அகரமுதல
தன்னம்பிக்கை மிகுந்த
சீமான், தினகரன், கமல்
தேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள்.
நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் கடந்த தேர்தல் சின்னமான இரட்டை மெழுகினைக் கிடைக்கச் செய்யாமல் கரும்பு உழவர் சின்னம் அளித்துள்ளனர். அப்படியும் அச்சம் போகவில்லை. வாக்குப் பதிவுப் பொறியில் இச்சின்னம் தெளிவின்றி இருப்பது கூடத் தெரியாத அளவில் உள்ளது. இருப்பினும் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. 50 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நா.த.க. எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்கு வளர்ச்சியே! நாளைக்கு இந்த வளர்ச்சி அக்கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள உதவும். எனவே, ஒரு தொகுதிக்காகக் கட்சியை அடைமானம் வைக்காமல் நாடு முழுவதும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்குப் பாராட்டுகள்!
அ.தி.மு.க.-பா.ச.க.கூட்டணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அ.ம.மு.க. தனித்து நின்று செல்வாக்கைக் காட்ட போட்டியிடுகிறது. இ.ம.ம.க.(இந்திய மன்பதை மக்களாட்சிக் கட்சி / Social Democratic Party of India) உடன்பாடு வைத்து அதற்கு மத்தியச் சென்னைத் தொகுதியை அமமுக வழங்கியுள்ளது. பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வில்லை. பா.ச.க.வின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க. கட்சியும் ஆட்சியும் தினகரன் கைகளில்தான் இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு வராததுதான் நல்லது. வந்திருந்தால் பா.ச.க.விற்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருப்பார். இப்பொழுது துணிந்து பா.ச.க.வையும் காங்.கையும் எதிர்த்து வருகிறார். எத்தனைத் தொந்தரவுகள் கொடுத்தாலும் அவர் மேலாங்கி நிற்கிறார்.
அச்சுறுத்தியும் பணியாததால் பசப்புச் சொற்களில் ஈர்க்ப் பார்த்தது பா.ச.க. ஆனால் அதற்கு இடம் கொடுக்கவில்லை தினகரன். தேர்தல் சின்னம் தொடர்பான தொல்லைகளே அமமுக மீது மத்திய மாநில ஆளுங்கட்சிகளுக்கு இருக்கும் அச்சத்தைக் காட்டுகிறது.
தினகரன் கையே தென் மாவட்டங்களில் ஓங்கி உள்ளது. எனவேதான் அங்கே அதிமுக ஓரிடத்தில் மட்டுமே போட்டியிடுகிறது. அது மட்டுமல்ல. தமிழக மக்கள் மதுரையில் கூடும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப் பதிவை வைத்துள்ளது. வாக்குப்பதிவு நேரத்தை மதுரையில் மட்டும்தானே கூட்டி உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லா மக்கள் முழுமையும் வாக்களிப்பார்கள் என எங்ஙனம் எதிர்பார்க்க முடியும்? மதுரைக்கு வரும் வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க இயலாதே! அவ்வாறு வாக்களிக்கக் கூடாது என்பதுதான் அரசுகளின் எண்ணம் எனத் தேர்தல் நாள் காட்டுகிறது. எத்தனை இடுக்கண் வந்தாலும் அஞ்சாது எதிர்கொண்டு போட்டியிடும் அ.ம.மு.க.விற்கும் பாராட்டுகள்!
எந்த் தொழில் புரிந்தாலும் எப்பணி ஆற்றினாலும் கட்சி தொடங்கேவா தேர்தலில் போட்டியிவோ தடையில்லை. அவ்வாறிருக்க நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சரியல்ல. நடிகர்களின் ஒப்பனைப் பூச்சையும் பிறர் எழுதித் தருவதைப் பேசுவதையும் நம்பி அவர்களை எடுத்துக்காட்டான நாயர்களாக எண்ணி ஆதரிப்பதுதான் தவறு. கமல் நடிகர் மட்டும் அல்லர். பல்துறைக் கலைஞர். திரைப்படங்களில் நல்லவர் வேடங்களில் மட்டும் நடிப்பவர் அல்லர். எனவே, திரைக்கதைப் பாத்திரங்கள் அடிப்படையில் மக்களிடம் வாக்குகளைப் பெறுவார் எனச் சொல்ல முடியாது. அவரும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்காகக் கட்சியை அடகு வைத்துவிட்டுக் கூட்டணி எதிலும் இணையவில்லை. ஊழலை எதிர்த்தும் நாட்டு நலன் முழக்கங்களை முன்னிறுத்தியும் அவரின் மக்கள் நீதி மையம் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
நடிகர்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தால் தவறு. எனினும் ஊழலை ஒழிக்கும் முழக்கத்தால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள் என நம்பியிருந்தால் தவறல்ல. ஆனால் ஊழலில் திளைக்கும் மக்கள் ஊழலுக்குத் துணை நிற்பதால் ஊழல் அடிப்படையில் எக்கட்சியையும் தோற்கடிக்க முடியாது என்பதே உண்மை. எனினும் தன் வலிமை, தன் மையத்தின் வலிமை என்ன என அறிந்து கொள்ள வாய்ப்பாகத் தனித்து அவரது கட்சி போட்டியிடுகிறது. இந்த வாக்குகள் அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு உதவும். இவர யாருடைய ஆதரவு வாக்குகளை அல்லது எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம். எந்தத் தொகுதியிலும் பிணைத் தொகையை மீளப் பெற முடியாத அளவு குறைவான வாக்குகள் பெற்றால் கட்சியை மேம்படுத்துவதற்கான சிந்தனை உருவாகி அடுத்தத் தேர்தலுக்கு உதவும்.
எவ்வாறிருப்பினும் தன்னம்பிக்கையுடன் தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மையத்திற்குப் பாராட்டுகள்!
வெற்றி தோல்விகளை அளவுகோலாகக் கொள்ளாமல் வாக்குகள் பெறுவதையே இலக்குகளாகக் கொண்டு புதிய களம் காணும் இவர்கள் புதிய வாக்காளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தினால் நன்று. இவர்கள் போட்டிகளால். தோற்க வேண்டும் என்று நாம் கருதும் கட்சிகள் வெற்றி பெற நேர்ந்தாலும் இவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியனவே! வெற்றி பெறும் எனக் கருதும் அணிகளுக்கு வாக்களிக்காமல் நடுநிலையுடன் சிந்தித்து மக்கள் வாக்களிக்க இவர்களின் பரப்புரைகள் உதவும்.
இவர்களின் தன்னம்பிக்கை வெல்க!
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.(திருவள்ளுவர், திருக்குறள் 673)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல
No comments:
Post a Comment