வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்!
சித்திரை 05, 2050 வியாழன் 18.04.2019
வாக்குப்பதிவு நாளன்று நாம் அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டிய கடமை மறவாமல் வாக்களிப்பதே!
வேறு என்ன பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் வாக்களிக்க வேண்டும்.
நாம் வாக்களித்து நாட்டின் போக்கு மாறப்போகிறதா? என அலட்சியமாக இல்லாமல் ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை
நாடார் வாக்கு போடார் பிறர்க்கு
செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு
தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
முதலியார் வாக்கு முதலியார் தமக்கே
(தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், துரத்தப்பட்டேன்: அ-ள் 34-39)
தேர்தல் என்றதும் தூத்துக்குடி, நெடுவாசல், ஏறுதழுவல்(சல்லிக்கட்டு), பொதுத் (நீட்/NEET) தேர்வு, பாலுறவு கொலைகள், குழந்தைகள் கொலைகள், மாணவிகளின் கற்பைச் சூறையாடல், எங்கும் ஊழல்- எதிலும் ஊழலால் வேலையின்மை, தொழில் வாய்ப்பின்மை, ஏவூர்தி ஊழல், படைக்கருவிகள் ஊழல், பணமதிப்பிழப்பால் வாழ்விழப்பு முதலான துயர நிகழ்வுகளும் உயிரிழப்புகளும் கண் முன் நிழலாடும்.
என்றெல்லாம் சாதிக் கண்ணோட்டம் காணாமல் நடுநிலையுடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவிப் பறிப்பு, பறிக்க வேண்டிய உறுப்பினர்களின் பதவிக்காப்பு ஆகிய மக்கள் நாயகத்தைப் புதைக்கும் செயல்கள் நம் முன் நிற்கும்.
தமிழ்நாட்டில் இருந்து தமிழ் துரத்தப்படல், சமக்கிருத, இந்தித் திணிப்பு முதலான மொழிக் கொலைகள் நெஞ்சில் தைத்த வண்ணம் இருக்கும்.
எழுவர் முதலான நீண்டகாலத் தண்டனைவாசிகள் வாழ்வைச் சிறையிலேயே முடிக்கும் கொடுஞ்செயல் ஓலங்கள் செவிகளில் கேட்கும்.
பல்லின மக்கள் வாழ்வதைப் புறக்கணித்து ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே கல்வி, ஒரே பண்பாடு என்ற திணிப்பு வேலைகளின் அச்சுறுத்தல் நம்மை வாட்டும்.
புயல் தாக்குதல் முதலான கொடுந்துயர் நேரங்களில் எட்டிக்கூடப்பார்க்காதவர்கள் வாக்கு கேட்டபொழுது காட்டிய முகங்கள் நமக்குத் தெரிய வரும்.
நாம் முன்னதாகவே சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
யாருக்கு வாக்களிக்க வேண்டா என்பதை முடிவு எடுக்கும் நம்மால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவெடுக்க இயலவில்லை. அல்லது நாம் விரும்பி அளிக்கும் வாக்கு விரும்பாதவர் வாகை சூட வாய்ப்பளிககுமோ என்று அஞ்சுகிறோம். எனவே, நண்பர்கள், சுற்றத்தார் பக்கம் இணைந்து உண்மையின் பக்கமான வாக்குகளைப் பெருக்க வேண்டும்.
இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் அல்லது இன்னார்க்கு வாக்களியுங்கள் என நாம் கூறவில்லை.
மனித நேயமும் தமிழ் நேயமும் மிக்க நல்லாட்சிக்கு யார் வந்தால் நல்லது என எண்ணிப் பார்த்துத் தக்கவருக்கு வாக்களியுங்கள்!
வாக்கு செல்லாத வாக்குஆக மாறாத வகையில் சரியாக வாக்களியுங்கள்!
அடுத்தவர் நம் வாக்கைப் பயன்படுத்தும் முன்னர் வாக்களியுங்கள்!
அரசு விடுமுறை அளித்துள்ளது பொழுது போக்கிற்காக அல்ல! கடமையாற்றுவதற்காக என்பதை உணரந்து வாக்களியுங்கள்!
வாக்கு விற்பனைக்கானது அல்ல என்பதை உணர்ந்து பணப்பயனோ பிற பயனோ பெறாமல் வாக்களியுங்கள்!
ஒரு வேளை முன்னரே பெற்றிருந்தால் அதனை விலைத் தொகையாகக் கருதாமல் தண்டத் தொகையாகக் கருதி மனச்சான்றின்படி வாக்களியுங்கள்!
ஆராய்ந்து பாராமல் நம்பிக்கை வைத்து நாம் தேர்ந்தெடுததால் நம் வழிமுறையினருக்கும் துன்பம் தரும் என்பதை உணர்ந்து நலல வழிகளில் ஆராய்ந்து நல்லோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எனவே, வாக்களிக்கும் கடமையைத் தவறாமல் ஆற்றுங்கள்!
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 508)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை -அகரமுதல
No comments:
Post a Comment