
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தொடர்ச்சி)
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2
மூலத் திராவிட மொழி என்னும் கதை
தமிழின் தாய்மையையும் முதன்மையும் தொன்மையையும் ஏற்க மனமில்லாத தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர். அவர்கள் தமிழில் இருந்து பிற மொழிகள் பிறந்த உண்மையை மறுத்துக் கதை அளக்கின்றனர். அதே நேரம், சிலர் தமிழின் தாய்மையை மறுக்கவும் இயலாமல் ஒத்துக்கொள்ளவும் மனமின்றி மூலத் திராவிட மொழி என்னும் கதையை அளக்கின்றனர். “திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியை மூலத் திராவிடம் அல்லது தொல் திராவிடம் எனலாம். அதிலிருந்தே தமிழ், தெலுங்கு முதலான மொழிகள் தோன்றியிருத்தல் வேண்டும்” என்று ஆய்வுரை போன்று பொய்யுரை பரப்புகின்றனர். மூலத் திராவிட மொழி என்றால் மக்கள ஏற்கவில்லையே. எனவே, தொல் தமிழ் மொழி என்றும் மூலத் தமிழ் மொழி என்றும் சொல்லிப் பார்த்தனர். எவ்வாறிருப்பினும் அது தமிழ்தானே என்றதும மீண்டும் மூலத்திராவிடமொழி என்றும் தொல் திராவிடமொழி என்றும் பிதற்றி வருகின்றனர். திராவிடம் என்பதே கற்பிதமாக இருக்கும்பொழுது தொல்திராவிடம் மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?
மொழி ஒப்பாய்வு தேவையே!
இந்த மொழியிலிருந்து இந்த மொழி தோன்றியது, இம்மொழி உயர்ந்தது, இந்த மொழி தாழ்ந்தது, இந்த மொழி மூத்தது, அந்த மொழி பிந்தையது என்பன போன்ற கருத்தாடல்கள் தவறு என்பார் உள்ளனர். தங்கள் மொழியை விடப் பிற மொழி உயர்வு என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் கூற்று இவை. எந்த மொழியையும் இழிவாகவோ தாழ்த்தியோ கூறக்கூடாதுதான். ஆனால், மொழிகளின் சிறப்புகளையும் உயர்வுகளையும் மொழியின் பண்புகளையும் நிறைகுறைகளையும் ஒப்பிடுவது தவறல்ல. மொழிகளின் ஒப்பாய்வும் தேவையானதே. எனவே, தவறான வாதங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், உலகின் உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ் இருப்பதையும் அதன் சிறப்புகளை ஏற்பதும் தவறல்ல. அவ்வாறு ஒப்பு நோக்கிப் பார்க்கும் பொழுதுதான் தமிழ் உலக மொழிகளின் தாயாகவும் அந்த முறையில் கன்னடத்தின் தாயாகவும் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
பழம் மொழிகள் பத்தின் காலம்
குமரிநாடன், கோரா தளத்தில், மொழி வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் உலகின் பழமையான பத்து மொழிகளின் காலத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.
10. அரபு மொழிக் காலம்: கிமு 100
9. ஆர்மேனியன் மொழிக் காலம்: கிமு.450
8. சமற்கிருத மொழிக் காலம்: கிமு 600
7. இலத்தீன் மொழிக் காலம் கி.மு 700
6. அராமிக்கு மொழிக் காலம்: கிமு 900
5. எபிரேய மொழிக் காலம்: கிமு.1200
4. சீன மொழிக் காலம்: கி.மு 1250
3. கிரேக்க மொழிக் காலம்: கிமு.1600
2. எகித்து மொழிக் காலம்: கிமு 3300
1. தமிழ் மொழிக் காலம்: கிமு.5000
கன்னடம் பிற்பட்ட மொழியே!
தமிழின் காலத்தை இன்னும் பழமையாகக் கூறுவோரும் உள்ளனர். எவ்வாறிருப்பினும் கன்னட மொழிக்காலம் இப்பட்டியலில் வரவில்லை.. ஏனெனில் கன்னடம் கி.பி.கால மொழியே. எனவே அது தமிழுக்குப் பிற்பட்ட மொழியே. கன்னட மொழியினர் சிலர் கன்னடத்தைத் தமிழின் தாய்மொழியாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல் என அறியலாம்.
தென்னிந்திய மொழிக் குடும்பம்
19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக அயோத்திதாசப் பண்டிதரால் குறிக்கப் பெற்றவர் பிரான்சிசு வைட்டு எல்லிசன்(Francis White Ellis). இவர்தான் 1816 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, “தென்னிந்திய மொழிக் குடும்பம்” என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர்.
இலக்குவனார் திருவள்ளுவன்
இனிய உதயம், சூலை 2025, பக்.20-22
(தொடரும்)
No comments:
Post a Comment