முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா?


  அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக  ஆட்சிகவிழும்;   தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார்.
  பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும் இறுதியில் அவ்வாறு எதுவும் நிகழாது எனத் தாலின் தெரிவித்தார். இப்பொழுது் தேர்தல் நடைபெற்றால், திமுக வெற்றி பெறும் என்றும் தாலின் முதல்வராவார் என்றும் செய்திகள் சொல்லப்பட்டன.
  இச்சசூழலில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்பொழுது வன்முறைக்கு வித்திட்டதேன்? அவரது முதிர்ச்சியான போக்கு  ஏன் தடுமாறியது? என மக்கள் வினவுகின்றனர்.
  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கை கட்டிக்கொண்டு அமைதி காத்த பொழுது திமுக ச.ம.உறுப்பினர்கள், பன்னீர் செல்வத்துடன் இணைந்து மக்களாட்சி மாண்பினைக் குழிதோண்டிப் புதைத்ததேன்?
  பா.ச.க.தான், பன்னீர்செல்வத்தை நம்பி அவரைக் களமிறக்கிப் பின்னாலிருந்து இயங்கியதென்றால், தாலின் ஏன் அவ்வாறு மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கினார்அதிமுகவில் சசிகலாவிற்கு மாற்றாகப் பன்னீர்செல்வத்தையும் நேற்றுப்பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான் போன்ற தீபாவையும் சொன்னார்களே தவிர, தாலினையோ திமுகவையோ யாரும் கூறவில்லையே!
 இதனைப் புரிந்து கொண்டு அமைதி காத்து அதிமுகவின் எதிர்ப்பினை ஒன்றுதிரட்டி வெற்றி காண வேண்டியவர்வெண்ணெய் திரண்டுவரும் வேளையில் தாழியை உடைக்கலாமா? சட்டமன்றத்தைக் கலவரப்பூமியாக மாற்றலாமா? தாலின்,  நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால் என்ன பயன்? அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள்  கை கட்டி வாய்பொத்தி அமைதி காத்த பொழுதாவது சூழலைப்புரிந்துகொண்டு அமைதிக்குத் திரும்பியிருக்கலாமே!
  தன் பக்கம் பேரளவு ஆதரவு உள்ளதாக நம்பிக்கொண்டு பா.ச.க.வையும் நம்ப வைத்த பன்னீர்செல்வ  அணியினர் ஒற்றைப்பட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வரவிற்கே  பெரும்பாடுபட்டுள்ளனர். ஏதோ அவர் கணிசமான உறுப்பினர்களுடன் கட்சியைப் பிரிப்பார், அதில் குளிர் காய்ந்து ஆட்சி அமைக்க உதவுவதுபோல் நாடகமாடி நாமே ஆட்சியை அமைக்கலாம் எனத் தாலின் கருதியுள்ளதாகத் தெரிகிறது.  ஆனால், உண்மையான  நடைமுறை அவ்வாறல்ல என்பதைப்புரிந்து கொண்டபொழுது கனவு கலைந்த அதிர்ச்சியால் அமைதி இ்ழந்துவிட்டார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாசி 04 / பிப்.16 அன்று 15 நாள் காலவாய்ப்பைத் தந்தார் ஆளுநர்; நீண்ட கால வாய்ப்பால் குதிரை பேரம் நடைபெறும்  எனக் கூறிய தாலின் அதனை எதிர்த்துள்ளார். ஆனால், பெருமளவு ஆதரவாளர்கள் தம் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நன்கறிந்த முதல்வர் பழனிச்சாமி இரு நாள்களுக்குள்ளாகவே, நம்பிக்கை வாக்கு வேண்டியுள்ளார்.  இதனை வரவேற்றிருக்க வேண்டிய தாலின் எதிர்த்தது முதல் தவறு.
  வாக்கெடுப்பில் இரு தரப்பிலும் கிட்டத்தட்ட சமநிலை என்பதுபோன்ற  குழப்பம் இருந்ததெனில்,   பேரவைத்தலைவரே கமுக்க வாக்கெடுப்பு முறையைப் பின்பற்றியிருப்பார். அவ்வாறான சூழல் இல்லாத காரணத்தால் வெளிப்படையான வாக்கெடுப்பை  நடத்தியுள்ளார்.  தாலின் அமைதி காத்து, வேறொருநாள் ஆளுங்கட்சியின் நிதி வரைவு(மசோதா) அல்லது முதன்மை வரைவு ஒன்றைத் தோற்கடிக்கச் செய்து அதன் மூலம் ஆட்சி கலையுமாறு செய்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், இதுவரை அமைதி காத்தது நடிப்பே என்று எண்ணும் வகையில்  ஏமாற்றம் தாங்காமல்   சட்டமன்றத்தின் அமைதி குலையக் காரணமாக இருந்தது சரிதானா?
  கைக்கெட்டும் நிலயில் இருப்பதாகக் கருதப்பட்ட ஆட்சி அதிகாரத்தை  அவசரச் செயலால் எட்டாத் தொலைவிற்குத் தள்ளிவிட்டாரே என இவருக்குச் சார்பாகப் பேசியவர்களே இப்பொழுது கூறுமளவிற்கு நடந்து கொண்டார்.
  மேலும், எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது செல்லாது என்று  எதிர்க்கட்சியினர் சொல்வதும் தவறாகும். அதிமுகவில் பிளவு உண்டாக்கத் துணை போவது பன்னீர்செல்வம் அணிதான். அந்த அணி  பேரவையில் இருக்கும்பொழுதுதான் வாக்கெடுப்பு நடந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் 11 வாக்குகளும் பதிவாகியுள்ளன  இந்த எண்ணிக்கை சட்டமன்ற மொத்த உறுப்பினர்களின் (234-1) எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டது. எனவே, வெளியேற்றப்பட்ட, அல்லது வெளியேறிய அனைவரும் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் ஆதரவு எண்ணிக்கையை விட மிகுதியான எதிர்ப்பு எண்ணிக்கை வராது என்பது  உறுதியாகிறது. எனவே,  எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றமரபுப்படியான நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு வாக்கு வெற்றி பெற்றுள்ளார் என்பதே உண்மையாகும். பிற செய்திகள் யாவும் இதனைப் பொறுக்கமாட்டார் கூறுவனவாகுமேயன்றி உண்மையாகாது.
  பொதுவாகச் சட்டமன்றத்தில் அமளி அல்லது கலவரம் நிகழும் பொழுது இரு பிரிவினரும் ஈடுபட்டிருப்பர். ஆனால், ஒருவரை மற்றொருவர் குறை சொல்வர். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின்பொழுது் திமுகவும் பன்னீர்செல்வம் அணியும் சட்டம் ஒழுங்கிற்குக்  குந்தகம் ஏற்படுத்திய பொழுதும் அதிமுகவினர்  அமைதி காத்தனர்.  பேரவைத்தலைவர் மாண்புமிகு தனபால் அமைதிகாக்கப் பன்முறை வேண்டுகோள் விடுத்தும் பயனின்றி அவர் தாக்கப்பட்டதும் அவரது உடைமைகள் பாழ்படுத்தப்பட்டதும் நிகழ்ந்துள்ளன. ஆனால்,  போராட்டக் களத்தில்   ஈடுபட்டவர்கள்பற்றி ஒன்றும் சொல்லாமல்,  அரசினைக்  குறை கூறுவதும் விதிமுறைக்கு மாறாக மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்பதும் ஏனென்று தெரியவில்லை.  6 திங்களேனும் ஆட்சியின் செயல்பாடுகளைக் கவனித்து அதன்பின்னர் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை எடுப்பதே சிறப்பாகும்.
 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
 தகுதியான் வென்று விடல்(திருவள்ளுவர், திருக்குறள் 158)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 174, மாசி 07, 2048 / பிப்பிரவரி 19, 2017