லக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள்


தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் தமிழைக்காக்கவும் பரப்பவும் பல வகைகளில் போராடித் தம் வாழ்க்கையைச் செலவிட்டவர். அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும் தட்டிக் கேட்டும் செயல்பட்டதுடன் அரசிற்குத் தமிழ் வாழவும் தமிழர் வாழவும் மக்களாட்சி நிலைக்கவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்; வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். தம் கட்டுரைகள், நூல்கள், சொற்பொழிவுகள் இதழ்கள் மூலம் அவ்வப்பொழுது தக்க நெறியுரைகளைத் துணிந்து வழங்குவதில் முதலாமவராகத் திகழ்ந்துள்ளார். அவர் கூறும் அறிவுரைகள் அரசுகளுக்கு மட்டுமல்ல. அரசை நடத்தும் கட்சிகளுக்கும் அரசாள எண்ணும் கட்சிகளுக்கும்தான்.
  பேரா.இலக்குவனாரின் அறிவுரைகள் யாவும் இன்றைக்கும் பின்பற்ற வேண்டிய நிலையில்தான் நாடு உள்ளது. ஆதலின் அவரின் கருத்துகளை நாம் நினைவில் கொள்ளச் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

தமிழ்மொழி
“தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்
தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்”
என வலியுறுத்தியவர் பேரா.இலக்குவனார். தமிழின் தூய்மை காக்கப்படவும், தமிழின் பயன்பாடு முழு அளவில் இலங்கவும் தமிழ் உலகெங்கும் பரவவும் தமிழர் வாழும் நாடுகளில் தமிழும் வாழவும் பல அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளார்.
இதற்கு நம் நாட்டில் தமிழ் முழு உரிமையுடனும் சம உரிமையுடனும் விளங்க வேண்டும் என்றார். இந்நிலை வருவதற்குத், “தேசிய மொழி என்பது தமிழர்க்குத் தமிழேயாகும். தமிழர்கள் தம் மொழியை வட்டார மொழிகள் என அழைத்தலை விடுத்துத் தேசிய மொழி என அழைத்தல் வேண்டும்” எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் எப்பொழுதும் வலியுறுத்தி வந்துள்ளார். இதனை உணர்த்தும் வகையில் பாடநூல்கள் அமைய வேண்டும்  என்பதே அவரின் தலையாய வேண்டுகோள்.
 இந்திக்கும் சமற்கிருதத்திற்கும் முதன்மை அளிக்கும் இந்திய அரசு அல்லது அதனை நடத்தும் மத்தியக் கட்சிகள் தமிழையும் சம நிலையில் நடத்தத் தமிழின் தேசிய உரிமையைக் காத்தல் வேண்டும்.

கல்வி
பேராசிரியர் சி.இலக்குவனார், ஆசானாகவும் பேராசானாகவும் முதல்வராகவும் என 35 ஆண்டுகளுக்கு மேல் கல்வித்துறையில் பணியாற்றியவர். தமிழ் மக்கள் கல்வியில் சிறந்து உயர்ந்து விளங்காமைக்குக் காரணம் அயல்மொழிவழிக் கல்வியும் தமிழ்க்கல்வி புறக்கணிப்புமே என்னும் அசைக்காத நம்பிக்கை உடையவர்.
அவர் கல்வி குறித்து, “நாட்டு மக்களுக்குக் கல்வி அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். …. தேர்வுக்காக ஆயத்தம் செய்வதே கல்வி நிலையங்களின்கடமை என்பது மாறுதல் வேண்டும்.” என வலியுறுத்தி வந்தார்.
“எல்லா நிலைகளிலும் எவ்வகைப் பாகுபாடுமின்றிக் கல்விக்குக் கட்டணமில்லை என்னும் நிலையை விரைவில் உருவாக்க வேண்டும்” என்பதே அவரின் கனவு.
“உயர்நிலைப்பள்ளிகளில் ஒரே காலத்தில் தமிழைப் பாட மொழியாக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரே சமயத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும்தமிழைப் பாட மொழியாக்க வேண்டும்.” என வலியுறுத்தித் தம் காலத்தில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால், இன்றைக்குப் பள்ளிகளிலும் தமிழ் இருக்குமிடங்களில் எல்லாம் ஆங்கிலம் புகுத்தப்பட்டு மாணவர் நலன்கள் சிதைக்கப்படுகின்றன.
கல்வி என்றால், அது தாய்மொழி வழியான கல்விதான் என்பதைப் பல இடங்களில் அவர் கூறி வந்துள்ளார். இதற்காகவே தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு, அதனால் இந்தியப் பாதுகாப்புச்சட்டத்தின்படிச் சிறைக்கு அனுப்பப்பெற்றவர்.
கல்லூரி முதல்வர்கள் அனைவரும் தமிழில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழறிந்தவர்கள் கல்விநிலையங்களின் தலைவராக இருந்தால் கல்விநிலையங்களில் தமிழ் வாழும் அல்லவா?
“தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் பாடம் கற்பித்தாலன்றி நம் நாடு முன்னேறாது. பேரறிஞர்கள் தோன்றும் வாய்ப்பும் ஒருநாளும் ஏற்படாது. .. தமிழ்மொழி உயர்நிலை பெறவில்லை என்றால், நாமும் இன்னும் உயர்நிலை பெறவில்லை என்றே கருதிடல் வேண்டும்” என வலியுறுத்தி,
“ தமிழ் வழியாகப் படித்துப் பட்டம் பெற்றோர்க்கே ஆட்சித்துறையில் இடம் அளித்தல் வேண்டும். ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்ற நிலையை வைத்துக்கொண்டு அதன் வழியாகப் படித்து வருவோர்க்கே மதிப்பும் தந்து கொண்டிருந்தால் தாழ்த்தப்படும் தமிழ்வழியாகப் படிக்க எவர் முன்வருவர்?” என வினவுகிறார்.
  தமிழக அரசாக இருந்தாலும் மத்திய அரசாக இருந்தாலும் பணித்தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். அவ்வாறாக இருந்தால் தமிழ்வழிக்கல்வி நிலைக்குமல்லவா? ஆனால், பொதுத்தேர்வு என்ற போர்வையில் தமிழ் இல்லாமல் ஆக்கப்படுகின்றது. எனவே, கல்வியை மாநிலப்பட்டியலில் மீளக் கொணரவும் தமிழை எல்லா இடங்களிலும் பயன்மொழியாக்கவும் போராடக் கட்சிகள் முன் வரவேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழுக்குத் தலைமை கொடுக்கும் வகையில் செயல்படுவதாக உறுதி அளிக்க வேண்டும்.
இந்திய அரசிற்கு வேண்டுகோள்
இந்திய அமைப்பு மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்றே இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே பேரா.இலக்குவனார் வலியுறுத்தி வந்தார். அந்நிலையை எட்டும் வரை, “கூட்டரசுப் பாராளுமன்றத்தில் தேசிய மொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவற்றுள், எதில் வேண்டுமானாலும் யாரும் உரை நிகழ்த்தலாம் எனும் உரிமை ஒப்புக் கொள்ளப்படல் வேண்டும். எனவே, இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.” என அறிவுறுத்தி வந்தார்.
பாரதக் கூட்டரசு அமைப்பில் தமிழுக்கும் சமநிலை அளித்தல் வேண்டும். கூட்டரசின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகக், கூட்டரசுத் தேர்வு மொழிகளுள் ஒன்றாகத் தமிழும் அமைந்தால்தான் தமிழர்க்கும் தமிழ்நாட்டுக்கு உலக அரங்கிலும் மதிப்பு ஏற்படும். கூட்டரசிலும் சரிசமமாகப் பழக இயலும்.
“இந்தி மொழியைக் கற்றால்தான் வாழ்வுண்டு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு இந்தியை விரும்பாதவர்மீது சுமத்துவதில்லை என்று கூறுவது அறநெறிக்கு ஒத்ததாகவும் இல்லை. மக்களாட்சி முறைக்கு மாறான தனிக் கொடுங்கோன்மையாட்சிக்கு உரியதாகவும் உள்ளது.”  என இந்தித்திணிப்பைக் கடிந்துரைக்கிறார். ஆனால், நாளும் இந்தி திணிக்கப்படுவது நின்றபாடில்லை.

சாதியும் தேர்தலும்
தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி வழியில் நடைபோட்ட பேரா.இலக்குவனார் சாதி சமய வேறுபாடற்ற மன்பதை நிலைக்கவும் பாடுபட்டார்.
“பிறப்பு(சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றி பெறல் இயலாது.  எனவே சாதி வேறுபாடற்ற நிலையை உருவாக்க வேண்டும். சாதிகளின் பெயரால் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் போட்டியிட முனைவது எரியும் நெருப்பில்  எண்ணெய் ஊற்றுவது போலாகும்.” என்றும்
“வாக்களித்தல் மக்களாட்சியில் தமக்குரிய தவிர்க்கலாகாக் கடமை என வாக்காளர்கள் எண்ணுமாறு செய்தல் வேண்டும். சாதி, மதம், பணம் இவற்றைக் கருதாமல் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.” என்றும் கூறிச் சாதியற்ற நிலையைத் தோற்றுவிக்க  அரசு செயலாற்ற வேண்டும் என்றும் கட்சிகளும் மக்களும் இப்பாதையில் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கிளர்ச்சிகள்
இன்று நாட்டில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் பல்வேறு கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கிளர்ச்சிகளை ஒடுக்குவதாகக் கூறி அரசே வன்முறையில் இறங்கும் நிலைகளையும் காண்கிறோம். மாணவர்கள் கிளர்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பேரா.சி.இலக்குவனார் மாறுபட்ட கருத்தைக்கூறிக் கிளர்ச்சிகளை மன்பதை நோய்களைச் சுட்டிக்காட்டும் கருவிகளாக வரவேற்கிறார்.
நோய்க்கு மருந்துபோல் மன்பதை நோய்க்கு மாணவர் கிளர்ச்சியும்வேண்டப்படுகின்றது. மாணவர் கிளர்ச்சியை வன்முறையால் அடக்க நினையாது மென்முறையால் அகற்ற முயல்வதே அறிவுடைமையாகும்.” என்பனவே கிளர்ச்சிகள் குறித்த அவர் கருத்து.
எனவேதான், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளுமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு காவல்துறையினர் வேண்டிய பொழுது, “மாணவர்கள் தங்கள் எதிர்கால நலன்களுக்காகப் போராடுவதை நிறுத்துமாறு சொன்னால் நான் நல்ல ஆசிரியன் அல்லன்” என்று கூறியுள்ளார் பேரா.சி.இலக்குவனார்; இதன் காரணமாக இந்தி எதிர்ப்புப் போரில் சிறைசெய்யப்பட்டார்.
செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம், நெடுவாசல் எரிவளித்திட்டம் முதலானவற்றிற்கு எதிரான மக்கள் போராட்டங்களில் அரசின் நிலைப்பாடு தும்பை விட்டு வாலைப்பிடிப்பதாக உள்ளது. எனவேதான், பேரா.சி.இலக்குவனார், “கிளர்ச்சிக்குப் பின்னர்தான் கேட்பது கிடைக்கும் என்ற நிலையை மாற்றுதல் வேண்டும். அதுவே நலனறிந்து ஆளும் அரசின் பொறுப்பும் கடனும் ஆகும்.” என அரசை அறிவுறுத்துகிறார்.
  போராட்டங்களைக் குறை தெரிவிக்கும் வாயில்களாகக் கருதாமல் ஆட்சிக்கு எதிரான தீச்செயல்களாகக் கருதி அரசு ஒடுக்காமல் இவரின் அறிவுரையைப் பின்பற்றி “நோய்நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச்” செய்ய வேண்டும். இங்கே நோய் என்பது மக்களின் துன்பங்கள்.
 சுருக்கமாகச் சொல்வதாயின், “எவ்வாற்றானும் குடிதழுவிக் கோலோச்ச ஆட்சியாளர் முயல்தல் வேண்டும்.” என்னும் அவர் அறிவுரையை அரசுகள் பின்பற்றிச் செயல்பட்டால் மக்கள் நலன்நாடும் மக்களாட்சி நிலைக்கும்.
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் இலக்குகளை உள்ளத்தில் நிறுத்தி, அனைவரும் கல்வி பெறும் நிலையையும் சாதி சமய வேறுபாடற்ற மன்பதையையும் சம உரிமையுடைய மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டமைப்பைத் தோற்றுவிக்கவும் அனைத்துக் கட்சிகளும் பாடுபட வேண்டும்.  இதற்கு எதிரான கட்சிகளை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன்