கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு?
சாதி என்பது பழந்தமிழரிடம் இல்லாத ஒன்று.
இன்றோ, ஆரியரால் புகுத்தப்பட்ட சாதி, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கி,
உயிர் பறிக்கும் அளவிற்கு வேரூன்றிய பெருங்கேடாய் மாறிவிட்டது.
சாதிகள் சிலவற்றின் அடையாளமாக இருப்பது பூணூல்.
வீரம் மிகு தமிழர்கள் அம்புறாத்தூணியை அணிந்திருந்தனர். தோளில் அணியும்
அம்புகள் நிறைந்த கூடுதான் இது. இது மூவகைப்படும். இதனைப் பார்த்த
ஆரியர்கள் இதுபோல் முப்புரி நூலை அணிந்தனர். பிராமணர்களின் அடையாளமாக விளங்குவது பூணூலே.
ஆனால், பொற்கொல்லர், தச்சர் முதலான கை வினைஞர்கள் தாங்கள்தான் பிறக்கும்
பொழுதே பூணூல் அணிவோம் என்றும் பிராமணர்கள், குறிப்பிட்ட சடங்கு
செய்தபின்னர்தான் பூணூல் அணிவர் என்றும் பூணூல் தங்களுக்குரியதென்றும் கூறி
வருகின்றனர். மேலும் தாங்கள் ஆச்சாரி என அழைக்கப்பட்டதாகவும் இராசாசி,
இராசகோபால்ஆச்சாரியார் என அழைக்கப்படுவதற்காகத் தங்களை ஆசாரி என்று
மாற்றிவிட்டனர் என்றும் கூறுகின்றனர்.
ஆசாரி போன்ற சில வகுப்பினர் பூணூல்
அணிந்தாலும் பிராமணர்களின் அடையாளமாகப் பூணூல் விளங்குவதன் காரணம் அவர்கள்
செய்யும் எத்தகைய சடங்கிலும் சடங்கிற்குரியவர்க்குப் பூணூல் அணிவித்தே
செய்வதுதான். திருமணமாயினும் நீத்தார் சடங்காயினும் நம்மைப் பூணூல் அணியச்
செய்யும் பொழுது அவ்வாறு அணிந்தால்தான் நாம் சடங்கிற்கு உரிய தகுதி
பெறுகின்றோம் என்றும் கடவுளின் அருளுக்கு ஆளாகின்றோம் என்றும் கூறி இழிவுபடுத்தும்
பொழுது நாம் அதை எதி்ர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் இழி தகைமை இன்றும் உள்ளது.
திராவிட இயக்கப் பணிகளாலும் தன்மதிப்பியக்கச் செயற்பாடுகளாலும், இந்நிலைமை
ஓரளவு குறைந்துள்ளது.
தங்களை இருபிறப்பாளர்
என்றுகூறிப் பூணூல் அணிந்துகொள்வோர், பிறப்பே அற்ற கடவுளுக்குப் பூணூல்
அணிவிக்கலாமா? இறைவனை இழிவுபடுத்துவதாகாதா?
ஓவியங்களிலும் சிற்பங்களிலும் பூணூல் அணிவிக்கப்பெறாத கடவுளர் உருவங்களே திகழ வேண்டும்!
மூவேந்தர்கள்தாம் ஆரியச் சடங்குகளை
வளரவிட்டதாகச் சிலர் கூறி வருகின்றனர். வேறுபாடின்றி அனைவருக்கும் கொடை
வழங்கும் கொடை மடம் மிக்க தமிழ் வேந்தர்களும் வள்ளல்களும் ஆரியர்கள், தங்களுக்குப் பொன்னும் பொருளும் வேண்டா; வேள்வி செய்து தாருங்கள் என்பதுபோன்று கேட்டமைக்குத்தான் உதவி புரிந்துள்ளனர்.
திருநாவுக்கரசர். “இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும் இளங்கோயில்” எனக் குறிப்பிட்டுள்ளதால், இதுபோல் (இ)ரிக்(கு) வேதம் ஓதும் பிராமணர்கள் தங்களுக்கெனத் தனிக்கோயில் கேட்டதால் வேந்தர் கட்டித்தந்துள்ளதை அறியலாம். எனவே, திருநாவுக்கரசர் காலம் வரையிலும் தமிழ் வழிபாடு இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.
ஆரிய வழிபாடு பெருகியபின்னர், கடவுளர்களையும் ஆரியர்களாகக் காட்டும் போக்கு வந்திருக்கலாம்.
20 ஆண்டுகளுக்குமுன்னர் அப்போதைய
சிற்பக்கல்லூரி முதல்வரிடம் பூணூல் அணியாத கடவுளர் உருவச் சிற்பங்களையும்
ஓவியங்களையும் உருவாக்கச் சிற்பிகளிடமும் ஓவியர்களிடமும் வலியுறுத்தக்
கூறினேன். விற்பனையாகாது என்று அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றார். மக்கள்
பூணூல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவதில்லை என்றும் அவ்வாறு
செய்தால் தொடக்கத்தில் நாமே வாங்கி ஊக்கப்படுத்தலாம் என்றும் மக்களும்
இவற்றை வாங்க முற்படுவர் என்றும் கூறினேன். பின்னர் அவர், சிற்பிகளிடம்
பேசியபின்னர், இரு பிறப்பாளர்களான தாங்கள்தான் கடவுள்களையே படைப்பதகாவும்
தங்ககளைப்போலப் பூணூல் அணிவித்தே சிற்பங்கள் செய்வோம் என்றும் கூறியதாகத்
தெரிவித்தார். பிராமணக் கடவுளர் உருவங்களுக்குக் காரணம் ஆசாரிகளும்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
தமிழ்வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த
இலங்கை, ஈழம்,மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில், இஙகே செல்வாக்குள்ள
பிராமணப் பூசாரிகளை அழைத்து வழிபாடு செய்யும் பழக்கம் பெருகி வருகிறது.
இதனால் தமிழ் வழிபாடு மறைந்து கொண்டுள்ளது. புலம் பெயர் தமிழர்களும் தாங்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறு தமிழ்க்கடவுளர்களை ஆரியக்கடவுளர்கள்போலும் ஆக்கி ஆரிய வழிபாட்டையே இறக்குமதி செய்கின்றனர்.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி இ்டவேண்டும். தமிழ்நாடு எனப்படும் தென்னாட்டவர்க்குரிய இறைவன் தமிழனாகவே காட்சி அளிக்க வேண்டும். தமிழர்கள் தாங்கள்
வாழுமிடங்களில் எல்லாம் தமிழ்வழிபாட்டையே பின்பற்ற வேண்டும். அனைத்து
மக்களையும் சமமாகப் பார்க்கும் கடவுளுக்குச் சாதிக்குறியீடான பூணூலை
அணிவிப்பது கடவுளை இழிவுபடுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரையும் கடவுளர் ஓவியங்களிலும் கடவுளர் சிற்பங்களிலும் பூணூல் அணிவிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் இதனை மக்களிடையே பரப்பி வெற்றி காணவேண்டும்!
நாம் தமிழர்! நம் கடவுளும் தமிழரே!
நம்மொழி தமிழ்! நம்கடவுளின் மொழியும் தமிழே!
நம்மொழி தமிழ்! நம்கடவுளின் மொழியும் தமிழே!
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (திருவள்ளுவர், திருக்குறள் 961)
– இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 173, தை 30, 2048 / பிப்பிரவரி 12, 2017
No comments:
Post a Comment