுத்தல் இதற்குக் காரணமாக இருந்தது. என்றாலும் தமிழ்நாட்டில் போட்டியிடுவதை அப்போதைய முதல்வர் எம்ஞ்சியார் தடுத்து விட்டார்.
காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் பேராயக்கட்சியினர் தமிழ்நாட்டில் போட்டியிடுமாறு இந்திரா காந்தியை அழைத்தும் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அன்றைக்குப் பாட்டிக்கு வரவேற்பு தராத தமிழ்நாடு இன்றைக்குப் பேரனுக்கு வரவேற்பு தரும் என்று எண்ண வேண்டா. ஈழத்தமிழர் படுகொலைத் துயரம் நீறு பூத்த நெருப்பாகத்தான் உள்ளது. ஆட்சிக் கனவில் உள்ள இராகுலும் மு.க.தாலினும் அதைச்சிதைத்துக் கொள்ள வேண்டா;எனவே, இப்பொழுதே இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை என அறிவித்து விட வேண்டும். தி.மு.க.வும் இரு கட்சிகளின் நலன்களுக்காகப் பே்ாட்டியிடக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டுச் சிறையில் வாடும் அப்பாவிகள் எழுவர் விடுதலைக்கு எதிராக இல்லை என இராகுல் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், பலரும் பேசி வருவதுபோல் தண்டனை வழங்கிய பின்னர் நீதிமன்றத்தால் சிறை விடுதலையில் குறுக்கே நிற்க முடியாது. என்றாலும் அவர் கருத்தை வரவேற்போம். ஆனால், அவர் இவ்வாறு சொல்வதுடன் நிற்காது, எழுவர் விடுதலைக்காகப் போராடவும் முன்வரவேண்டும். மேலும் அவர் அவ்வாறு கூறியிருந்தாலும் அவர்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தலைவரின் பேச்சிற்கு எதிராகக் கூறுவது தன் அடிமைத்தனத்தைக் காட்டவா? அல்லது இருவரின் நாடகமா என்று தெரியவில்லை. எனினும் திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் எத்தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதே நேரம் இராகுல் தன் கட்சியினரிடம் எழுவர் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்க வேண்டும்.
அடிமை உணர்வில் ஊறித்திளைக்கும் பேராயக் கட்சியினரே! தமிழ் மக்களின் உணர்வுகளை மறைக்காமல் உங்கள் தலைவரிடம் தெரிவித்தால்தான் அவர் சரியான முடிவு எடுக்க இயலும். பொது வெளியில் நீங்கள் என்ன பேசினாலும் தனிப்பட்ட முறையிலாவது நீங்கள் தமிழக உணர்வையும் தமிழக வரலாற்றையும் தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பதையும் அவரிடம் உணர்த்த வேண்டும். மாறாக அவர் பேச்சிற்கு ஏற்ப நீங்கள் தாளமிடுவது தமிழ் மக்களுக்கு எதிரான வஞ்சகமாகும்.
தமிழக வாக்காளர்கள் இராகுலைத் தோற்கடிக்க ஒன்று திரளுவார்கள் என்பதை உணர்ந்து இராகுல் கட்சியினரின் போலி விருப்பத்திற்கு ஆட்பட்டுத் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டா முதலில் கூறியவாறு தமிழ் ஈழ அறிந்தேற்பிக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.
இராகுல், பிற மாநிலம் எதிலும் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்! வெற்றிக்குப் பின்னர் மனித நேயத்துடன் நடந்து கொண்டு தமிழீழ அறிந்தேற்பிற்கு ஆவன செய்ய வேண்டுகிறோம்!
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.(திருவள்ளுவர்,திருக்குறள் 461)
No comments:
Post a Comment