இதற்குத்தானா
தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே!
தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்த
ஓ.பன்னீர்செல்வம் தை 23,
2048 / பிப்பிரவரி
5, 2017 அன்று தன் முதல்வர் பதவியைவிட்டு விலகி மடல்
அளித்துள்ளார். அன்றே அ.தி.மு.க.
சட்டமன்றக்கட்சியின் தலைவராக வி.கி.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய
நாளில் தமிழ்நாட்டில்தான் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் இருந்துள்ளார். ஆனால், உடனே
தில்லி பறந்துவிட்டார். மத்திய அதிகாரமையத்தால்
மிரட்டப்பட்ட பன்னீர்செல்வம் கட்சியில் தான் மிரட்டப்பட்டதால் பதவி விலகியதாக
அறிவித்தார். இதனால் தமிழ்நாடு குழப்பத்தைச் சந்தித்துள்ளது.
பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு முழுமையான ஆளுநரை
அமர்த்தாத மத்திய அரசு, பொறுப்பு
அலுவரையும் அவர் விருப்பில்
செயல்படவில்லை என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அவர்
உடனடியாகச் சென்னை வந்திருந்தால் பன்னீர்செல்வத்தின் விலகலை ஏற்றதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க.
சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு இணங்க வி.கி.சசிகலாவை முதல்வராகப்
பொறுப்பேற்று அரசை அமைக்க அழைத்திருப்பார். அவ்வாறு அழைக்காத
இடைவெளியில்தான், யாருடைய
இயக்கத்திலோ ஆடும் பன்னீர்செல்வத்தின் நாடகம் அரங்கேறியுள்ளது.
காலந்தாழ்ந்துவந்த ஆளுநர் இரு தரப்பாரையும் சந்தித்துள்ளார். ஆனால், பதவி
விலகலை ஆளுநர் ஏற்றபின்னர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதிலோ இசைவதிலோ விதிகளில்லை.
அவர் மிரட்டப்பட்டதாகக் கூறியது கேட்டு அனைவரும் பொங்குகின்றனர். அவ்வாறு அவர்
அவராக விலகல் மடல் அளித்திருக்காவிட்டால், ச.ம.உறுப்பினர்கள்
தீர்மானம் இயற்றி அவரை நீக்கியிருப்பர். எனவே, மிரட்டல் என்பது கருதக்கூடிய செய்தியல்ல. மேலும், மிரட்டலுக்கு
அடிபணிபவர் நாட்டின் உயர்ந்த பொறுப்பில் எவ்வாறு தற்சிந்தனையுடன் செயலாற்ற இயலும்?
இருப்பினும் அவரை ஆட்சி யமைக்க அழைத்திருக்கலாம்.
அவ்வாறு அழைத்து அவரால் பெரும்பான்மையை மெய்ப்பிக்க
இயலாவிடில் அதே கட்சியைச் சேர்ந்த சசிகலாவை எவ்வாறு ஆட்சியமைக்க அழைக்க இயலும்? எனவே, அடுத்த
பெரிய கட்சியான - ஒரே வலிமையான
எதிர்க்கட்சியான தி.மு.க.வைத்தான் ஆளுநர் அழைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.
அதற்கான மனம் வருவதற்கான காலம்
கனியவில்லைபோலும்!
அல்லது அவரை ஆட்சியமைக்க அழைக்கும் பொழுது அவர்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அ.தி.மு.க.அறிவித்தால், சட்டச்சிக்கல்
ஏற்படும்.
அல்லது அ.தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர்கள்
தெரிவிற்கிணங்க வி.கி.சசிகலாவை அழைத்திருக்கலாம். அதுவே முறையுமாகும். அவர்
ஆட்சியில் அமர்ந்தால், எதிர்ப்புகளைச் சமாளித்துவிடுவார்
என்றும் தன் செயற்பாடுகளால் மக்களின் ஆதரவைப் பெற்று விடுவார் என்றும் பா.ச.க.
அஞ்சியுள்ளது. எனவேதான் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை
என்று தோன்றுகிறது.
ஆளுநர் முடிவே இறுதியானது என்றும் பா.ச.க. இதில் தலையிடவில்லை என்றும் பா.ச.க.
அடிக்கடி அறிவித்தாலும், ஒருவரைத்தவிர, அனைத்துப் பா.ச.க.தலைவர்களும் சசிகலாவிற்கு எதிரான
கருத்துகளையே கூறி வருகின்றனர். எனவே, சசிகலாவிற்கு ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு
தரக்கூடாது என்பதுதான் பா.ச.க.வின் உள்ளக்கிடக்கை.
இந்தச் சூழலில் பொறுப்பு ஆளுநர், குடியரசுத்தலைவருக்கும் தலைமையச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும்
அறிக்கை அளித்துள்ளார் எனச் செய்தி வந்துள்ளது. இருவருக்கும் பெரும்பான்மை இல்லை, குழப்பமான
சூழல் உள்ளது, எனவே, 6
மாதக்காலம் சட்டமன்றத்தை இடைநிறுத்தம்
செய்யலாம் என்று கருதினால்தான் அறிக்கை அனுப்ப வேண்டியிருக்கும். யாருக்கேனும் ஆட்சி யமைக்க இசைவு தருவதாயின்
அறிக்கை தேவையில்லையே! இத்தகைய அறிக்கை தருவதற்குத்தான் உரிய அறிவுரைகளைப் பெறக்காலத்தாழ்ச்சி
செய்தாரோ என்று அஞ்சவேண்டியுள்ளது.
“ஊர்
இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்”
என்பதை ஆளுங்கட்சியினர் உணர்ந்து ஒற்றுமை காக்க வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பான்மைச்
சட்டமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்ப்பட்டவருக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம்
வழங்காமல் பெரும்பான்மையை மெய்ப்பிக்கும்
வாய்ப்பை யாருக்கும் வழங்காமல் மறைமுகமாகப் பா.ச.க. ஆட்சி நிலவ வழிவகுக்கும்
எச்செயலிலும் பொறுப்பு ஆளுநர் செயல்படக்கூடாது. பா.ச.க.வும் இத்தகைய
முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.
தாலின் முதலான தலைவர்கள் தெரிவித்துவருவதுபோல், தமிழ்நாட்டில்
அமைதியான நிலையான ஆட்சி அமையவே ஆளுநரும்
மத்திய அரசும் முயலவேண்டும்.
தலைவர் ஒருவர் மறைந்தால் ஏற்படும் இயல்பான குழப்பத்தைப் பயன்படுத்திக்
குளிர்காய முயலக்கூடாது.
செய்தக்க
அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை
யானுங் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், 466)
-இலக்குவனார்
திருவள்ளுவன்
No comments:
Post a Comment