காலந்தோறும் தமிழ்  வரிவடிவம்!


  எந்த மொழியாக இருந்தாலும் காலந்தோறும் வளர்ச்சிநிலையை அடைவதே இயற்கை. தமிழ்மொழியும் அத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்ததே. இருப்பினும் தொல்காப்பியத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளர்ச்சி நிலையைத் தமிழ் எட்டிவிட்டது. மக்களினம் தோன்றிய இடம், கடல்கொண்ட பகுதியும் சேர்ந்த தமிழ்நிலம். மக்கள் தோன்றிய பொழுது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் செய்கையைப் பயன்படுத்தி, அதன் பின்னர், ஓவிய உருக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு வளர்ச்சிகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு என்பதை முறைப்படுத்திய காலத்தில் தமிழ்வரிவடிவம் அறிவியல் முறையில் அமைந்து விட்டது. எனவே, தமிழின் வரிவடிவ வளர்ச்சியை நம்மால் கணிக்க இயலாது. அதன்பின்னர் மிக மிகச் சிறிய மாற்றங்கள்  ஏற்பட்டிருப்பினும் அவை வரிவடிவங்களைக் குலைக்காத அளவில் உள்ளன. ஆனால், தமிழ்வரிவடிவ வரலாறு என்றும் தமிழ்வரிவடிவ வளர்ச்சி என்றும் தவறான அட்டவணைகள் உலா வருகின்றன. இவ்வாறு, தமிழ் மொழியில் காலந்தோறும் வரிவடிவ மாற்றம் ஏற்பட்டது எனக் கூறப்படும் தவறான கருத்துகள் குறித்துக்  காண்போம்.
  தமிழ்வரிவடிவச்சிதைவுகள், சிதைவு முயற்சிகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். இதுகுறி்த்துப் பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன்.  இங்கு அவைபற்றிக்  கூறவில்லை. வரலாறு என்ற பெயரில் தமிழ்வரிவடிவ நெடுங்கணக்கில் இடம் பெறாதவைபற்றிப் பரப்பி வருவதைத்தான் குறிப்பிட விரும்புகின்றேன்.
  பொதுவாகவே, காலந்தோறும் தமிழ்வரிவடிவங்கள் மாற்றமுற்று வருவதாகப் பெரும்பாலும் கல்வெட்டுகளில் இடம் பெறும் வரிவடிவங்களைக் காண்பிக்கின்றனர். தமிழ்  இலக்கியங்களும் பிற செய்திகளும் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டு வந்திருக்கின்றன.  ஆனால், ஓலைச்சுவடிகளில் கல்வெட்டுகளில் உள்ளனபோன்ற எழுத்துவடிவ மாற்றங்களைக் காண இயலாது.
  தனக்கெனச் சொந்த எழுத்து வடிவங்கள் கொண்டிராத, சமக்கிரும், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு,  செருமானியம் முதலான பிற மொழிகளை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்குச் சொந்த வடிவம் இல்லாத பொழுதும் வரிவடிவச் சிதைவுகளை அம்மொழியினர் உண்டாக்க வில்லை. ஆனால், வரிவடிவங்களின் தாயான தமிழ்மொழியில் அறிவியல் முறையில் அமைந்துள்ள வரிவடிவங்களை நாம் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழித்துக் கொண்டிருக்கிறோம்.
  தமிழ்நூல்களில் தமிழ்க்கட்டுரைகளில், தமிழ்இணையப் பதிவுகளில், அரசு நிறுவனமான தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் படிப்புசார் கட்டுரைகளில் என எங்கு பார்த்தாலும் தமிழ் வரிவடிவம் காலந்தோறும் மாற்றமுற்ற வந்துள்ளது எனப் பின்வரும் தவறான  அட்டவணையைக் காட்டுகின்றனர்.
    இன்னும் பலர், “திருவள்ளுவர் இன்று உயிருடன் வந்தால் அவருக்குத் தமிழ் ஓரளவு புரியும்- ஆனால் தமிழ் எழுத்து அவருக்கு விளங்காது. ஏனெனில் எழுத்து உருமாறிப் போனது” (தமிழ் ஒரு அதிசய மொழி! , இலண்டன் சுவாமிநாதன் ) என்றும் திருவள்ளுவர் வந்தால் இன்றைய திருக்குறளைப் படிக்கமுடியாமல் விழிப்பார் என்றும் எழுதியும் பேசியும் வருகின்றனர். ஆனால், திருவள்ளுவரோ, சங்கப்புலவர்களோ, தொல்காப்பியரோ, அவருக்கு முந்தைய புலவர்களோ வந்தால் இன்றும் அவர்களால், அவர்கள் கால இலக்கியங்களையும் இக்கால இலக்கியங்களையும் படிக்க இயலும். ஏனெனில் மிகச்சில மாற்றங்கள் தவிர, நம் தமிழ் மொழியின் வடிவங்களில் எவ்வகை மாற்றமுமில்லை. எனவேதான்  இலக்கண  நூலார், “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” (நன்னூல் : எழுத்ததிகாரம்: 5  உருவம்: நூற்பா 95 – இலக்கண விளக்கம் எழுத்தியல்: நூற்பா 23) என்றனர். அஃதாவது தமிழ் வரிவடிவங்கள் தொன்றுதொட்டு ஒரே வடிவமுறையில் இருக்கின்றன.
  கல்வெட்டு எழுத்துகளில் மாற்றங்கள் உள்ளனவே எனலாம். கல்வெட்டு  எழுத்து வடிவங்கள் இன்றைய  சுருக்கெழுத்து வடிவங்கள்போன்றவை என்பார் பேராசிரியர் சி.இலக்குவனார். சுருக்கெழுத்து மொழியாகாது என்றும் கூறுவார்.  தமிழகம் வந்த பிற மொழிக்காரர்களை  வாழ  வைப்பதற்காகவே  கல்வெட்டுகளில் பொறிக்கும் வேலைகளை அவர்களுக்கு மன்னர்கள் கொடுத்துள்ளனர்.
  கல்வெட்டுகளில் இடம் பெறுவனவே நம் எழுத்துகள் என்றால், காலந்தோறும் மக்கள் பயன்பாட்டில் இருந்த ஓலைச்சுவடிகளிலும் மாற்றங்கள் இருந்திருக்க வேண்டுமல்லவா? ஓர் ஓலைச்சுவடியிலாவது கல்வெட்டு முறை எழுத்துகளைக் காண இயலுமா? இயலாதே!
  கல்வெட்டு எழுத்துகள்தாம் மக்கள் நடைமுறையில் இருந்தன  வென்றால், தொல்காப்பியம் முதலான நம் இலக்கியங்கள் பல்வேறு எழுத்துவடிவுகளில்தானே இருந்திருக்க வேண்டும். ஒரு நூற்றாண்டு எழுத்துவடிவங்களைப் புரியாமல்  அடுத்த நூற்றாண்டுகளில் படிஎடுக்காமல் விட்டிருப்பார்களே! வழிவழியாகப் படியெடுத்துக் கிடைக்கப்பெற்றுள்ள மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தின் ஓலைச்சுவடியை நம்மால் படிக்க முடிகிறது என்றால் இன்றைய எழுத்து முறை என்பது பண்டுதொட்டே பயன்பாட்டில் இருந்து வரும் நடைமுறை என்றுதானே பொருள்.
  தொல்காப்பியர் தமிழ் எழுத்து வடிவங்கள் குறித்துத் தனியே விளக்காவிட்டாலும் மெய்யெழுத்துகள் மேல் புள்ளி இருக்கும்  என்பதை,
மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்
என்னும் நூற்பா மூலம் விளக்குகிறார்(தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 15).
  தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இன்றுவரை நாம் மெய்யெழுத்துகளின் தலைப்பில் புள்ளி இடுகின்றோம். ஆனால், கல்வெட்டுகளில் அத்தகைய வடிவம் இல்லை. இதிலிருந்தே பயன்பாட்டுத் தமி்ழ் வரிவடிவங்களுக்கும் கல்வெட்டில் உள்ள வடிவடிவங்களுக்கும் தொடர்பில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  இதற்கு மற்றொரு சான்றாக, ஆய்த எழுத்துபற்றிய விளக்கத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
ஆய்தமென்ற
முற்பாற் புள்ளி (தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 2).
என்கிறார் தொல்காப்பியர். அவரது காலத்திற்கு முன்பிருந்து இன்று வரை நாம் ஆய்த எழுத்தை மூன்று புள்ளி வடிவில்தான் குறிப்பிடுகின்றோம். ஆனால், கல்வெட்டுகளில் இத்தகைய வரிவடிவத்தைக் காண இயலவில்லை. மேலும்,  கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து, கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரை இகரம் முப்பாற்புள்ளியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, இதுவும்  கல்வெட்டு வரி வடிவங்களுக்கும் பயன்பாட்டுத் தமிழ் வரிவடிவங்களுக்கும் எத்தகைய தொடர்புமில்லை என்பதை விளக்குகின்றது.
  அறிஞர்கள் சிலரும் கல்வெட்டு வரிவடிவம்பற்றித் தவறான முடிவிற்கு வந்ததன் காரணம், சமற்ககிருதம்பற்றிய தவறான கருத்துகள் பரப்பபட்டுவந்தமையை உண்மை என நம்பியதுதான். தமிழறிஞர்கள்போன்று அவர்களும் தவறான கருத்துகளைக் கூற மாட்டார்கள் என்று நம்பினர். காலம் செல்லச்செல்லத்தான் சமக்கிருதம் பற்றிய தவறான கருத்துகள்  பலவும் புரிய வந்தன.
  சான்றாக இராமாயணம்பற்றிய தவறான காலக்குறிப்புகளைக் கூறலாம். இராமாயணத்தில் புத்தமடம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. எனவே, புத்தர் காலமான கி.மு.6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதே இராமர்காலம் என்பது தெளிவாகின்றது. ஆனால், இராமன் கி.மு. 1500  இலிருந்து கி.மு.15000 வரை வாழ்ந்ததாகத் தவறான  காலப்பதிவுகளை ஆரியர்கள் பரப்பிவிட்டனர்.
 இவற்றின் அடிப்படையில் தமிழைப்பார்த்துத் தன் வரிவடித்தை உருவாக்கிக்கொண்ட சமற்கிருதத்தை மூத்த மொழியாகக் கருதி, அதறகேற்பத் தமிழ்வரிவடிவங்கள்பற்றிய தவறான முடிவிற்கும் வந்தனர்.  எனவே,, அவர்கள் கண்டஆய்வு முடிவு  தவறாகிப் போனதில் வியப்பில்லை. காலந்தோறும் எழுத்துவடிவம் மாறி வந்ததாகக் கல்வெட்டு அடிப்படையில் கூறப்படும் தவறான கருத்துகளை மெய்யென்று நம்பியதால், தமிழ் வரிவடிவங்களை மேலும் மாற்றலாம் என்று சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கல்வெட்டு மூலமான தமிழ்வரிவடிவ வரலாற்றைக் குப்பையில் போடுவதே  தமிழுக்குச்  செய்யும் தொண்டாகும்.
  தமிழ்மீதும் உண்மைமீதும் அன்பும்  நம்பிக்கையும் கொண்டவர்கள், கல்வெட்டு மூலமான வடிவ வரலாற்றினைப் பரப்பாமலும் அதன் உண்மையை வெளிக்கொணர்வதிலும் கருத்து செலுத்த வேண்டும்.
எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்இரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 392)
ஆதலின்,  தவறான வரிவடிவ  வரலாற்று  மாயையில்இருந்து விடுபட்டும், எழுத்துச் சிதைவுகளை விரட்டியடித்தும்
எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்!
இனத்தைக் காப்போம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், ‘அகரமுதல மின்னிதழ்
காலந்தோறும் தமிழ்
பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை
பக்கங்கள் 568- 571