அகரமுதல
வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி?
2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்காகவும் உடன் நடத்தப்படுகின்ற இடைத் தேர்தல்களுக்காகவும் வழக்கம்போல் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளன. வழக்கம்போல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் பாசகவுடனும் பாசகவுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வைத்துள்ள கூட்டணி மக்கள் யாவரும் அறிந்ததே. ஆனால் இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றால் எதிர் விளைவுகளால் வெற்றி மாலை நழுவிப்போகும் என்பதே உண்மை.
வாக்காளர்களை விலைக்கு வாங்கி வாக்கு பெறும் ஊழல் முறை மிகவும் மோசமானது என்பதில் ஐயமில்லை. ஆனால், இதனைத் தடுத்து நிறுத்த அரசு நேர்மையான வழியைக் கையாள வேண்டும். எதிர்க்கூட்டணி வேட்பாளர் அல்லது அவரது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் இருந்தாலே கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்துவது முறையல்ல்.
இயல்பான கையூட்டு வழக்கில் ஊழல் ஒழிப்புத் துறை என்ன செய்கிறது? பணம் கேட்டவரிடம் கொடுப்பதற்காக மை தடவிய பணத்தாள்களைக் கொடுத்து அனுப்பி கையூட்டு கேட்டவர் அதைப் பெறும்பொழுதுதான் கையும் களவுமாகப் பிடிக்கிறது. அதுபோல் வாக்காளர்கள் பணம் பெறும் பொழுது நடவடிக்கைஎடுத்தால் வாக்காளர்களும் பணம் வாங்க அஞ்சுவர். எனவே, பணம் கொடுக்க முன்வருவோர்களும் பின்வாங்கிச் செல்வர்.
எங்கேனும் தேர்தல் ஆணையத்தின் கூட்டணிக்கட்சியினரிடம் பறக்கும் படை பணத்தைப் பறிமுதல் செய்திருந்தால் அதற்கு இலக்கானவர் கட்சி மாற இருக்கிறார் அல்லது கட்சி மாறிவிட்டார் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.
கடலூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆளுங்கட்சித் தலைவர் வீட்டிலேயே அதிரடி ஆய்வா என மக்கள் வியந்த பொழுதுதான் அவர் கட்சி மாற இருக்கும் செய்தி வந்தது.
இதுபோல் உத்தரகாண்டம் பா.ச.க. தலைவர் அனில் கோயல், அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். பிறகுதான் தெரிந்தது அவர் கட்சியில் இருந்து நீங்கி விட்டார் என்று.
இவ்வாறு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அதிகாரமில்லாதஇடைவேளை அரசு அரசின் துறைகள் மூலம் தவறான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணம் யாவும் திடீரென்று ஒருவரிடம் குவிந்திருக்க முடியாது. வருமானவரித்துறையினர் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னரோதேர்தல் முடிந்த பின்னரோ நடவடிக்கை எடுக்கலாம். இப்பணம் வருமானவரியிலிருந்து தப்பிய பணமாக இருக்கலாமே தவிர திருட்டுப் பணமல்ல.
தி.மு.க.பொருளாளர் துரைமுருகன் முதலான தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் அவர்களது நண்பர்கள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் கைப்பற்றப்பட்ட பணமும் வருமானவரித்துறையினரின் ஆய்விற்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால், இப்பொழுது மேற்கொண்டு பரபரப்பான செய்தியைப் பரப்பவிடுவதுஉள்நோக்கம் கொண்டதுதானே.
அ.ம.மு.க. கட்சியின் கோரிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஓரவஞ்சனையுடன் தொடர்ந்து நடந்துகொள்வதற்குக் காரணமும் அதன் ஆளுங்கட்சிக் கூட்டணிப் பாசத்தால்தான் என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
அண்மையில் நாம் தமிழர் கட்சி. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சியின்கரும்பு உழவர் சின்னம் தெளிவாக இல்லை என முறையிட்டும் கால வாய்ப்பு இல்லை எனத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. புதிய இளைய வாக்காளர்களிடம் செல்வாக்கு பெற்று வரும் கட்சி. நாடு முழுவதும் கூட்டணி யின்றித் தனித்துப் போட்டியிடும் தன்னம்பிக்கையுள்ள இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால், பிறரின் வெற்றியை முடிவெடுக்கும் வகையில் இவர்கள் பெறும் வாக்குகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே திட்டமிட்டுவாக்குப்பதிவு இயந்திரத்தில் அதன் சின்னம் மங்கலாக இருக்கும்படிவைத்துள்ளனர் என அக்கட்சியினர் நம்புவதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆந்திராவில் சனசேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் ச.ம.உ. மதுசூதன்(குப்தா)வாக்கு எந்திரத்தில் சின்னம் சரியாக வைக்கவில்லை என்பதால் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தினார் எனச் செய்தி வந்துள்ளது. ஆந்திரத் தேர்தலில் பல வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாகச் செயல்படவில்லை எனவும் கலவரங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாகநடைபெறத் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்குத் தன்னுடைய கூட்டணியை அது கைவிட வேண்டும்.
வாக்காளர்கள் எவ்விதத் தயக்கமும் குற்ற உணர்வுமின்றித் தேர்தல் கால பண அளிப்பை எதிர்பார்க்கின்றர். எனவே, அதிரடி ஆய்வுகளால் பணம் கைப்பற்றப்படுவதால், நமக்கு வரவேண்டிய பணத்தைப் பறிமுதல் செய்து விட்டனரே என எண்ணுகிறார்களே தவிர நேர்மையான நடவடிக்கை எனப் பாராட்டும் மனநிலையில் இல்லை. எனவே, பண இருப்பு உள்ள இடங்களில் அல்லது பணப்பெட்டிகள் இடம் பெயரும் ஊர்திகளில் அதிரடி ஆய்வு மேற்கொள்வதை விட, அந்த நேரங்களில் பொறுமை காத்து, வாக்காளர்களிடம்பணம் கொடுக்கும் பொழுது வாக்காளர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் வாக்காளர்களுக்கு ஏற்படும் அச்சம் தேர்தலில் பணம் பெறும் முதன்மையைத் தடுக்கும். ஆனால் இவ்வாறு செய்தால் தேர்தல் ஆணையத்தின் கூட்டணியில் உள்ள ஆளுங்கட்சியினரும் அவர்களது பிற கூட்டணியினரும் மக்களைக் கவனிக்க முடியாதே என ஒன்றும் செய்யாமல் இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அதன்மீது மக்களுக்கு எரிச்சல் ஏற்டும் விதமாகத்தான் உள்ளது. எனேவ, அதன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும். வாகைசூடும் கனவு பலிக்காது. ஆதலின் இனியாவது தேர்தல் ஆணையம்கூட்டணியிலிருந்து விலகி நடுவுநிலைமயுடன் செயல்பட வேண்டும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (திருவள்ளுவர், திருக்குறள் 118)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
No comments:
Post a Comment