Wednesday, February 8, 2017

நம்மைக்காக்கவேனும் உழவர்களைக் காப்பாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

நம்மைக்காக்கவேனும்

உழவர்களைக் காப்பாற்றுங்கள்!

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை (திருவள்ளுவர், திருக்குறள் 1036).
  இந்தியா முழுமையும் வேளாண்பெருமக்கள் தற்கொலை புரிவது என்பது தொடர்நிகழ்வாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் முதன்மைக் கருத்து செலுத்தி வேளாண் பெருமக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.
  வேளாண் பெருமக்கள்  சொல்லொணாத் துயரத்தில்  மூழ்குவதும் மடிவதும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நிகழ்வதும் வழக்கமாக உள்ளன. காவிரியாற்றுச் சிக்கல், முல்லை-பெரியாற்றுச் சிக்கல் என அண்டை மாநிலங்களினால் உருவாகும் சிக்கல்களும் மத்திய அரசின் பாராமுகமும் இவற்றுக்கான காரணங்களில் அடங்குகின்றன.
   உழவர்கள், எலிக்கறி உண்ணல், மண்ணில் புதைந்து போராடல் முதலான பலவகைப் போராட்டங்களை நடத்தியும் அவர்களுக்கு விடிவு இல்லை. வறட்சி மாநிலமாக அறிவிக்க அவர்கள் கோரிய வேண்டுகோளை ஏற்றுத் தமிழக அரசும் தொடர்ந்து புதுவை அரசும்   வறட்சி மாநிலங்களாக அறிவித்தும் தொடர் நடவடிக்கை செம்மையாய் அமையாமையால் தற்கொலைகளுக்கு  முற்றுப்புள்ளி இல்லாமல்   போய்விட்டது.
  வேளாண்தொழிலை நலிவடையச் செய்யும் மணற்கொள்ளை, நிலக்கவர்வு முதலான சிக்கல்கள் தொடரும்வரை பயிர்த்தொழில்  அழிந்து வருவதைத் தடுக்க இயலாது என்று தெரிந்திருந்தும் நிலையான செயற்பாடுகள் எதுவும் இல்லை. உழவர்பெருமக்களுக்கான இழப்புகளை ஈடு கட்டும் அளவிற்கு எந்தப்பொருளுதவியும் அளிக்கப்பட வில்லை.  மிகக்குறைந்த அளவாகக் காணிக்கு(ஏக்கருக்கு) உரூபாய் ஐயாயிரம் அளவில் தரப்படும் இழப்பீடும் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதுதான். இயல்பாகவே பெறக்கூடிய எந்த உதவியும் வழங்கப்படவில்லை.
   மறைந்த முதல்வர் செயலலிதா சிறைப்பட்டபொழுதும் காலமான பொழுதும் இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்த அதிமுக உழவர் பெருமக்களுக்கும் வழங்க முன்வரவில்லையே! அரசு உதவியுடன் ஆளுங்கட்சியும் ஆளுங்கட்சியாக இருந்த எதிர்க்கட்சியும் கட்சி அளவிலும் தனிப்பட்ட  அளவிலும் பொருளுதவி அளித்திருக்கலாம். அரசுப்பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அரசுப்பொறுப்பை  விரும்புபவர்களுக்கும் உழவர்களின் துயரங்களைத் துடைக்கும் மனமில்லாதது வருத்தத்திற்குரியதே!
  உழவர்கள் செயல்படாவிட்டால், முற்றும் துறந்த முனிவர்களும் வாழ இயலாது என்னும் பொழுது நாம் எங்ஙனம் வாழ இயலும்?
  எனவே, உழவர்களின் தனிப்பட்ட சிக்கலாக இவற்றைப் பார்க்காமல், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வுச் சிக்கலாகப் பார்த்து அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து  உழவர்களையும் உழவையும் காப்பாற்ற வேண்டும்.
   தமிழ்நாடு, புதுவை அரசுகளும் மத்திய அரசும் உயிர்துறந்த, உயிரிழந்த உழவர் பெருமக்கள் குடும்பத்தினரின் வாழ்வியல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 எந்தச் சிக்கலுமின்றி, இயல்பாக உழுதொழில் நிகழும் வரையில், வேளாண்குடி மக்களுக்கு எல்லா வகை உதவிகளையும் அளிக்க வேண்டும்.
நம்மை அழிவிலிருந்து காக்க,  உழவர்களை அழிவிலிருந்து காப்போமாக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 171, தை 16, 2048 / சனவரி 29, 2017

No comments:

Post a Comment

Followers

Blog Archive