Thursday, February 9, 2017

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்! - இலக்குவனார் திருவள்ளுவன்





இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்!

  அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்குக் காரணம் பா.ச.க.தான். சேகர்(ரெட்டி) வழக்கு முதலானவை மூலம்  ஒதுங்க நினைக்கும் பன்னீர்செல்வத்தையும் மிரட்டிப் பொங்க வைத்துள்ளது. கரூர் அன்புநாதன்வழக்கு முதலானவை மூலம் நத்தம் விசுவநாதன் போன்றவர்களைப் பன்னீர்ப்பக்கம் நிற்க வைக்கிறது. பன்னீரைக் காட்டிச் சசிகலாவை மிரட்டிப் பணிய வைக்க முயல்கிறது. எனவேதான், பெரும்பான்மையரைச் சசிகலாவிற்கு எதிராக அறிக்கைகள் விடச்செய்தும் சிலரைச் சசிகலாபக்கம் நிற்க வைத்தும் நாடகமாடுகிறது பா.ச.க.

  இப்போதைய சூழலில் சசிசலா பக்கம் பா.ச.க. சாய்ந்தால் பன்னீர் அரசியலில் ஒதுக்கப்படுவார். மாறாக அக்கட்சி  பன்னீர் பக்கம் நின்றால் அ.தி.மு.க. உடையும். சசிகலாவும் பன்னீரும் தங்களுக்குள் அடித்துக்கொள்வதன் மூலம் பா.ச.க.விற்கான வாயிலைத் திறக்கின்றனர். இப்பொழுது தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. தோல்வி்யைத் தழுவும். ஆனால் சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்றால், மக்கள் செல்வாக்கைப் பெற மேற்கொள்ளும் நலத்திட்டங்களால் அவர்மீதான வெறுப்பு மறைந்து சார்பான சூழல் ஏற்படும். இதனைப் பா.ச.க. விரும்பவில்லை. எனவேதான் பன்னீரைவைத்துச் சசிகலாவை மிரட்டுகிறது.
  எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் மத்திய அரசும் பா.ச.க.வும் பின்னணியில் இல்லை என அ.தி.மு.க. மறுத்தாலும் உண்மை அதுதான்.

 திடீர்த்தேர்தலுக்கு வழி வகுத்து வீண் செலவு ஏற்படுவதைவிட,  அ.தி.மு.க.வினர் ஒதுங்கித் தி.மு.க. ஆள்வதற்கு வழி விடட்டும்!  பேராயக்கட்சி(காங்கிரசு)க்கு எதிரான நிலைப்பாட்டில்தான் அவர் உள்ளார். எனவே, பேராயக்கட்சி(காங்கிரசு) உடன் இணைந்து  ஈழத்தமிழர் படுகொலையில் பங்கு வைத்த பாவத்தை மன்னித்துத் தி.மு.க.விற்குப் பாவ மன்னிப்பு வழங்கினால் தாலின் நல்லனவே செய்வார் என  எதிர்நோக்கலாம்.  தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அவரே கலைஞர் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தை அடக்கி விடுவார். ஆதலின், அ.தி.மு.க.வினர் பிளவுபட்டு ஆட்சியை இழந்து பா.ச.க.விற்கு வழிவிடுவதைவிடத் தி.மு.க.விற்கு விட்டுக் கொடுக்கலாம்.

  தமிழ்நாட்டின் முதன்மைக்கட்சிகள் யாவும் பா.ச.க.வின் அடிவருடிகளாகத்தான் உள்ளன. இருப்பினும் சட்ட மன்றத்தை முடக்கி வைப்பதன் மூலம் அல்லது குடியரசுத்தலைவர் ஆட்சி மூலம் பா.ச.க. ஆள வழிவகுப்பது  தமிழ்நாட்டைப் படுகுழியல் தள்ளுவதாகும். எனவே, சசிகலாவும் பன்னீரும்  தி.மு.க. ஆளும் வாய்ப்பபைப் பெறும் வகையில் ஆட்சி அமைக்கும் உரிமையைக் கோராமல் இருக்கலாம். நம்பிக்கை வாக்கெடுப்பில் இவர்கள் நடுநிலை வகித்தால் தி.மு.க.தான் வெற்றி பெறும்.  

  தி.மு.க. ஆள்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம் என இவர்கள் எண்ணினால், சசிகலாவும் பன்னீரும்  சந்தித்து இணக்கமாகப் போக வேண்டும். பலவகையாக எதிர்த்துக் குரல் கொடுத்து விட்டு எப்படி இணைந்து செயலாற்றுவது என எண்ணத் தேவையில்லை. அரசியலில் இதுவே இயற்கை என்பதை அவர்களும் அறிவார்கள்.; மக்களும்அறிவார்கள்.

  கலைஞரை நாக்கூசப் பேசியவர்கள் எல்லாம் மீண்டும் அவர் தலைமையை  ஏற்றுத் தி.மு.க.வில் இணைந்துள்ளார்கள். அவரும் அவர்களுக்குப் புதுவாழ்வு அளித்துள்ளார். இதுபோல் செயலலிதாவை இழி்வாகக் கூறியவர்களையும்  அவர் மன்னித்து ஏற்று மறுவாழ்வு அளித்துள்ளார். எனவே, இப்போதைய ஏச்சுகளை மறந்துவிட்டு இருவரும் சந்தித்துப்பேசி இணைந்து செயலாற்றித் தங்கள் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வைக் காப்பாற்ற வேண்டும்.

  இதற்குப் பிற மூத்ததலைவர்கள் முயலலாம். அல்லது  அரசியல் ஞானி முனைவர் ம.நடராசன் முனையலாம்.

  பதவி விலகல் மடலை ஓ. பன்னீர் செல்வம்  அளித்துள்ளதால் சட்ட மன்ற அ.தி.மு.க.உறுப்பினர்கள் விருப்பத்திற்கிணங்க  வி.கி.சசிகலா என்னும் சசிகலா நடராசன் முதல்வர் பொறுப்பை ஏற்கவும்  பொறுப்பு முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்படவும் இரு தரப்பாரும் இணைந்து அதற்கிணங்கச் செயலாற்றிக் கட்சியின் ஒற்றுமையைக் காக்க வேண்டும். பன்னீர் செல்வம் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதன் மூலம் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

  எனவே, கட்சி நலன் கருதியும் நாட்டு நலன் கருதியும்  சசிகலாவும் பன்னீர்செல்வமும் இணங்கி இ்ரு தரப்பாரையும் ஒற்றுமைப்படுத்தித் தங்கள் கட்சியைக் காக்க வேண்டும். அல்லது கட்சியை அழிவிலிருந்து மீட்க, நாட்டு மக்களுக்கு நிலையான ஆட்சி கிடைக்க இப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தி.மு.க.விற்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும்.

  ஒருவன் தன்னையே விரும்புபவனாயின், தனது நலம் மீது கருத்து செலுத்துபவனாயின் தீய செயல்கள்பற்றி எண்ணவும் கூடாது. ஆதலின் இருதரப்பாரும் தத்தம் நலம்  கருதியாவது  அ.தி.மு.க.வின்   அழிவைத் தடுக்க வேண்டும்; கட்சியில் பிளவு ஏற்படுத்தும் தீய செயல்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

    தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
    துன்னற்க தீவினைப் பால். (திருவள்ளுவர், திருக்குறள் 209)

- இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive