Wednesday, February 15, 2017

ஆளுநரின் சாயம் வெளுத்தது! பா.ச.க.வின் பன்னீர் முயற்சி தகர்ந்தது! - இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநரின் சாயம் வெளுத்தது! பா.ச.க.வின் பன்னீர் முயற்சி தகர்ந்தது!
- இலக்குவனார் திருவள்ளுவன்
  ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடராசன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு வேண்டுதல் விடுத்திருந்தார்.  அப்பொழுது அவருக்கு அவ்வாய்ப்பை ஆளுநர் வழங்கவில்லை. பா.ச.க.வின் அதிமுகவை உடைக்கும் சதியாகத்தான் மக்கள் பார்த்தனர். இருப்பினும் பா.ச.க.வினர் சசிகலா மீது வழக்கு உள்ளதால் ஆளுநர் வாய்ப்பளிக்கவில்லை அவர் தண்டனை பெற்றால் மீண்டும் குழப்பம் ஏற்படும் என்று அமைதி காக்கிறார் என்றனர். ஒரு வேளை இப்படியும் இருக்கலாம் எனப் பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அஃது உண்மையல்ல என்பதை ஆளுநர் மெய்ப்பித்து விட்டார்.

  அதிமுகவினர், தங்கள் சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி க.பழனிச்சாமியைத் தேர்ந்தெடுத்தனர். எனவே, இவருக்கு  ஆட்சியளிக்க வாய்ப்பளிக்க வேண்டி அதிமுக சார்பில் முறையீடு கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பன்னிருவர் ஆளுநரைச்சந்தித்து நேரிலும் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

  இதன் பின்னர் பன்னீர் சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக இல்லாத, ஆனால், பா.ச.க. ஆதரவாளரான இருவர் சந்தித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்கும் உரிமை அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதுதான்  இச்சந்திப்பின் நோக்கம் என்பது அனைவருக்கும் புரிந்ததே!

  எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருப்பினும் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததன் காரணம் என்ன? இரு தரப்பினரும் உரிமை கோருவதால் முடிவெடுக்க இயலவில்லையாம்! இரு தரப்பிலும்  கிட்டத்தட்ட சமநிலை என்று இருப்பின், அவ்வாறு கூறலாம். ஆனால், தன் தரப்பு ஆதரவளார் பட்டியலைக்கூடப் பன்னீர் செல்வததால் அளிக்க இயலவில்லையே!
  இன்றைய நிலையில் தி.மு.க. அல்லது அ.தி.முக.விலிருந்த பிரிந்த பன்னீர் அணி, பிற கட்சியின் ஆதரவின்றி வெற்றி பெற இயலவில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள ஆதரவாளர் எண்ணிக்கை,  ஆட்சி அமைக்கப் போதுமானதாக உள்ளது. இருப்பினும் ஆட்சியாளர்  ஏன்  ஆட்சி அமைக்க அழைக்கவில்லை?

  பா.ச.க.வின் முகவரான மாறியுள்ள பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள அ.தி.மு.க.வினரைத் தன் பக்கம்  இழுத்துவிடுவார் என்ற நம்பிக்கையிலும் அதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவும்தான் ஆளுநர் காலங்கடத்துகிறார் என மக்கள் கருதுகின்றனர்.

  சசிகலா ஆதரவாளர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து குறைகூறி வருகின்றனர். அவர்கள் மீது ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத குறைகளைக் கூறிவருகின்றனர். சான்றாகத் தொலைபேசித் தொடர்பு குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

   1.)அங்குள்ள  சட்டமன்ற உறுப்பினர்களின் அலைபேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு தொடர்பு  கொள்ள இயலாத வகையில் கொடுமைப்படுத்துகின்றனர் 2.) அலைபேசிகள் இயங்கா வண்ணம் தொடர்பு துண்டிப்புகளை(jammer) இயக்கி வருகின்றனர். 3.) அங்குள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அலைபேசிகள் மூலமாகப் பன்னீர்செல்வம்  அல்லது அவரது ஆதரவாளர்களிடம்  இணைப்பில் உள்ளனர். இந்தப்பக்கம் அவர்கள் வந்து விடுவர். 4.) கூவத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதற்காக ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்ததுடன் நேரிலும் சென்ற அழைப்பதாகப் பன்னீர் ஆதரவாளர்கள் தெரிவித்து அங்கு சென்றனர்.  இவற்றிலுள்ள முரண்பாடுகளும் இவர்களுடன் அவர்கள், தொடர்பில் இருந்தால்,  ஏன், ஊடகங்கள் வாயிலாக  வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்ற வினாவும் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு, பன்னீர் ஆதரவாளர்கள், குதிரை பேரங்களில் ஈடுபட்டும் வெற்றி காணஇயலவில்லை என எண்ணுகின்றனர்.

  ஆதரவு  சட்டமன்ற உறுப்பினர்களை  ஒரே இடத்தில் வைத்திருப்பது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல. தமிழ்நாட்டில், பேரறிஞர் அண்ணா மறைவிற்குப்பின்னர் முதல்வராவது கலைஞர் கருணாநதியா? நாவலர் நெடுஞ்செழியனா? என்ற கேள்வி எழுந்தது. கலைஞர் கருணாநதியின்  ஆதரவாளர்கள் பாரிமுனைப் பகுதியில் உள்ள உறைவகம் ஒன்றில் வைக்கப்பட்டனர். இதேபோல் செயலலிதாவா? சானகி இராமச்சந்திரனா? என்ற வினா வந்த பொழுது செயலலிதா ஆதரவாளர்கள் சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லப்படுவதுபோல் ஒரே இடத்தில் இருக்கும் படி வைத்துக் கொண்டனர். இதே போன்ற நேர்வுகளைப் பிற மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பு குறித்த சிக்கல் வரும்பொழுதெல்லாம் நாம் கண்டுள்ளோம். ஒரு வகையில் எதிர்த்தரப்பினரின் பேரங்களுக்குத் தடையாக அமையும் என்ற வகையில் இது வரவேற்கத்தக்கதே! இதனைச் சிறை அடைப்பு போல் கூறுவது தவறு.  நேர்மையற்றவர்கள் மக்கள் சார்பளார்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  பின்னர்,  அவர்கள் நேர்மையான முறையில்மட்டும் கருத்து தெரிவிப்பர் என்பதும் ஐயமே!
 இன்று வெளியான இளையவிகடன்(சூனியர் விகடன்)  இதழில்  கூவத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் என  ஏறத்தாழ முப்பதின்மர் அடைத்து வைப்படவிலலை எனத் தெரிவித்துள்ளனர். காவல்துறைத்தலைவர் (I.G.of Police)  திரு செந்தாமரைக்கண்ணன் உசாவல் மேற்கொண்டு யாரும் அடைத்து வைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 
 இதன் பின்னரும் கூத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்தை ஆதரிக்க முன்வருவர் என்ற ஊகத்தின் அடிப்படையில், பேர வணிகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், ஆளுநர் வித்தியாசாகரும் காத்திருந்து காலந்தாழ்த்துவது மக்களாட்சிமுறையைப் படுகொலை செய்வதற்கு ஒப்பாகும்.  பன்னீர் மூலமாகச் சட்ட மன்ற உறுப்பினர்களை  இழுத்து, இங்கே பா.ச.க. ஆதரவு அரசை அமைக்க மத்திய அரசு முயல்கிறது. எனவேதான், அதன் தமிழ்நாட்டுத் தலைவி மருத்துவர் தமிழிசை, மக்கள் நலன்கருதிச் சட்டமன்ற உறுப்பினர்கள் நல்ல முடிவு  எடுக்க வேண்டும் என்கிறார். அஃதாவது அவர்கள் சசிகலா அணியில் இருந்து  எடப்பாடி பழனிச்சாமியைத் தங்கள்  தலைவராகத் தேர்ந்தெடுத்தது தவறு என்கிறார். பன்னீர்செல்வம் பக்கம் செல்வதுதான் நல்ல முடிவு என்கிறார். இத்தகைய பா.ச.க.வின் தேவையற்ற குறுக்கீடுகள் அதன் வேட்டையாடும் முகத்தை வெளிப்படுத்துகின்றன.

  ஆளுநர், பா.ச.க. போல் செயல்பட்டுப் பன்னீர்பக்கம் ஆதரவாளர்களைப் பெருக்க வாய்ப்பு  கொடுப்பதுபோல் கூடுதல் ஆதரவுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சிஅமைக்க அழைக்காதது தவறேயாகும்.  வேண்டுமென்றே இவர் மீது ஆள்கடத்து வழக்கு தொடுத்துள்ளதால், இதைக் காரணம் காட்டியும் காலந்தாழ்த்தலாம்.
  வெளிமாநிலத்திலிருந்தாலும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வரவேண்டிய  ஆளுநர் வித்தியாசாகர், தமிழ்நாட்டை  விட்டு வெளியே பறந்தது முதல் காலங்கடத்துவது வரை எல்லாமே அவரது நேர்மைக்குக் களங்கம் விளைவிப்பனவாக அமைந்துள்ளன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆதரவு  மடலில் உள்ள கையொப்பங்கள் சரிபார்க்கப்படவேண்டும் என்பது போன்ற  செய்திகள் எல்லாம் நாட்டிற்குக் கேடு விளைவிப்பனவே! அவ்வாறு ஐயம் இருந்தால் ஆளுநர் நேரில் அழைத்துச் சரி செய்ய முடியுமே!

  எனவே, ஆளுநர் வித்தியாசாகர், ஊகத்தின் அடிப்படையில் இனி ஆதரவு பெருகும் என்று கூறும் பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பளிக்காமல், பெரும்பான்மைக்கு மேற்பட்ட  சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும். இப்போது (மாசி 03, 2048 / பிப்பிரவரி 15, 2017/இரவு 8,00மணி)வரை முடிவைக் காலங்கடத்தும்  ஆளுநர் உடனே பெரும்பான்மை ஆதரவு உடையவர்க்கு வாய்ப்பளித்து மக்களாட்சி மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்னும் தமிழ்மக்களின் விழைவை   நிறைவேற்ற வேண்டும்.
துணிந்து முடிவெடுக்க வேண்டும். அதனைச் செயல்படுத்தக் காலந்தாழ்த்துவது குற்றமாகும்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (திருவள்ளுவர், திருக்குறள் 671)
 - இலக்குவனார் திருவள்ளுவன்
  

No comments:

Post a Comment

Followers

Blog Archive