தமிழ் உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப்பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. மக்கள் தோன்றிய இடத்தில் தோன்றிய மொழிதானே உலகமெங்கும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவும் பொழுது காலச்சூழலுக்கும் இடச் சூழலுக்கும் ஏற்ப பல்வேறு மொழிகளாகத் திரிந்தன. அவ்வாறு திரிந்த மொழிகள் பிற திரிந்த மொழிகளுடன் சேர்ந்து மேலும் பலவேறு மொழிகள் தோன்றின. ஆகவே மொழிப்பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் மக்கள் பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் ஒரு மொழியில் இருந்தே பிற மொழிகள் தோன்றின என்பதே உண்மையாகும்.

தமிழ்மொழி இந்நாட்டில் முதல் மொழி; அடிப்படை அமைப்பைத் தந்துள்ள மொழி; ஆரியம் வருமுன் வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாது உருகெழு குமரியின் தெற்கும் உட்பட்ட நிலப்பரப்பில் வழங்கிய தொன்மொழி(பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்)

தமிழ்க்குடும்ப மொழிகள்

தமிழ் மொழியையும் அதன் கிளை மொழிகளையும் திராவிட மொழிகள் என்று சொல்லாமல் தமிழ்க்குடும்ப மொழிகள் என்று சொல்ல வேண்டும் என்பார் செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார்.

இவற்றுள் இந்தியத் துணைக் கண்டத்தில் தென் தமிழ்க்குடும்பப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வட தமிழ்க்குடும்பப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. தென்னாசியா அளவில் தமிழ்க்குடும்பத்தில் 86 மொழிகள் உள்ளன.

 இந்திய மொழிகளின் தாய்

தமிழ்மொழி இந்திய மொழிகளின் தாய் என்று சொல்வதற்குரிய உரிமையும் தகுதியும் உடைய மொழி. (பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்). தமிழை உலக மொழிகளின் தாய் என்றும் பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். மக்களினங்களில் தமிழினம், தொன்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொண்டது. இதனாலேயே தமிழே உலக முதன் மொழி என்றும் உலக மொழிகளின் தாய் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும் என்கிறார் அவர் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்37). எனினும் இங்கே இந்திய மொழிகளின் தாய் என்பதன் காரணம், இந்திய மொழிகளுக்கிடையே தமிழுடன் உள்ள நெருங்கிய தாய்-சேய் உறவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்

தமிழே உலக மொழிகளின் தாய்

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான உலக அறிஞர்கள் பலரும் “தமிழே உலக மொழிகளின் தாய்” என்று நிறுவியுள்ளனர். அவ்வாறெனில் உலகிலுள்ள எல்லா மொழிகளும் தமிழ்க்குடும்ப மொழிகள்தாம். அவற்றில் ஒரு பகுதி நெருங்கிய உறவு மொழிகளாகவும் பெரும்பகுதி உறவாக இருந்து விலகிய மொழிகளாகவும் உள்ளன.

எனினும் தென்னிந்திய நாட்டில் உள்ள தமிழ்க்குடும்ப மொழிகள் தமிழின் சேய் மொழிகளே என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இச்சேய்மொழி பேசுவோர், தங்கள் மொழி தமிழின் சேய் என ஒத்துக்கொள்ள மறுக்கினறனர். தாய் அழகாக இல்லாவிட்டாலும் அறிவாக இல்லாவிட்டாலும் தாய், தாய்தான். ஆனால், வளமும் சீரும் சிறப்பும் உயர்தனிச் செம்மொழித் தன்மையும் உள்ள தமிழின் சேய்மொழி பேசுநர் தமிழின் மக்கள் எனச் சொல்வதை இழிவாகக் கருதுகின்றனர். அதே நேரம் சமற்கிருத மொழியின் சேய் எனக் கூறுவதற்கு மகிழ்ச்சி அடைகின்றனர்.

தொன்மையான மூத்த மொழி தமிழ்

“இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிசித் தீவு, தென்னாப்பிரிக்கா, மோரீசசு, பிரிட்டன், தயானா, மடகாசுகர், திரினிடாட்டு, ஆத்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தொன்மையும், இலக்கண இலக்கிய வளமும் உடைய தமிழ் மொழி பேசப்படுகிறது என்பது மொழி குறித்தான பெருமைகளாகும். தனித்த இலக்கண வளமும், பிறமொழித் தாக்கம் குறைந்தும், திராவிட மொழிகளுக்குத் தாய் மொழியாகவும், சொல் வளமும், சொல்லாட்சி உடையதாகவும் தமிழ் உள்ளது. மேலும், இந்திய அளவில் கல்வெட்டுத்துறையின் ஆராய்ச்சியின் பெரும் பகுதி தமிழில் இடம்பெற்றுள்ளதும் தொன்மையான மூத்த மொழி தமிழ் என்பதும் ஆய்வாளர்களின் பார்வையாகும். தனித்தன்மை மாறுபடாமல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குவதால், பல நூற்றாண்டுகள் கடந்தும் தழைத்தோங்கி விளங்குகிறது. “( முனைவர் வைகைச் செல்வன், முன்னாள் அமைச்சர், தினமணி , 11.02.2019)

திராவிடம் பிற்காலப் பெயர்

தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர்.  திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது.   கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில்  தமிழ்  எனும் சொல் பயின்றுள்ளது.   திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்கிறார் தொல்காப்பிய அறிஞர் முனைவர் சி.இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 279

 “திராவிடக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ். பிற அவற்றிலிருந்து பிறந்தவை அல்ல. திராவிடத்தாயிலிருந்து பிறந்தவை. எனவே, உடன் பிறப்பு மொழிகள்” என்று தவறாகக் கூறி வருகின்றனர். “தமிழ் மொழிக்குத் “திராவிடம்’ என்ற பெயர் பிற்காலத்தில் வந்தது. இந்நாட்டுப் பிறமொழியாளர் தமிழை அங்ஙனம் கூறினர். இன்றைக்கு இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஏரோடட்டசு முதலிய பழைய கிரேக்க ஆசிரியர், இந்நாட்டைப் பற்றிக் கூறியபோது “தமிழ்’ என்னுஞ் சொல்லையே வழங்கி இருக்கின்றனர்.” (சங்கநூற் கட்டுரைகள், பக்கம் 145). அவ்வாறிருக்கும் பொழுது எப்படித் திராவிட மொழியின் பிள்ளைகளாக மொழிகள் இருக்க முடியும்? அவ்வாறெனில் அத்திராவிடமொழியின் எழுத்துகள் யாவை? அதன் சொற் பெருக்கம் யாவை? ஒன்றுமில்லையே. எனவே, தமிழ்க்குடும்ப மொழிகளைத் தமிழின் சேய்மொழிகள் என்னும் உண்மையை மறைத்து, இல்லாத் திராவிடத்தின் சேய்களாகவும் தமிழுக்கும் குடும்ப மொழிகளுக்கும் உள்ள தாய் சேய் உறவைத் திரித்து, உடன்பிறப்புமொழிளாகவும் கூறுவது தவறெனலாம்.