அகரமுதல
இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில்
வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்!
உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. எனினும் ஆற்றல் குறைந்த வெடி குண்டு என்பதால் உயிரிழப்பு எதுவும் இல்லை.
தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 359 பேர் பலியாகிவிட்டனர். எண்ணிக்கை உயரும் என்ற அச்சமும் உள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் பண்டுவம் பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, நெதர்லாந்து, ஆத்திரேலியா, இசுபெயின், சுவிட்சர்லாந்து, துருக்கி நாட்டவர்களும் இருபத்தேழுபேர் வெடிகுண்டுகளால் பலியாகியுள்ளனர். வங்கதேசம், சீனா, சப்பான், போர் த்துக்கல் நாட்டவர்கள் காயமுற்றிருக்கலாம். பலியானவர்களில் பத்தில் ஒன்பதுபேர் இலங்கை, ஈழத்தைச் சேர்ந்தவர்களே! இவ்வாறு பி.ஒ.நி.(பி.பி.சி.) தெரிவித்துள்ளது.
இத் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் எச்சமயத்தவராக / எவ்வினத்தவராக / எம்மொழியினராக / எந்நாட்டவராக இருந்தாலும் அவர்களின்குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவிக்கிறோம். மருத்துவமனைகளில் இருப்போரும் விரைவில் முழு நலம் பெற்று அவரவர் இல்லம் திரும்புவார்களாக!
இந்தியாவில் இருந்து எச்சரிக்கை அனுப்பியும் இலங்கை அரசு தொடர் வெடிகுண்டுத் துயரத்தைத் தடுக்க முயலவில்லை. தமிழ்நிலங்களில்தானே குண்டு வெடிப்பு நிகழும் என அமைதி காத்ததா எனத் தெரியவில்லை. எனினும் இதன் பின்னர்த் திறமையாகச் செயல்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பான்மையர் தமிழ்மக்கள்தாம். சிங்களவர்கள் இறந்திருந்தால் விடுதலைப்புலிகள் அல்லது தமிழ்ப் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டதாகக் கூறி உலக ஆதரவைப் பெற்றிருக்கும். இப்பொழுது அவ்வாறு சொல்ல முடியாது. நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசிற்கு நூற்றக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்துப் பெருங்கவலை எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் ஆட்சிக்கு அவப்பெயர் என்பதால் எச்சரிக்கையாகச் செயல்பட்டு இறந்தவர்கள் இனம் அல்லது நாடு குறித்த செய்தி வெளிவராமல் பார்த்துக் கொண்டது.
இசுலாமிய அரசு என்னும் அமைப்பு கொடுநிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்றுள்ளது. தற்கொலைப்படைஞர் எழுவர் கொண்ட குழுப்படமும் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசும் காரணமானவர்களாகச் சிலரைக் கைது செய்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அவர்களால் இசுலாமியர அனைவருக்குமே இடர்ப்பாடு நேரலாம். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது எங்கு எப்பொழுது நேர்ந்தாலும் கொடுமைதான்.ஆனால், தம் சமயம் சார் ஓர் இறை மீது நம்பிக்கை உள்ளவர்கள் பிற சமயத்தவர் தம் இறைவனை வணங்கும் இடத்தில் வணங்கும் பொழுது கொல்வது கொடுமையல்லவா?
ஆட்சி நிலைப்பிற்காகவும் நெருக்கடி நிலை கொண்டுவரவும் ஆள்வோரே இதற்குக் காரணமாக இருக்கலாம் அல்லது பக்சே காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் பலரிடம் எழுந்தது. ஆனால், படைத்துறை உயர் அதிகாரிகளும் காவல்துறை உயர் அதிகாரிகளும்தான் காரணம் என அரசு கூறியுள்ளது. எனவே, பாதுகாப்புத் துறைச் செயலர் முதலான முதன்மை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். பாதுகாப்புத் துறைச் செயலர் எமசிரி ஃபெர்னாண்டோ மட்டும் இதுவரை பதவி விலகியுள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதி விசித்து மலால்கோடா தலைமையில் முன்னாள் காவல்துறைத் தலைவர் என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலர் பத்மசிறி செயமன்னே ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். இக் குழு விரிவான விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இசுலாமியர்களுக்கும் பிற சமயத் தமிழர்களுக்கும் மோதல் நடப்பதுபோலோ இசுலாமியர்களுக்கும் பெளத்தர்களுக்கும் மோதல் நடப்பதுபோலோ, இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே மோதல் நடைபெறுவது இல்லை. மேலும், நியூசிலாந்து பள்ளிவாசல் வெடிகுண்டு நிகழ்விற்குப் பழி தீர்ப்பதாக இருந்தால் ஏதேனும் கிறித்துவ நாட்டில்தானே பழி வாங்கியிருக்க வேண்டும். பெளத்த நாட்டில் ஏன் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய வேண்டும்? தமிழ்க்கிறித்துவர்கள் கூடும் இடமாக ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? வெவ்வேறு மாநிலங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்துகிறார்கள் என்றால் பெரும் சதி வலைப்பின்னலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை / படைத்துறை/ காவல் துறை/ உளவுத் துறை முதலானவற்றில் பணியாற்றுவோர் தொடர்பு இல்லாமலும் ஆட்சியில் உள்ள சிலரின் ஒத்துழைப்பு இல்லாமலும் செய்திருக்க முடியாது என மக்கள் எண்ணுகிறார்கள். மேலும், சிங்கள மக்களிடையேயும் பாதுகாப்பின்மை, அச்சம், அமைதியின்மை முதலான கவலைகளையும் பதற்றத்தையும் இக்கொடும் துயர நிகழ்வு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, தீவின் முழு நலன்கருதி இக் குழு நடுவு நிலைமையுடன் செயல்பட்டு அஞ்சாமல் உண்மையை வெளிக் கொணர வேண்டும் என்று வேண்டுகிறோம்.
புலன் உசாவலில் ஈடுபடும், அல்லது சிங்கள அரசிற்கு ஒத்துழைக்கும் பிற நாடுகளும் உண்மையை வெளிக் கொணருவதில் கருத்து செலுத்தித் தமிழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
பலியானவர்களின் துயர் துடைப்புப்பணிகளிலும் உடனடியாகக் கூடுதல் கருத்து செலுத்த வேண்டும்!
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு. (திருவள்ளுவர், திருக்குறள் 470)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
No comments:
Post a Comment